இந்திய வெண்தொண்டை மீன்கொத்தி
இந்திய வெண்தொண்டை மீன்கொத்தி (அறிவியல் பெயர்: Halcyon smyrnensis fusca) என்பது வெண்தொண்டை மீன்கொத்தியின் துணையினம் ஆகும்.[1] இது மேற்கு இந்தியாவிலும், இலங்கையிலும் காணப்படுகின்றது.
விளக்கம்
[தொகு]மைனா அளவுள்ள இந்திய வெண்தொண்டை மீன்கொத்தி சுமார் 25 செ. மீ. நீளம் இருக்கும். இதன் அலகு பவளச் சிவப்பாகவும், விழப்படலம் பழுப்பாகவும், கால்கள் நல்ல சிவப்பாகவும் இருக்கும். இப்பறவையின் தலை, கழுத்து, அடி நெஞ்சு, வாலடி இறகுகள் ஆகியன நல்ல ஆழ்ந்த சாக்லெட் பழுப்பு நிறத்தில் இருக்கும். முதுகு, பிட்டம், வால் மேல் போர்வை இறகுகள் ஆகியன நல்ல நீல நிறத்தில் இருக்கும். மோவாய், தொண்டை, மார்பு ஆகியன வெண்மையாக இருக்கும். இப்பறவை பறக்கும்போது இதன் இறக்கைகளில் வெண்மை பளிச்சிடக் காணலாம்.[2]
பரவலும் வாழிடமும்
[தொகு]இந்திய வெண்தொண்டை மீன்கொத்தி மேற்கு இந்தியாவிலும், இலங்கையிலும் காணப்படுகின்றது. தென்னிந்தியா முழுக்க மிகுதியாக காணப்படும் மீன்கொத்தி இதுவாகும். தென் திருவாங்கூரில் மட்டும் சற்று குறைவாக இது காணப்படுகிறது.[2]
நடத்தை
[தொகு]இந்திய வெண்தொண்டை மீன்கொத்தியானது நீர்வளம் இல்லாத பகுதிகளிலும் காணக் கிடைக்கிறது. ஏரிகள், குளங்கள், வயல்கள் ஆகியவற்றைச் சார்ந்து தரையிலும், வேலிகளிலும், மின் கம்பிகளிலும் இவை அமர்ந்திருக்கின்றன. இவை நீரிலும், தரையிலும் என இரு இடங்களிலும் இரை தேடக்கூடியவை. இதன் முதன்மை உணவாக மீன், தவளை, ஓணான், வெட்டுக்கிளி, பூச்சிகள் போன்றவை உள்ளன.[2]
ஓரிடத்தை விட்டு வேரொரு இடத்தற்கு பறக்கும்போது உரத்து கிறீச் குரலில் கத்தியபடி பறக்கும்.
இவை மேர்ச் முதல் சூலை வரை இனப்பெருக்கம் செய்கின்றன. இனப்பெருக்க காலத்தில் குறிப்பிட்ட ஓரிடத்தில் அமர்ந்து இப்பறவை தொடர்ந்து விட்டு விட்டு திறீச்சிட்டு கத்தியபடி இருக்கும். இவை கிணறுகள், வாய்கால் கரைகள் போன்ற இடங்களில் வங்கு குடைந்து பொந்து அமைந்து அதில் நான்கு முதல் ஆறு வரையிலான வெள்ளை நிற முட்டைகளை இடும். சிலசமயங்களில் எட்டு முட்டைகள் வரையும் இடும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gill, Frank; Donsker, David, eds. (2017). "Rollers, ground rollers & kingfishers". World Bird List Version 7.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 28 May 2017.
- ↑ 2.0 2.1 2.2 2.3 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. p. 299.