இலத்தூர் இரயில் தாக்குதல்
இலத்தூர் இரயில் தாக்குதல் (Elathur train attack) 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியன்று இந்தியாவின் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் இலத்தூர் இரயில் நிலையம் அருகே ஆலப்புழா-கண்ணூர் விரைவு வண்டியின் டி1 என்று பெயரிடப்பட்ட பெட்டிக்கு அடையாளம் தெரியாத நபர் தீ வைத்த தாக்குதல் நிகழ்வைக் குறிக்கிறது.[1] இந்த சம்பவத்தில் ஒரு குழந்தை உட்பட மூன்று பயணிகள் உயிரிழந்தனர் மற்றும் ஒன்பது பயணிகள் தீக்காயம் அடைந்தனர். [2]
சம்பவம்
[தொகு]2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியன்று உள்ளூர் நேரப்படி இரவு 9:30 மணியளவில், ஆலப்புழா-கண்ணூர் விரைவு வண்டியில் முன்பதிவு செய்யப்பட்ட அனுமதிச்சீட்டு இல்லாமல் ஏறிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர், எரியக்கூடிய திரவத்தைப் பயன்படுத்தி டி1 பெட்டிக்கு தீ வைத்தார். சில பயணிகள் சரியான நேரத்தில் தீயை அணைத்து, பயணிகள் அடுத்த பெட்டிகளுக்கு விரைவாக செல்ல உதவினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மட்டனூரைச் சேர்ந்த பயணிகள், தீயில் இருந்து தப்பிக்க ஓடும் இரயிலில் இருந்து கீழே குதித்ததாக கூறப்படுகிறது. தீ விபத்தில் இருந்து தப்பிக்க ஓடும் இரயிலில் இருந்து குதித்து உயிரிழந்ததாகக் கூறப்படும் இலத்தூர் அருகே இரயில் தண்டவாளத்தில் இருந்து ஒரு குழந்தை உட்பட மூன்று பயணிகளின் சடலங்களை காவல்துறையினர் மீட்டனர். [3]
விசாரணை
[தொகு]தீவைத்தவரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் இதுவென சந்தேகிக்க வலுவான காரணங்கள் இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர். இரயில் இலத்தூர் இரயில் நிலையம் அருகே உள்ள கோரப்பூலா பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது அந்த பெட்டியில் இருந்த தீவைத்த வாலிபருக்கும் மற்ற பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அந்த வாலிபர் தனது கையில் வைத்திருந்த திரவத்தை தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள் மீது திடீரென ஊற்றி அதன் பின் நெருப்பையும் பற்ற வைத்துள்ளார். அந்தப் பெட்டியில் பயணம் செய்த பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த போது இரயில் நின்றுள்ளது. இதனை பயன்படுத்தி தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர் தப்பி ஓடி உள்ளார்
அருகில் இருந்த இடத்தில் இருந்து மூடிய சுற்று தொலைக்காட்சி புகைப்படக் கருவியில் இரு சக்கர வாகனத்தில் தீவைத்த நபர் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடுவது கண்டறியப்பட்டது. சம்பவம் நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று செய்திகள் வெளியாகின.[4]
தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. தாக்குதல் நடத்தியவர் குறிப்பிட்ட நபரை குறிவைத்தாரா அல்லது பயணிகள் குழுவை குறிவைத்தாரா என்பதையும் காவல்துறையினரால் உறுதிப்படுத்த முடியவில்லை. அதே நேரத்தில், இரயில்வே பாதுகாப்புப் படை வட்டாரங்கள் கூறுகையில், குழுவில் ஒரு பெண் பயணியை குறிவைத்த திட்டம் இது என்று சந்தேகம் தெரிவித்த சாட்சிகள் உள்ளனர் [5] என்று தெரிவித்தனர்.
தாக்குதலில் ஈடுபட்டவர் தீப்பிடிக்கக்கூடிய திரவத்தை தரையில் ஊற்றி தீ வைப்பதாக பெட்டியில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். தீக்காயங்கள் ஏற்பட்டு கோழிக்கோடு நகரம் மற்றும் கொயிலாண்டியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் ஒன்பது பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிர விசாரணைக்கு ஆதரவாக பெரும்பாலான பயணிகளின் வாக்குமூலங்களை காவல்துறையும் இரயிவே பாதுகாப்பு படையினரும் பதிவு செய்தனர். தீவைத்தவர் எரியக்கூடிய திரவத்தை எடுத்துச் செல்ல பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஒரு பையையும் அவர்கள் மீட்டனர். தாக்குதலை கட்டவிழ்த்துவிட, எரியக்கூடிய திரவம், பெட்ரோல் என இரண்டு பாட்டில்கள் இருந்தன என்று காவல்துறையினர் தெரிவித்தனர். [6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kerala train attack: Suspect Shahrukh Saifi brought to Kozhikode after vehicles carrying him suffer breakdowns" (in en). ANI News. https://www.aninews.in/news/national/general-news/kerala-train-attack-suspect-shahrukh-saifi-brought-to-kozhikode-after-vehicles-carrying-him-suffer-breakdowns20230406093728/.
- ↑ "Shahrukh Saifi, key suspect, nabbed in Kerala train attack case: What we know so far". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/kozhikode/kerala-train-attack-key-suspect-nabbed-in-maharashtra-what-we-know-so-far-about-the-case/articleshow/99260319.cms?from=mdr.
- ↑ "Kerala train attack: Suspect Shahrukh Saifi brought to Kozhikode after vehicles carrying him suffer breakdowns" (in en). ANI News. https://www.aninews.in/news/national/general-news/kerala-train-attack-suspect-shahrukh-saifi-brought-to-kozhikode-after-vehicles-carrying-him-suffer-breakdowns20230406093728/.
- ↑ "Kerala police team with Elathur train arson attack case suspect reach Kozhikode". The New Indian Express. https://www.newindianexpress.com/states/kerala/2023/apr/06/kerala-police-team-with-elathur-train-arson-attack-case-suspect-reach-kozhikode-2563256.html.
- ↑ "IB, NIA confirm terror links behind Kozhikode train fire attack". English.Mathrubhumi. 8 April 2023. https://english.mathrubhumi.com/news/kerala/ib-nia-confirm-terror-links-behind-kozhikode-train-fire-attack-1.8461865.
- ↑ "Kerala police team with Elathur train arson attack case suspect reach Kozhikode". The New Indian Express. https://www.newindianexpress.com/states/kerala/2023/apr/06/kerala-police-team-with-elathur-train-arson-attack-case-suspect-reach-kozhikode-2563256.html.