தலைமை நீதிபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைமை நீதிபதி அல்லது பிரதம நீதியரசர் (Chief Justice) என்று பொதுநலவாய நாடுகளிலும் ஆங்கில பொதுச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட நீதி முறைமை பயிலும் நாடுகளிலும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கு தலைமை ஏற்கும் நீதிபதி குறிப்பிடப்படுகிறார். கனடா, தென்னாபிரிக்கா, ஆங்காங், இந்தியா, இலங்கை, பாக்கித்தான், நேபாளம், அயர்லாந்து, நியூசிலாந்து, ஆத்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா, போன்ற நாடுகளின் தலைமை நீதிமன்றங்களிலும் மாகாண அல்லது மாநில உயர் நீதிமன்றங்களிலும் இவ்வாறு அழைக்கப்படுகிறார். இங்கிலாந்து மற்றும் வேல்சு, வடக்கு அயர்லாந்திலும் இதற்கு இணையான பதவி "பிரபுத் தலைமை நீதிபதி" (Lord Chief Justice) என்றும் இசுக்காட்லாந்தில் "அமர்வு நீதிமன்றத்தின் பிரபுத் தலைவர்" (Lord President of the Court of Session) என்றும் அழைக்கப்படுகிறது.

தலைமை நீதிபதியை பலவழிகளில் நியமிக்கக்கூடும் எனினும் பெரும்பாலான நாடுகளில் வழமையாக உச்ச நீதிமன்றத்தின் மிகுந்த பணிமூப்பு பெற்ற நீதிபதியே நியமிக்கப்படுகிறார். ஐக்கிய அமெரிக்காவில் இந்தப் பதவி முக்கிய அரசியல் நியமனமாக குடியரசுத் தலைவர் நாட்டின் மேலவையின் ஒப்புதலோடு அறிவிக்கிறார். சட்டமுறையில் இந்தப் பதவி ஐக்கிய அமெரிக்காவின் தலைமை நீதிபதி என்றிருந்தபோதும் பொதுவழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்றே அழைக்கப்படுகிறார்.

சில நாடுகளில் தலைமை நீதிபதி உச்ச நீதிமன்றத்தின் தலைவர் என்று அழைக்கப்படுகிறார்.

தகுதி[தொகு]

தலைமை நீதிபதி பெரும்பாலும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடையே நடைபெறும் தனிப்பட்ட உரையாடல்களுக்கு அவைத்தலைவராக விளங்குகிறார். அவர்களது சார்பாக கருத்துக்களை வெளியிடுகிறார். இருப்பினும் பல உச்ச நீதிமன்றங்களில் படிநிலை முறைமை இல்லாததால் தலைமை நீதிபதி மற்ற நீதிபதிகளை நேரடியாக கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லாதவராக இருக்கிறார். அவர்களது தீர்ப்புக்கள் உச்ச நீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகளின் தீர்ப்புக்குண்டான அதே மதிப்பு கொண்டவையே.

துணைக் குடியரசுத் தலைவர் அல்லாத பல நாடுகளில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அந்நாட்டுத் தலைவர் அல்லது தலைமை ஆளுநருக்கு அடுத்த அதிகாரநிலையில் உள்ளார். நாட்டுத் தலைவர் இறந்தாலோ பதவி விலகினாலோ அப்பதவியை ஏற்கிறார். காட்டாக கனடாவில் அந்நாட்டு தலைமை ஆளுநர் பொறுப்பாற்ற முடியாத நிலைமை ஏற்பட்டால் கனடாவின் தலைமை நீதிபதி அந்தப் பொறுப்பை ஏற்கிறார்.

சட்ட வழக்குகளன்றி நாட்டின் உயர் பதவிகளுக்கு பதவி உறுதிமொழி ஏற்க வைப்பதும் இவர்களது பணியாக அமைந்துள்ளது.

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைமை_நீதிபதி&oldid=2717492" இருந்து மீள்விக்கப்பட்டது