எட்வார்டு சார்லசு பிக்கரிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எட்வார்டு சார்லசு பிக்கரிங்
பிறப்பு(1846-07-19)சூலை 19, 1846
பொசுட்டன், மசச்சூசெட்சு
இறப்புபெப்ரவரி 3, 1919(1919-02-03) (அகவை 72)
கேம்பிரிட்சு, மசச்சூசெட்சு
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல்
அறியப்படுவதுநிறமாலை இரும விண்மீன்கள்
விருதுகள்என்றி டிரேப்பர் பதக்கம் (1888)
வால்சு பரிசு (1888)
புரூசு பதக்கம் (1908)
அரச வானியற் கழகத்தின் தங்கப் பதக்கம் (1886ம் 1901ம்.)

எட்வார்டு சார்லசு பிக்கரிங் (Edward Charles Pickering) (யூலை 19, 1846 – பெப்ரவரி 3, 1919), ஒரு அமெரிக்க வானியலாளரும் இயற்பியலாளரும் ஆவார்.[1] இவர் இன்னொரு வானியலாளரான வில்லியம் என்றி பிக்கெரிங் என்பவரின் தமையன். கார்ல் வோகல் என்பவருடன் இணைந்து பிக்கரிங், நிறமாலை இரும விண்மீன்களை முதல்முதலாகக் கண்டுபிடித்தார். இவர் இயற்பியச் செயல்முறைகளின் கூறுகள் (Elements of Physical Manipulations) (2 தொகுதி, 1873–76) என்னும் நூலை எழுதியுள்ளார்.

வரலாறு[தொகு]

பிக்கரிங் பொசுட்டன் இலத்தீன் பள்ளியில் படித்தார். 1865ல் ஆவார்டில் அறிவியல் இளநிலைப் பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற பின்னர் பிக்கரிங் மசச்சூசெட்சு தொழில்நுட்ப நிறுவனத்தில் இயற்பியல் கற்பித்தார்.[2] பின்னர், 1877ல் ஆவார்டு கல்லூரி வானாய்வகத்தின் பணிப்பாளராகப் பொறுப்பேற்று 1919ல் இறக்கும்வரை அங்கே பணிபுரிந்தார். அங்கே பணிபுரிந்த காலத்தில் ஒளிப்படங்கள் மூலம் விண்மீன் நிறமாலைகளைச் சேகரிப்பதில் பெரும் முன்னேற்றங்களை ஏற்படுத்தினார்.

ஆவார்டில் ஆன்னி ஜம்ப் கெனான், ஃஎன்றியேட்டா சுவான் லீவிட், அந்தோனியா மோரி என்பவர்கள் உள்ளிட்ட 80 பெண்களைப் பணிக்கு அமர்த்தினார். இவர்கள் ஆவார்டு கல்லூரி வானாய்வகத்தில் பல முக்கிய கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தினர்.[3] பிக்கரிங்கினால் வெளியிடப்பட்ட, செஃபியட்டுக்கான காலமுறை மின்னொளித் தொடர்பு குறித்த லேவிட்டின் கண்டுபிடிப்பு,[4] அண்டத் தூரங்கள் குறித்த தற்கால விளக்கங்களுக்கான அடிப்படையாக அமைந்தது. 1876ல் உருவான அப்பலாச்சியன் மலைச் சங்கத்தின் இணை நிறுவனர்களில் இவரும் ஒருவர்.

கண்டுபிடிப்புக்கள்[தொகு]

பெரிய பட்டகம் ஒன்றை ஒளிப்படத் தகட்டுக்கு முன்னே வைப்பதன் மூலம், பல விண்மீன்களின் நிறமாலைகளை ஒரே நேரத்தில் ஒளிப்படம் எடுக்கும் முறையொன்றை 1882ல், பிக்கரிங் உருவாக்கினார்.[5] இவர், வில்லியமினா பிளெமிங் என்பவருடன் சேர்ந்து, எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட நிறமாலை வகுப்புக்களுக்கான வகைப்பாட்டு முறை ஒன்றை வடிவமைத்தார். முதலில் ஆவார்டு விண்மீன் வகைப்பாடு என அறியப்பட்ட இம்முறை என்றி டிரேப்பர் விபரப்பட்டியலுக்கு அடிப்படையாக அமைந்தது.

ஆவார்டு கல்லூரி வானாய்வகம் உலகம் முழுவதிலும் அறியப்படுவதற்கும், மதிக்கப்படுவதற்கும் காரணமானவர் பிக்கரிங் ஆவார். இது இன்றும் மதிக்கப்படுகின்ற ஒரு வானாய்வகமாகவும், திட்டமாகவும் விளங்குகிறது.[6]

தகைமைகள்[தொகு]

விருதுகளும் தகைமைகளும்

 • அமெரிக்க கலை, அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினர் (1867)[7]

இவர் பெயரால் வழங்குபவை

 • நிலாவில் உள்ள குழிப்பள்ளம் ஒன்று பிக்கரிங் ((நிலாக்)குழிப்பள்ளம் என வழங்கப்படுகிறது.
 • செவ்வாயில் உள்ள குழிப்பள்ளம் ஒன்று பிக்கரிங் (செவ்வாய்க்)குழிப்பள்ளம் என வழங்கப்படுகிறது.
 • சிறுகோள் 0ன்று 784 பிக்கரிங்கியா என வழங்கப்படுகிறது.

(இவை எல்லாம் இவரது உடன்பிறப்பான வில்லியல் என்றி பிக்கரிங்கின் பெயரோடு இணைந்து வழங்கப்படுகின்றன)


மேற்கோள்கள்[தொகு]

 1. "PICKERING, Edward Charles". The International Who's Who in the World. 1912. p. 856.
 2. Daintith, John. (1999) A Dictionary of Scientists. Oxford: Oxford University Press.
 3. The 19th century women who catalogued the cosmos, Michelle Starr, Cnet News, March 7, 2016
 4. Miss Leavitt in Pickering, Edward C. "Periods of 25 Variable Stars in the Small Magellanic Cloud" Harvard College Observatory Circular 173 (1912) 1–3.
 5. Bunch, Bryan H. and Hellemans, Alexander (2004) The History of Science and Technology: A Browser's Guide to the Great Discoveries, Inventions, and the People Who Made Them, from the Dawn of Time to Today. Boston: Houghton Mifflin.
 6. Clark, David H. and Clark, Matthew D. H. (2004). Measuring the Cosmos: How Scientists Discovered the Dimensions of the Universe. New Brunswick, N.J: Rutgers University Press.
 7. "Book of Members, 1780–2010: Chapter P". American Academy of Arts and Sciences. http://www.amacad.org/publications/BookofMembers/ChapterP.pdf. பார்த்த நாள்: 7 April 2011. 
 8. "Miscellaneous". Annual Report of the Board of Regents of the Smithsonian Institution, Part 1. Smithsonian Institution, Board of Regents. 1890. பக். 192. https://books.google.com/books?id=-flAAQAAMAAJ&pg=PA192. 
 9. "Henry Draper Medal". National Academy of Sciences. http://www.nasonline.org/about-nas/awards/henry-draper-medal.html. பார்த்த நாள்: 19 February 2011.