இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 142
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 142ன் கீழ் இந்திய உச்ச நீதிமன்றம், தனது சிறப்பு அதிகார வரம்பைப் பயன்படுத்தி, எந்தவொரு காரணத்திற்காகவும் அல்லது அதன் முன் நிலுவையில் உள்ள வழக்கு விசயத்தில் முழுமையான நீதியை வழங்குவதற்குத் தேவையான ஆணையை அல்லது உத்தரவை பிறப்பிக்கலாம். நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட எந்தவொரு சட்டத்தின் விதிகளுக்கும் உட்பட்டு, இந்திய உச்ச நீதிமன்றம், ஒருவரின் இருப்பை பாதுகாக்கும் நோக்கத்திற்காக எந்த உத்தரவையும் பிறப்பிக்க மற்றும் அனைத்து அதிகாரங்களையும் கொண்டுள்ளது.
இச்சட்டப் பிரிவு 142 என்பது இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு, இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரம் ஆகும்.[1]
சட்டப்பிரிவு 142, சில சமயங்களில் சட்டம் தீர்வை வழங்காத நிலையில், வாதி, பிரதிவாதிகளுக்கு இடையே "முழுமையான நீதியை" வழங்க, உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு தனித்துவமான அதிகாரத்தை வழங்குகிறது. அந்தச் சூழ்நிலைகளில், வழக்கின் உண்மைகளுக்குப் பொருந்தக்கூடிய வகையில், ஒரு சர்ச்சையை அமைதிப்படுத்த நீதிமன்றம் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியும்.
பிரிவு 142 க்குப் பின்னால் உள்ள சிறப்புகள்
[தொகு]இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவு, சட்டத்திற்குப் புறம்பாக அல்லது அநீதியை அனுபவித்த மனுதாரர்களுக்கு முழுமையான நீதியை வழங்க உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு சிறப்பு மற்றும் அசாதாரண அதிகாரத்தை வழங்குகிறது.[2]
சட்டப் பிரிவு 142 வது பிரிவின் அவசியத்தை அரசியலமைப்பு சபை ஏன் கருதியது
[தொகு]- இந்திய அரசியலமைப்பில் சட்டப் பிரிவு 142 இணைப்பதற்கான அவசியத்தை அரசியலமைப்பு சபையில் விவாதிக்கப்பட்டது. நீதித்துறையின் பாதகமான நிலை காரணமாக, தங்களுக்குத் தேவையான நிவாரணங்களைப் பெறுவதில் தாமதம் ஏற்படுவதால், பாதிக்கப்படும் மக்களுக்கு இந்த ஏற்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் கருதினர்.
- ஸ்ரீ தாகூர் தாஸ் பார்கவாவின் கூற்றுப்படி, இயற்கை நீதி என்பது சட்டத்திற்கு மேலானது, உச்ச நீதிமன்றமும் சட்டத்திற்கு மேலானது, அதாவது, அது நியாயமானதாகக் கருதும் எந்த உத்தரவையும் நிறைவேற்ற முழு உரிமை உண்டு. இது உச்ச நீதிமன்றத்திற்கு கிட்டத்தட்ட வரம்பற்ற அதிகாரங்களை வழங்குகிறது. எனவே, இந்திய உச்ச நீதிமன்றம் இந்த சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துகிறது மற்றும் எந்தவொரு விதி அல்லது சட்டம், நிர்வாக நடைமுறை அல்லது நிர்வாக சுற்றறிக்கை அல்லது ஒழுங்குமுறை போன்றவற்றின் மூலம் நீதி செய்வதிலிருந்து தடுக்கப்படாது.
சட்டப் பிரிவு 142 வது பிரிவை பயன்படுத்திய முக்கிய நிகழ்வுகள்
[தொகு]இச்சட்டப் பிரிவின் கீழ், இராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், 30 ஆண்டுகளுக்கு மேல் ஆயுட்கால சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை இந்திய உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, 18 மே 2022 அன்று நிரந்தரமாக சிறை தண்டனையிலிருந்து விடுதலை செய்தது.[3][4]
பின்னணி
[தொகு]இராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அமைச்சரவை 9 அக்டோபர் 2018 அன்று தீர்மானம் நிறைவேற்றியது. சிறையில் உள்ள இராஜீவ் கொலையாளிகள் விவகாரத்தில் சட்டப் பிரிவு 161ஐ பயன்படுத்தி தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் 6 செப்டம்பர் 2018 அன்று தீர்ப்பளித்தது. இதையடுத்து இவர்கள் எழுவரையும் விடுதலை செய்ய அப்போதைய அதிமுக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி தமிழக ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பியிருந்தது. ஆனால் அந்த பரிந்துரை மீது முடிவெடுப்பதில் தமிழ்நாடு ஆளுநர் கால வரம்பற்ற தாமதம் செய்தார். இதை சுட்டிக்காட்டியே அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவின் கீழ் தங்களுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 18 மே 2022 அன்று பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.[5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Article 142, Constitution of India, 1950
- ↑ Article 142- All you need to know
- ↑ பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
- ↑ Rajiv Gandhi assassination case: SC orders release of convict AG Perarivalan
- ↑ பேரறிவாளன்: எந்த அடிப்படையில் விடுதலை
- ↑ பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் 8 முக்கிய அம்சங்கள்