உருட்டி கொல்லல் வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உருட்டி கொல்லல் வழக்கு (urutti kola case), என்பது கேரளத்தில் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட உதயகுமார் எனும் ஒரு இளைஞனின் கொலையைப் பற்றிய வழக்கு ஆகும்.[1] இக்கொலை நடந்த முறையைக் கொண்டு உருட்டி கொல கேஸ் என்று இது கேரளத்தில் பேசப்பட்டது.

கைதும், கொலையும்[தொகு]

கேரளத்தின், திருவனந்தபுரம் கீழாரன்னூர் பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவர். இவர் 2005 செப்டம்பர் 27 அன்று மதியம் அவரது நண்பர் சுரேஷ்குமாருடன் திருவனந்தபுரம் ஸ்ரீகண்டேஸ்வரன் பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். திருட்டு வழக்குகளில் தொடர்புடைய சுரேஷ்குமாருடன் இருந்ததால் அவரோடு சேர்த்து சந்தேகத்தின் பேரில் உதயகுமாரையும் போர்ட் காவல் நிலையத்துக்கு காவலர்கள் இருவர் அழைத்துச் சென்றனர்.

உதயகுமாரின் தாயார் ஓணம் பண்டிகைக்கு புதுத்துணிகள் எடுப்பதற்காக அவருக்கு கொடுத்த 4000 ரூபாய் பணத்தை வைத்திருந்தார். இந்தப் பணத்தை எங்கே இருந்து திருடினாய் என காவல் நிலையத்தில் காவலர்கள் அடித்து விசாரித்தனர். இவ்வாறு விசாரிக்கும்போது உதயகுமாரை ஒரு மேசை மீது படுக்கவைத்து, அவரது தொடைப் பகுதியில் இரும்பு உருளைகளை வைத்து உருட்டி துண்புறுத்தியுள்ளனர். இதில் இரத்தநாளங்கள் வெடித்து உயிர் இழந்தார் உதயகுமார்.

காவல் நிலைய மரணம் என்பதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. கோட்டாச்சியர் விசாரணையில், உதயகுமாரை அழைத்துவந்து விசாரித்தபோது நெஞ்சுவலியில் அவர் இறந்துவிட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு சென்ற கோட்டாச்சியர் மோகன்குமார். அங்கு உதயகுமாரின் உடலை ஆராய்ந்து பார்த்தார். அப்போது அவரது தொடைப்பகுதியில் கருஞ்சிவப்பு நிறத்தில் சிவந்திருந்திருப்பதைப் பார்த்தார். காவலர்கள் அதைத் தொடாதீர்கள் அது சோரியாசிஸ் நோய் என பயமுறுத்தியதை பொறுட்படுத்தாமல் தொட்டுப் பார்த்து ஐயத்தை உறுதிப்படுத்திக் கொண்டார். பின்னர் பிணக் கூறாய்வை காணொளி எடுக்கவும், சிறப்பு மருத்துவர் குழு மூலம் பிணக்கூறாய்வு செய்யவும் உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக விரிவான அறிக்கையையும் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு அனுப்பினார்.

வழக்கு[தொகு]

2005 செப்டம்பர் 30ஆம் நாள் மேற்கொள்ளப்பட்ட பிணக் கூறாய்வு முடிவில் இது கொலை என உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து அக்டோபர் 3ஆம் நாள் ஸ்ரீகுமார், ஜிதுகுமார் ஆகியோர் காவல்துறை உயரதிகாரி மனோஜ் ஆப்ரகாம் முன்பு சரணடைந்தனர். அக்டோபர் 5ஆம் நாள் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்டனர். அக்டோபர் 10ஆம் நாள் மூன்று காவல் துறை அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் நான்கு மாதங்களில் அவர்கள் மீண்டும் பணிக்கு வந்துவிட்டனர். இவ்வழக்கில் 2006 பிப்ரவரி 13ஆம் நாள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.[2] காவல் துறைக்கு எதிரான இந்த வழக்கில், அரசுத் தரப்பு சாட்சிகள் பிறழ்சாட்சிகளாயினர். இதனையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரணை கோரி உதயகுமாரின் தாயார் பிரபாவதி அம்மாவின் மனுவை கேரள நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றியது.[3]

தீர்ப்பு[தொகு]

2007 அக்டோபர் 17ஆம் நாள் சிபிஐ முதல்கட்ட விசாரணையை தொடங்கியது. கேரள உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் உதயகுமாரின் தாயார் பிரபாவதி அம்மாவுக்கு பத்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க 2016 மார்ச் 31ஆம் நாள் உத்தரவிடப்பட்டது. 2018 சூலை 24ஆம் நாள் இந்த வழக்கில் ஐந்து பேர் குற்றவாளிகள் என கூறிய சிறப்பு நீதிமன்றம், 25 ஆம் தேதி காவல்துறையைச் சேர்ந்த இரு காவலர்களுக்கு தூக்குத்தண்டனையும், இரு ஓய்வுபெற்ற எஸ்.பி.க்கள் உட்பட மூவருக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.[4]

பரவலர் பண்பாட்டில்[தொகு]

கேரளத்தில் பிறந்தவரும் மராத்திய திரையுலகின் முதனைமையான திரைக்கதை எழுத்தாளரும், இயக்குநருமான ஆனந்த் மகாதேவன், பிரபாவதி அம்மாவின் போராட்டக் கதையை ‘மை காட்: கிரைம் நம்பர் 103/2005’ என்ற தலைப்பில் திரைப்படமாக எடுத்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]