உள்ளடக்கத்துக்குச் செல்

உடுவில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலய முகப்பு
மீனாட்சி
சுந்தரேசுவரர்

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதியில் உள்ள உடுவில் கிராமத்தில் அமைந்துள்ளது . இது பொதுவாக உடுவில் அம்மன் கோயில் எனவும் அறியப்படுகிறது.

வரலாறு[தொகு]

ஏறக்குறைய தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன் உடுவில் கிராமத்தில் கட்டுவயல் அல்லது வேம்படிவயல் என் அழைக்கப்பட்ட வயற்பரப்பிலே அல்லிக்கிழங்கு அகழ்ந்தெடுப்பதற்காக வயல் உழும்பொழுது கலப்பை ஒரு பெரிய கல்லிலே பட்டபோது அதிலிருந்து உதிரம் பெருகியதால் உழவு செய்தவர் மயக்கமடைந்தார். அப்போது "நான் கண்ணகை அம்மன். என்னை எடுத்து வழிபாடு செய்" என ஓர் அசரீரி ஒலித்தது. அப்போது அவர் மயக்கம் தெளிந்து அச்சிலையை எடுக்க அது பெரிய முண்டாகிருதியாகக் காணப்பட்டதால் அந்த இடத்திலேயே அதை வைத்து சிறு கோயில் கட்டி வழிபாடு செய்து வந்தனர். கண்ணகை அம்மன் வந்து தங்கிய இடங்களைக் குறிப்பிடும் பாடலில் அங்கணாக் கடவை முதல் உடுவில் உட்பட பல ஊர்கள் உள்ளமை இவ்வாலயத்தின் பழமையைப் புலப்படுத்துவதாக அமைகின்றது.

சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் கும்பகோணத்திலிருந்து வந்த இராமர் என்ற அந்தணரால் இத்தலத்தில் மீனாட்சி அம்மன் பிரதிட்டை செய்யப்பட்டது. இவரது வழித்தோன்றல்களால் பராமரிக்கப் பட்டுவரும் இக்கோயிலில் ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் சோமசுந்தரப் பெருமானுக்குக் கோயில் அமைக்கப்பட்டது. தொடர்ந்து பரிவார மூர்த்திகள், திருமஞ்சனக்கிணறு, மடைப்பள்ளி உட்பட ஏனைய திருப்பணிகள் செய்யப்பட்டன.

திருவிழா[தொகு]

இக்கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை சித்திரா பௌர்ணமியைத் தீர்த்தமாகக் கொண்டு 11 நாட்கள் திருவிழா நடைபெறும். பத்தாம், பதினோராம் நாட்களில் முறையே தேர், தீர்த்தத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.