இராபர்ட் கோச்சார்யன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இராபர்ட் செட்ராகி கோச்சார்யன் ( ஆங்கிலம் : Robert Kocharyan) 1954 ஆகஸ்ட் 31 அன்று பிறந்த இவர் ஒரு ஆர்மீனிய அரசியல்வாதி ஆவார், இவர் 1998 மற்றும் 2008 க்கு இடையில் ஆர்மீனியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். முன்னதாக 1994 முதல் 1997 வரை நாகோர்னோ-கராபாக் குடியரசுத் தலைவராகவும், 1997 முதல் 1998 வரை ஆர்மீனியாவின் பிரதமராகவும் இருந்தார் .

இவரது ஆட்சியில் 2001 மற்றும் 2007 க்கு இடையில், கட்டுமான ஏற்றம் காரணமாக ஆர்மீனியாவின் பொருளாதாரம் ஆண்டுதோறும் சராசரியாக 12% வளர்ச்சியடைந்தது.[1] சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆர்மீனிய வரலாற்றில் மோசமான இரண்டு நிகழ்வுகளை இவர் எதிர்கொண்டார்: 1999 ஆர்மீனிய நாடாளுமன்ற துப்பாக்கிச் சூடு மற்றும் 2008 குடியரசுத் தலைவர் தேர்தல் போராட்டங்களின் போது பத்து பேர் கொல்லப்பட்டது. இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் அவர் எதிர்க்கட்சியால் குறிப்பாக ஆர்மீனியாவின் முதல் குடியரசுத் தலைவராக இருந்த இலெவன் டெர்-பெத்ரோசியன் மற்றும் அவரது கட்சியினரால் குற்றம் சாட்டப்பட்டார்.

1998 மற்றும் 2003 குடியரசுத் தலைவர் தேர்தல்கள் இரண்டும், இரண்டு சுற்றுகளாக நடத்தப்பட்டன. எதிர்க்கட்சி வேட்பாளர்கள் ஏற்படுத்திய பிரச்சனை காரணமாக அவர்கள் சர்வதேச பார்வையாளர்களால் விமர்சிக்கப்பட்டனர். கோச்சார்யனும் அவரது குடும்பத்தினரும் அவர் பதவியில் இருந்த காலத்தில் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒரு செல்வத்தையும் விரிவான வணிக நலன்களையும் குவித்தனர்.[2]

சுயசரிதை[தொகு]

இராபர்ட் கோச்சார்யன் அசர்பைஜானின் நாகோர்னோ-கராபாக் தன்னாட்சி மாகாணத்திலுள்ள எசுடெபனகெத்தில் பிறந்தார். அங்கு இடைநிலைக் கல்வியைப் பெற்றார், 1972 முதல் 1974 வரை சோவியத் ராணுவத்தில் பணியாற்றினார். அவருக்கும் அவரது மனைவி பெல்லா கோச்சார்யனுக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர்: செட்ராக், கயேன் மற்றும் லெவன்; அவர்கள் அனைவரும் எசுடெபனகெத்தில் பிறந்தவர்கள். கோச்சார்யன் தனது சொந்த ஆர்மீனியன் மொழியைத் தவிர, உருசிய மற்றும் ஆங்கிலம் பேசுகிறார்.

குடியரசுத் தலைவர்[தொகு]

இவருக்கு முன் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த இலெவன் தெர்-பெத்ரோசியன் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், கோச்சார்யன் ஆர்மீனியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராக 1998 மார்ச் 30 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேசத் தேர்தல் பார்வையாளர்களால் அறிவிக்கப்பட்டபடி இரு தரப்பினரின் முறைகேடுகள் மற்றும் மீறல்களால் சிதைக்கப்பட்ட குடியரசுத் தலைவர்த் தேர்தலில் அவரது முக்கிய போட்டியாளரான கரேன் டெமிர்ச்சியனை தோற்கடித்தார். அரசியலமைப்பின் படி கோச்சார்யன் பத்து ஆண்டுகளாக ஆர்மீனிய குடிமகனாக இருக்கவில்லை என்று புகார்கள் இருந்தன,[3] 7 ஆண்டிற்கும் குறைவான ஒரு குடியரசின் 10 ஆண்டு குடிமகனாக இருப்பது அவருக்கு சாத்தியமில்லை என்றாலும் ஆர்மீனிய அரசியலமைப்பு ஆர்மீனிய சோவியத் சோசலிச குடியரசை முன்னோடி அரசாக அங்கீகரித்தது.

இவரது குடியரசுத் தலைவர் பதவிக் காலத்தில், ஆர்மீனிய நாடாளுமன்றத்தில் பல எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆர்மீனியாவின் பிரதமரும் துப்பாக்கி ஏந்தியவர்களால் "1999 ஆர்மீனிய நாடாளுமன்ற துப்பாக்கிச் சூடு" என அழைக்கப்பட்ட ஒரு நிகழ்வில் கொல்லப்பட்டனர். அப்போது பிடித்துச் செல்லபட்ட பிணைக்கைதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களை விடுவிக்க கோச்சார்யனே பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

2001 ஆம் ஆண்டில், கோச்சார்யன் யெரெவனில் உள்ள போப்லாவோக் விடுதியில் ஒரு ஜாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், அங்கு இவரது முன்னாள் வகுப்புத் தோழர் போகோஸ் போகோஸ்யன் "ஹாய் ராப்" என்ற வார்த்தையுடன் வரவேற்றார். இது சாதாரணமான ஒரு வாழ்த்துதான் என்றாலும் இது அவமானமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. கோச்சார்யனின் மெய்க்காப்பாளர்கள் போகோஸ்யனை விடுதியின் கழிப்பறைக்குள் அழைத்துச் சென்று கொலை செய்தனர்.[4] இதற்கக இவரது மெய்க்காப்பாளரான அகமல் கருதியுன்யன், ஒரு வருடம் இடைநீக்கம் செய்யப்பட்டு சிறைத்தண்டனையும் பெற்றார்.[5]

குறிப்புகள்[தொகு]