இருபெயரொட்டுப் பண்புத்தொகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறப்புப் பெயர் முன்னும் பொதுப் பெயர் பின்னும் நின்று இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு தொக்கி வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகை ஆகும்

எடுத்துக்காட்டு: மார்கழித் திங்கள், சாரைப்பாம்பு.

இருபெயரொட்டுப் பண்புத்தொகை பண்புப் பெயர் இடம் பெறாத பண்புத் தொகை ஆகும். பண்புப் பெயர்ச் சொற்களுடன் வேறு சொற்கள் சேர்ந்து வந்து ஆகிய எனும் சொல் ‌மறைந்து வருவது பண்புத் தொகை எனப்படும். இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பது பொதுப் பெயரோடு சிறப்புப் பெயரோ, சிறப்புப் பெயரோடு பொதுப் பெயரோ சேர்ந்தமைந்து ஒரு பொருளை உணர்த்துவதாகும். பண்புத் தொகை போல இங்கும் “ஆகிய‌” எனும் சொல் மறைந்து ‌நிற்கும். சிறப்புப் பெயர்ச் சொற்கள் பண்புப் பெயர்ச் சொற்கள் ஆகாவிடினும் பண்புத் தொகை போல “ஆகிய” எனுஞ்சொல் மறைந்து நிற்றலால் இது இருபெ‌யரொட்டுப் பண்புத் தொகை எனப்பட்டது.

எடுத்துக்காட்டுகள்:

பலா மரம் - பலா என்பது சிறப்புப் பெயர்ச் சொல், மரம் என்பது பொதுப் பெயர்ச் சொல் (பலாவாகிய மரம் - ஆகிய மறைந்து வந்தது) சாரைப்பாம்பு - சாரையாகிய பாம்பு. தமிழ்மொழி

வாழைப்பழம்

தைப்பொங்கல்

எடுத்துக்காட்டுகள்
சிறப்புப் பெயர் பொதுப்பெயர் இருபெயரொட்டுப் பண்புத்தொகை
மார்கழி, தை, ஏப்ரல், மே மாதம் மார்கழிமாதம், தைமாதம், ஏப்ரல்மாதம், மேமாதம்
மார்கழி திங்கள் மார்கழித் திங்கள்
காலை, மாலை, பகல், இரவு, கேள்வி நேரம் காலைநேரம், மாலைநேரம், பகல்நேரம், இரவுநேரம்,கேள்விநேரம்
சாரை பாம்பு சாரைப்பாம்பு
தமிழ் மொழி தமிழ்மொழி
வாழை, பலா பழம் வாழைப்பழம், பலாப்பழம்
சதுரம், வட்டம் வடிவம் சதுரவடிவம், வட்டவடிவம்
சிவப்பு, பச்சை நிறம் சிவப்பு நிறம், பச்சை நிறம்
பலா, வாழை, கொய்யா, தென்னை, பனை, புளி, வேம்பு மரம் பலாமரம், வாழைமரம், கொய்யாமரம், தென்னைமரம், பனைமரம், புளியமரம், வேப்பமரம்
வறுமை, எல்லை கோடு வறுமைக்கோடு, எல்லைக்கோடு
கை, குடிசை, நெசவு, உழவு தொழில் கைத்தொழில், குடிசைத்தொழில், நெசவுத்தொழில், உழவுத்தொழில்
முல்லை, மல்லிகை, தாமரை, ரோஜா, சாமந்தி, செம்பருத்தி, அரளி, கார்த்திகை பூ முல்லைப்பூ, மல்லிகைப்பூ, தாமரைப்பூ, ரோஜாப்பூ, சாமந்திப்பூ, செம்பருத்திப்பூ, அரளிப்பூ, கார்த்திகைப்பூ
உயிர், மெய் எழுத்து உயிரெழுத்து, மெய்யெழுத்து [1]
வாளை மீன் வாளை மீன் [2]
இமயம் மலை இமயமலை
விநாயகர், முருகன், வள்ளுவர், சிவன், புத்தர் பெருமான் விநாயகப் பெருமான், முருகப் பெருமான், வள்ளுவப் பெருமான், சிவபெருமான், புத்தபெருமான்
வரதராஜர்/வரதராஜன் பெருமாள் வரதராஜப் பெருமாள்
துர்க்கை, காளி, கண்ணகி, மீனாட்சி, நாகபூஷணி அம்மன் துர்க்கையம்மன், காளியம்மன், கண்ணகியம்மன், மீனாட்சியம்மன், நாகபூஷணியம்மன்
ஆறுமுகம், சபாபதி நாவலர் ஆறுமுக நாவலர், சபாபதி நாவலர்
குமாரசாமி, மயில்வாகனம் புலவர் குமாரசாமிப் புலவர், மயில்வாகனப் புலவர்
மகேஸ்வரன், குமாரசுவாமி குருக்கள் மகேஸ்வரக் குருக்கள், குமாரசுவாமிக் குருக்கள்
விநாயகர், இராசநாயகம், சிதம்பரநாதன் முதலியார் விநாயக முதலியார்[3], இராசநாயக முதலியார், சிதம்பரநாத முதலியார்
கந்தன், மன்மதன் (காமன்) வேள் கந்தவேள், மன்மதவேள் (காமவேள்)

மேற்கோள்கள்[தொகு]