இறுக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இறுக்கி அல்லது சுருக்கி (sphincter) என்பது உடலில் காணப்படும் குழலியை அல்லது உடற்பாதையை அல்லது சில குறிப்பிட்ட பகுதிகளைச் சுற்றி அமைந்துள்ள வட்டத் தசைகளிலான ஒரு அமைப்பாகும், இயல்பான உடற்செயற்பாட்டு நிலையின் போது இவை உடற்பாதையைச் சுருங்கி விரியச் செய்கின்றன. மாந்த உடலில் 50க்கும் மேற்பட்ட இறுக்கிகள் உள்ளன; இவற்றில் சில நுண்ணோக்கி மூலமே நோக்கலாம், குறிப்பாக மயிர்த்துளைக்குழாய்முன் இறுக்கிகள்.[1]

தொழில்[தொகு]

இறுக்கிகள் உடற்பாதையில் ஒருபகுதியில் இருந்து மற்றைய பகுதிக்கு நீர்மங்களின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகின்றன; உதாரணமாக, கீழ் உணவுக்குழாய் இறுக்கி உணவையும் நீரையும் இரைப்பைக்குள் செல்லவிடுகின்றது, இது உணவு உட்கொள்ளும் நேரத்திலேயே விரிவடைகின்றது. உணவு உட்கொள்ளலிலும் பார்வையிலும் அன்றாடம் இறுக்கிகள் செயற்படுகின்றன. உணவு விழுங்கப்படும் சமயத்தில் மூச்சுக்குழல்வாய்மூடி வாதனாளியை மூடுவதனால் உணவானது மூச்சுக்குழாயை அடைவதில்லை, இது நுரையீரலுக்குள் நீர்மங்களோ பிறபொருட்களோ நுழைவதைத் தடுக்கின்றது.

வகைப்பாடு[தொகு]

இறுக்கிகள் உடற்கூற்றியல் இறுக்கி, செயற்பாட்டு இறுக்கி என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

  • உடற்கூற்றியல் இறுக்கியில் சிறப்பாக அதனைச்சுற்றி வட்டமாக தசைப்படலம் காணப்படும், இறுக்கத்தில் இதுவே உதவுகின்றது.
  • செயற்பாட்டு இறுக்கிக்கு அதனைச் சுற்றவர தசைப்படலம் இருப்பதில்லை, இயல்பாக உள்ள தசையைப் பயன்படுத்தி அவை சுருங்குகின்றன.

இறுக்கிகள் இச்சையுடன் அல்லது இச்சையின்றி (தன்னிச்சையாக) இயங்கக்கூடியவை.

  • இச்சை இறுக்கிகள் மெய்யிய நரம்பு மண்டலம் மூலம் இயங்குகின்றன.
  • தன்னிச்சை இறுக்கிகள் தன்னாட்சி நரம்பு மண்டலம் மூலம் தூண்டப்படுகின்றன.

உடலில் காணப்படும் சில இறுக்கிகள்[தொகு]

கடைச்சிறுகுடல்-குருட்டுக்குடல் தடுப்பிதழும் இறுக்கியும்
  • விழிப்பாவை இறுக்கி, அல்லது விழிப்பாவை சுருக்குத்தசை கண்ணில் கதிராளியில் காணப்படுகின்றது.
  • கட்குழி சுற்றுத்தசை கண்ணைச் சுற்றிக் காணப்படும்; கண் இமைகளை மூடுகின்றது.
  • வாய்க்குழி சுற்றுத்தசை, வாயைச் சுற்றி அமைந்துள்ளது.
  • மேல் உணவுக்குழாய் இறுக்கி (மேற்கள இறுக்கி)
  • கீழ் உணவுக்குழாய் இறுக்கி (கீழ்க்கள இறுக்கி)
  • புறவாயில் இறுக்கி இரைப்பையின் முடிவிடத்தில் அமைந்துள்ளது.
  • ஓடியின் இறுக்கி முன்சிறுகுடலில் அமைந்துள்ளது; கல்லீரல், கணையத்தில் இருந்து சுரக்கப்படும் நீர்மங்களைக் கட்டுப்படுத்துகின்றது.
  • சிறுநீர் இறக்குக் குழாய் இறுக்கி, சிறுநீர் வெளியேறுதலைக் கட்டுப்படுத்த உதவுகின்றது.
  • குதத்தில் உட்குத இறுக்கி, வெளிக்குத இறுக்கி என இரண்டு இறுக்கிகள் உள்ளன, இவை மலம் வெளியேறுவதைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இவற்றுள் உட்குத இறுக்கி ஒரு தன்னிச்சை இறுக்கியாகும், ஆனால் வெளிக்குத இறுக்கி இச்சையானது.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இறுக்கி&oldid=3583381" இலிருந்து மீள்விக்கப்பட்டது