இரட்டை மரபுரிமைக் கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரட்டை மரபுரிமைக் கோட்பாடு என்பது 1970 களின் பிற்பகுதியிலும், 1980 களின் தொடக்கப் பகுதியிலும் வளர்ச்சிபெற்ற மானிடவியல் சார்ந்த ஒரு கோட்பாடு ஆகும். இது எவ்வாறு மனித நடத்தைகள், தம்முள் ஊடுதொடர்புகளைக் கொண்டுள்ள, மரபணுவியல் படிமலர்ச்சி, பண்பாட்டுப் படிமலர்ச்சி ஆகிய படிமலர்ச்சி (கூர்ப்பு) வழிமுறைகளின் விளைவாக இருகிறது என்பதை விளக்க முயல்கிறது. பெரும்பாலான சமூக அறிவியல் துறைகள் பண்பாடே மனித நடத்தைகளின் வேறுபாடுகளுக்கான முதன்மைக் காரணம் என்கின்றன. அதே வேளை, சமூக உயிரியல், படிமலர்ச்சி உளவியல் ஆகிய துறைகள், பண்பாட்டை மரபணுவியல் தேர்வு முறையின் முக்கியமற்ற ஒரு பக்கவிளைவாகக் கருதுகின்றன. இரட்டை மரபுரிமைக் கோட்பாடு, இவ்விரு கருத்துக்களுக்கும் இடையிலான ஒரு கருத்தைக் கொண்டுள்ளது. இக் கோட்பாட்டின்படி, சமூகவழிக் கல்வி மூலம் மூளையில் பொதியப்பட்டுள்ள தகவல்களே பண்பாடு என வரையறுக்கப்படுகின்றது. டார்வினியத் தேர்வு முறை பண்பாட்டுத் தகவல்களின் மீது ஏற்படுத்தும் தாக்கமே பண்பாட்டுப் படிமலர்ச்சி என்பது இக் கோட்பாட்டாளரின் கருத்து.[1][2][3]

கோட்பாட்டு அடிப்படை[தொகு]

ஹோமோ சாப்பியன்களின் படிமலர்ச்சியில், மரபணுவியல் படிமலர்ச்சியும், பண்பாட்டுப் படிமலர்ச்சியும் ஒன்றுடன் ஒன்று ஊடுதொடர்பு கொண்டுள்ளன என்னும் நிலையை இரட்டை மரபுரிமைக் கோட்பாடு கொண்டுள்ளது. மனித நடத்தையின் படிமலர்ச்சியில் மரபணுவியல் வழித் தேர்வு ஒரு முக்கியமான கூறு என்பதையும், மரபணுவியற் காரணிகள் பண்பாட்டு இயல்புகளைக் கட்டுப்படுத்துகின்றன என்பதையும் இக் கோட்பாடு ஏற்றுக்கொள்கிறது. அதே வேளை, இம் மரபணுவியல் படிமலர்ச்சி ஒரு இணைப் படிமலர்ச்சி வழிமுறையாகப் பண்பாட்டுப் படிமலர்ச்சியை மனித இனத்துக்கு வழங்கியுள்ளது என்பதையும் அது ஏற்கிறது. இரட்டை மரபுரிமைக் கோட்பாடு மூன்று முக்கிய கருத்துக்களை முன்வைக்கிறது:

  1. பண்பாட்டுத் திறன்கள் தகவாக்கங்கள் ஆகும்
  2. பண்பாடு படிமலர்ச்சியடைகிறது
  3. மரபணுக்களும், பண்பாடும் இணைப் படிமலர்ச்சி அடைகின்றன.

மேற்கோள்கள்[தொகு]