உஸ்மானாபாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உஸ்மானாபாத் (உஸ்மான்-அபாத் என உச்சரிக்கப்படுகிறது) என்பது இந்திய மாநிலமான மகாராட்டிராவில் உள்ள உஸ்மனாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி மன்றமாகும். ஐதராபாத்தின் கடைசி ஆட்சியாளரான மிர் ஒஸ்மான் அலிகானிடமிருந்து உஸ்மானாபாத் அதன் பெயரைப் பெற்றது. உஸ்மானாபாத் நகரம் நிர்வாக தலைமையகம் ஆகும்.

வரலாறு[தொகு]

உஸ்மானாபாத் நகரம் அதன் பெயரை ஐதராபாத்தின் கடைசி ஆட்சியாளரான 7 வது நிஜாம் மிர் உஸ்மான் அலிகான் என்பவரிடமிருந்து பெற்றது. இதில் இப்பகுதி 1947 ஆம் ஆண்டு வரை நிசாம்களின் ஆட்சி பகுதியாக இருந்தது. உஸ்மானாபாத்தின் வரலாறு இராமாயண சகாப்தத்திற்கு முந்தையதாக கருதப்படுகின்றது. வரலாற்று சான்றுகளின்படி இந்த மாவட்டத்தை மௌரியர்கள், சடவஹான்கள், ராட்டிரகுட்டாக்கள் மற்றும் யாதவர்கள் ஆட்சி செய்துள்ளனர். ஆரம்ப நூற்றாண்டுகளில் இந்த நகரம் இந்து சாளுக்கியர்கள் மற்றும் தேவகிரி யாதவர்களுக்கு உரித்தானதாக இருந்தது. பின்னர் பஹ்மானி மற்றும் பிஜாப்பூர் இராச்சியங்களின் ஒரு பகுதியாக மாறியது.

முன்பு உஸ்மானாபாத்தை முகலாயர்கள், பஹ்மானி, நிஜாம்கள் மற்றும் ஆதில் ஷா இராச்சியங்களும் ஆட்சி செய்தன. ஐதராபாத்தின் நிஜாமின் ஆட்சிக்கு முன்பு இப்பகுதி முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது. நிஜாம் ஆட்சியின் கீழ் இருந்ததால் 1947 ஆம் ஆண்டில் இந்தியாவின் பிற பகுதிகள் சுதந்திரமானபோது உஸ்மானாபாத் மாவட்டம் சுதந்திரத்தை பெறவில்லை. இருப்பினும் விரைவில் 1948 ஆம் ஆண்டில் ஐதராபாத் மாநிலம் சுதந்திர இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. மேலும் இந்த மாவட்டம் அப்போதைய மும்பை மாவட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது. 1960 ஆம் ஆண்டில் மகாராட்டிர மாநிலம் உருவானபோது இது மகாராட்டிர மாநிலத்தின் ஒரு பகுதியாக மாறியது.

புவியியல்[தொகு]

உஸ்மானாபாத் நகரம் 653 மீட்டர் (2,142 அடி) உயரத்தில் உள்ளது. உஸ்மானாபாத் தெஹ்சிலின் மேற்கு மத்திய பகுதியில் உஸ்மானாபாத் நகரம் அமைந்துள்ளது. துல்ஜாப்பூர் , பூம் , பராண்டா , வாஷி , மற்றும் கலாம்ப் ஆகியன அருகிலுள்ள நகரங்கள் ஆகும். போகவதி நதி நகரம் வழியாக பாய்ந்து சோலாப்பூர் மாவட்டத்தில் மொஹோல் அருகே சினா நதியை சந்திக்கிறது.

புள்ளிவிபரங்கள்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பில் உஸ்மானாபாத் நகரில் 106,644 மக்கள் வசிக்கின்றனர். மொத்த மக்கட் தொகையில் 41,982 (52.1%) ஆண்களும், 38,643 (47.9%) பெண்களும் உள்ளனர். மேலும் ஆயிரம் ஆண்களுக்கு 920 பெண்கள் என்ற பாலின விகிதம் காணப்படுகின்றது.[1] 2001 ஆம் ஆண்டில், உஸ்மானாபாத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 74% ஆக இருந்தது. இது தேசிய சராசரியை விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 80% வீதமாகவும், பெண்களின் கல்வியறிவு 67% ஆகவும் இருந்தது. 2001 ஆம் ஆண்டில் உஸ்மானாபாத்தில், 14% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள்.[2]

யெட்ஷி ராம்லிங் வனவிலங்கு சரணாலயம்[தொகு]

யெட்ஷி ராம்லிங் வனவிலங்கு சரணாலயம் பாலகாட் வரம்பில் உஸ்மானாபாத் நகரத்திற்கு அருகிலுள்ள யெட்ஷி, வாட்கான் மற்றும் பனஸ்கான் கிராமங்களில் அமைந்துள்ளது. வறண்ட இலையுதிர் காடுகள் இப்பகுதியை ஆக்கிரமித்துள்ளன. வனவிலங்கு இனங்களில் இந்தியச் சிறுமான், கழுதைபுலி, ஓநாய், காட்டு கரடி, நரி, முயல்கள் மற்றும் மயில் ஆகியவை அடங்கும். 100 க்கும் மேற்பட்ட இனங்கள் காணப்படுகின்றன. அக்டோபர் முதல் சூன் வரை பார்வையிட சிறந்த நேரம்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உஸ்மானாபாத்&oldid=2868226" இருந்து மீள்விக்கப்பட்டது