இராஜ முத்திருளாண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இராஜ (கோபால்) முத்திருளாண்டி, சிவகங்கை மாவட்டம், திருப்பூவனம் என்னும் ஊரில் பிறந்தவர் (1949) . உயர்நிலைப்பள்ளி வரை (SSLC) திருப்பூவனம் போர்டு உயர்நிலைப்பள்ளியிலும், புகுமுக வகுப்பு, பட்டப் படிப்பு மதுரைக் கல்லூரியிலும், முதுகலைப்படிப்பு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் படித்தார்.1971 முதல் தமிழ்நாடு அரசுக் கல்லூரிகளில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றிப் பணி நிறைவு பெற்றுள்ளார்.

இடையில், திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக் கழகம் தோற்றுவிக்கப்பட்டபோது (1982), முதல் துணைவேந்தர் பேராசிரியர் பி.எஸ். மணி சுந்தரம் அவர்கள் அழைப்பின்பேரில், தமிழக அரசால் முதல் துணைப் பதிவாளராக அயற்பணியில் பணியாற்ற ஆணைகள் இடப்பெற்றுப் பணியாற்றினார். வரலாற்றுச் சாதனையாக, அப்பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் அவர்களது புதுமை செய் நோக்கில் விளைந்த எண்ணமான பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ற மூன்றாண்டுப் பட்டப் படிப்பினை, இந்தியாவிலேயே முதலாவதாக, புத்தனாம்பட்டி எனும் சிற்றூரில் அமைந்திருக்கும் நேரு நினைவுக் கல்லூரியில் எழுத்தாளர் சுஜாதா அவர்களது வழிகாட்டலில் தொடங்க அரும்பணியாற்றினார்.

உலக மனித உரிமைக்கான பத்தாண்டுக் காலத்தில் மனித உரிமைகள் குறித்த பத்துக்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் படைத்துள்ளார். தமிழில் இத்துறையில் இவரது நூல்களான இலக்கியத்தில் மனித உரிமைகள், கதாயுதங்கள், Human Rights: The constitution and Statuary Institutions of India என்ற நூல்கள் பல பல்கலைக் கழகங்களில் பட்ட வகுப்புகள், பட்ட மேற்படிப்பு வகுப்புகளுக்குப் பாடநூல்களாக இப்போதும் உள்ளன.தகவல் பெறும் உரிமைச்சட்டம் குறித்த இவரது இரண்டு தமிழ் நூல்கள் அச்சட்டத்தை,அதன் செயல்பாடுகளை, அச்சட்டத்தையொட்டி இந்திய நீதிமன்றங்களில் விளைந்துள்ள தீர்ப்புகளை விளக்கும் வகையில் எழுதப்பட்டவை.

பாரதியார் நினைவு நூற்றாண்டு வெளியீடாக(2021) வந்துள்ள இவரது நூல் ( பாட்டிடையிட்ட பாரதியார் சிறுகதைகள்) பாட்டுக்கொரு புலவன் பாரதியை, தமிழ்ச்சிறுகதையின் தந்தை எனத் தவறாகக் குறிப்பிடப்பட்டுவரும் வ.வெ.சு.ஐயர் அவர்களுக்கு முன்னரே சிறுகதைகள் படைத்தவர் என்பதைச் சான்றுகளுடன் நிறுவிநிற்கும் நூலாக ஆய்வாளர்களால் மதிப்பிடப் பட்டிருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜ_முத்திருளாண்டி&oldid=3906041" இலிருந்து மீள்விக்கப்பட்டது