இந்தியாவில் கல்வி
இந்தியாவில் கல்வி (Education in India) என்பது அரசுத் துறையாலும் தனியார் துறையாலும் வழங்கப்படுகிறது. இவ்விரு துறைகளிலும் வழங்கப்படும் கல்வியின் மீதான கட்டுப்பாடும் நிதிப்பங்களிப்பும் ஒன்றிய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய மூன்று நிலைகளிலிருந்தும் கிடைக்கிறது. இந்திய அரசியலமைப்பின் பல்வேறு பிரிவுகளின்படி, 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி ஒரு அடிப்படை உரிமையாக வழங்கப்படுகிறது. இந்தியாவிலுள்ள பொதுப்பள்ளிகளுக்கு எதிரான தனியார் பள்ளிகளின் விகிதம் 7: 5 என்ற நிலையில் உள்ளது. தொடக்கக் கல்வி கற்பதற்காக பள்ளிக்கு வரும் குழந்தைகளின் வருகை விகிதத்தை அதிகரித்தும், 7-10 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் தோராயமாக நான்கில் மூன்று பங்கு குழந்தைகளுக்கு கல்வி அறிவைக் கொடுத்தும் 2011 ஆம் ஆண்டில் இந்தியா கல்வி வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டுள்ளது[1]. இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக இருப்பது நாட்டில் வழங்கப்படும் கல்வி முறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமே முக்கியமான காரணிகளில் ஒன்றாகும் என பல இடங்களில் காட்டப்படுகிறது [2]. பெரும்பாலான முன்னேற்றம் குறிப்பாக உயர் கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி ஆகியவற்றில் நிகழ்ந்ததற்கு பல்வேறு பொது நிறுவனங்களும் காரணமாகும். கடந்த பத்தாண்டுகளில் உயர் கல்வி கற்கவரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து நிலையாக அதிகரித்து வருகிறது. 2013 ஆம் ஆண்டில் இந்த அதிகரிப்பு விகிதம் மொத்தமாக 24% ஆகும் [3].
வளர்ந்த நாடுகளின் மூன்றாம் நிலைக்கல்வி சேர்க்கை அளவோடு ஒப்பிடும் போது ஒப்பீட்டளவில் அந்த இலக்கினை எட்ட நாம் இன்னும் வெகுதொலைவு செல்ல வேண்டியிருக்கிறது [4]. இத்தகைய வளர்ச்சியினால் கிடைக்கும் நன்மைகள் இந்தியாவிலுள்ள இளைஞர்கள் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டுமெனில், தொடர்ச்சியாக இத்தகைய நிலையான வளர்ச்சிக்கு வழியமைக்க நாம் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
தொடக்க நிலை மற்றும் இரண்டாம் நிலை மட்டத்தில் இந்தியாவில் அதிக அளவிலான தனியார் பள்ளிக்கூடங்கள் உள்ளன. ஆறு வயது முதல் 14 வயது வரையிலான மாணவர்களில் 71% மாணவர்கள் அரசாங்கத்தால் நடத்தப்படும் பள்ளிகளில் கல்வி பெறுகின்றனர். எஞ்சியிருக்கும் 29% மாணவர்களுக்கு தனியார் கல்வி நிலையங்கள் கல்வியளித்து நாட்டின் கல்வித் தேவையை பூர்த்தி செய்கின்றன[5]. இரண்டாம் நிலைக்கு அடுத்த சில முதுநிலை தொழில்நுட்ப பள்ளிகள் கூட தனியாரால் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் தனியார் கல்வி சந்தை 2008 ஆம் ஆண்டில் 450 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாயை ஈட்டிக் கொடுத்துள்ளது. ஆனால் இது 40 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கே இருக்கும் என்று உத்தேசமாகத் திட்டமிடப்பட்டிருந்தது[6]. 2012 ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள 6-14 வயதிற்கு உட்பட்ட அனைத்து கிராமப்புறங்களிலும் உள்ள குழந்தைகளில் 96.5% குழந்தைகள் பள்ளியில் சேர்ந்தனர் என்று 2012 ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் ஆண்டு நிலை அறிக்கை (ASER) தெரிவிக்கிறது. இவ்வாறு 96 சதவிகிதத்திற்கும் மேலாக பதிவு செய்யப்படுவது இது நான்காவது முறையான வருடாந்திர கணக்கெடுப்பு ஆகும். வகுப்பு I முதல் XII வரை இந்தியாவில் பல்வேறு அங்கீகாரம் பெற்ற நகர்ப்புற மற்றும் கிராமப்புற பள்ளிகளில் சேர்ந்திருந்த மாணவர்களின் எண்ணிக்கை 22.9 கோடி மாணவர்கள் என 2013 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மற்றொரு அறிக்கை கூறுகிறது, இது 2002 ஆம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் 23 இலட்சம் மாணவர்கள் அதிகமாகும். குறிப்பாக பெண் குழந்தைகளின் வருகை சதவீதம் 19% அளவுக்கு அதிகரித்திருந்தது. எண்ணிக்கை அளவில் இந்தியாவின் கல்வித் துறை அளிக்கும் கல்வி அளவு உலகாயநிலை கல்வி வளர்ச்சியை நோக்கி நகர்ந்தாலும் கல்வித் தரம் அளவில் குறிப்பாக அரசாங்கம் நடத்தும் பள்ளிகளின் தரம் கேள்விக்குறியாகவே உள்ளது. ஒவ்வொரு நாளும் 25% ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில்லை என்பது இத்தரக் குறைவிற்கான காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது [7]. இத்தகைய பள்ளிகளை அடையாளம் காணவும் மேம்படுத்தவும் இந்தியா பலவிதமான சோதனைகள் மற்றும் கல்வி மதிப்பீட்டு முறைமைகளை அறிமுகப்படுத்தியுள்ளது [8].
அனைத்து நிலைகளிலும் நாட்டில் தனியார் பள்ளிகள் இருக்கின்ற காரணத்தால் அவர்கள் என்ன கற்பிக்கிறார்கள், எப்படி கற்பிக்கிறார்கள், எப்படி செயல்படுகிறார்கள் அவர்கள் நடத்தும் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் இலாப நோக்கமற்றதாக இருக்கிறதா மற்றும் இதைப்போன்ற அனைத்து அம்சங்களும் முறைப்படுத்தப்படுகின்றன. எனவே, அரசாங்க பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் வேறுபாடுகள் தோன்றி தவறாக வழிநடத்தப்படுகின்றன[9]. வரலாற்று ரீதியாக பின்தங்கிய அட்டவணை சாதியினர், அட்டவணைப் பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உயர் கல்வி அளிப்பதற்கு இந்தியாவின் உயர்கல்வி முறையில் உடன்பாட்டு நடவடிக்கை கொள்கையின் கீழ் குறிப்பிடத்தக்க சில இடங்கள் ஒதுக்கீடு செய்ய வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில், மற்றும் கூட்டாட்சி அரசாங்கத்துடன் இணைந்த ஒத்துணர்வு நிறுவனங்களில் இந்த பின்தங்கிய குழுக்களுக்கு பொருந்தக்கூடிய வகையில் 50% இட ஒதுக்கீடுகள் அளிக்கப்படுகின்றன. இவ்வொதுக்கீட்டு சதவீதம் மாநில அளவில் மாறுபடலாம். மகாராட்டிர மாநிலத்தில் 2014 ஆம் ஆண்டில் 73% இடங்கள் இடஒதுக்கீடு முறையில் நிரப்பப்பட்டன. இதுவே இந்தியாவின் அதிகபட்ச இடஒதுக்கீட்டின் மிக உயர்ந்த சதவீதமாகும்.
பள்ளிக் கல்வி[தொகு]
ஒன்றியம் மற்றும் பெரும்பாலான மாநில கல்வி நிறுவனங்கள் "10+2+3" என்ற ஒரே மாதிரியான கல்வி முறையைப் பின்பற்றுகின்றன[10]:3. இந்த கல்விமுறை படிப்பில் முதல் பத்து ஆண்டுக் கல்வி பள்ளிக்கூடங்களிலும், அடுத்த இரண்டு ஆண்டுகள் இளையோர் கல்லூரி எனப்படும் மேல்நிலைப் பள்ளிகளிலும்[10]:44, இதற்கடுத்த மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பாக கல்லூரிகளிலும் வழங்கப்படுகிறது[11]. முதல் பத்தாண்டுகள் கல்வியானது ஐந்து ஆண்டுகள் தொடக்கப் பள்ளிகளிலும், அடுத்த ஐந்து ஆண்டுகள் படிப்பு உயர்நிலைப் பள்ளிகளிலுமாக பிரித்து வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கல்வி மேல்நிலைப் பள்ளிகளில் வழங்கப்படுகிறது[10]:5. இவ்வகையான கல்வித்திட்டம் 1964 -1966 இல் தேசிய கல்வி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் தோன்றியதாகும்.
நிர்வாகம்[தொகு]
கொள்கை[தொகு]
இந்திய அரசு மற்றும் மாநில அரசுகள் முறையே தேசியக் கல்விக் கொள்கையையும் மாநிலக் கல்விக் கொள்கையையும் தயாரிக்கப்படுகின்றன. 1986 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட கல்விக்கான தேசிய கொள்கை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, விஞ்ஞானம், தொழில்நுட்ப கல்வி மற்றும் உயர்நிலை பள்ளி அளவில் இந்திய பாரம்பரிய கூறான யோகா போன்றவற்றை அறிமுகப்படுத்த வழிவகைகளை அளித்துள்ளது[12]. சமுதாயத்தின் பின்தங்கிய பகுதியினரை பள்ளிகளில் சேர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிப்பதுதான் இந்தியாவின் இரண்டாம் நிலை பள்ளி முறையின் முக்கிய அம்சமாகும். நன்கு நிறுவப்பட்ட நிறுவனங்களில் இருந்து தொழில் வல்லுநர்கள் இத்தகைய பிந்தங்கிய மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க அழைக்கப்படுகிறார்கள். மாணவர்களின் விருப்பத்திற்கேற்ற தொழில் அடிப்படையிலான தொழிற்கல்விக்கு பயிற்சி அளிக்கப்படுவதும் இந்தியக் கல்வி முறையில் உள்ள மற்றொரு சிறப்பு அம்சமாகும். நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு சமச்சீர் கல்வியை அளிக்கவேண்டும் என்ற உயரிய நோக்கோடு புதிய அம்சங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
புதிய கல்விக் கொள்கைத் திட்ட வரைவு 2019[தொகு]
சூலை 2019-இல் இந்திய அரசு நாடு முழுமைக்கான புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தினை வெளியிட்டுள்ளது. இதன் மீது மாநில அரசுகள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என இந்திய நடுவண் அரசு தெரிவித்துள்ளது.[13] [14] [15]இதனிடையே இந்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்திற்கு தமிழகக் கல்வியாளர்கள் நடுவில் பெறும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. [16]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Education in India". World Bank. 2012-04-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-03-12 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ India achieves 27% decline in poverty, Press Trust of India via Sify.com, 2008-09-12
- ↑ "Gross enrollment ratio by level of education". யுனெசுகோ Institute for Statistics. 10 December 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Global Education". University Analytics. 8 டிசம்பர் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 December 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Over a quarter of enrollments in rural India are in private schools". The Hindu. http://www.thehindu.com/features/education/school/over-a-quarter-of-enrolments-in-rural-india-are-in-private-schools/article5580441.ece. பார்த்த நாள்: 21 August 2014.
- ↑ "Indian education: Sector outlook" (PDF). 24 செப்டம்பர் 2015 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 23 January 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Sharath Jeevan & James Townsend, Teachers: A Solution to Education Reform in India Stanford Social Innovation Review (17 July 2013)
- ↑ B.P. Khandelwal, Examinations and test systems at school level in India UNESCO, pages 100-114
- ↑ Ramanuj Mukherjee. "Indian Education System: What needs to change?". Unlawyered. 2018-04-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-04-01 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 10.0 10.1 10.2 "National Policy on Education (with modifications undertaken in 1992)" (PDF). National Council of Educational Research and Training. 10 December 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Vyas, Neena (30 June 2012). "10+2+3: A Game of Numbers?". India Today. 10 December 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ India 2009: A Reference Annual (53rd edition), 231
- ↑ About New Education Policy Consultation
- ↑ Draft National Education Policy 2019
- ↑ இந்திய கல்விக் கொள்கை வரலாறு - மெக்காலே முதல் மோடி வரை!
- ↑ தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019: தமிழகத்தில் கடும் எதிர்ப்பு ஏன்?
புற இணைப்புகள்[தொகு]
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- India Education Data பரணிடப்பட்டது 2014-10-06 at the வந்தவழி இயந்திரம்
- Education in India, webdossier by Education Worldwide, a portal of the German Education Server