இத்தாலிய அரசியலமைப்பு
இத்தாலிய அரசியலமைப்பு (Constitution of Italy[1], இத்தாலியம்: Costituzione della Repubblica Italiana) 1848 ஆம் ஆண்டு பீட்மான்டும் சார்டீனியாவும் ஏற்றுக்கொண்ட அரசியல் அமைப்பை, ஐக்கிய இத்தாலியும் மேற்கொண்டது. 1922 ஆம் ஆண்டு முசொலீனி அதிகாரத்திற்கு வரும்வரையில், இவ்வமைப்பு மாறாமல் இருந்து வந்தது. 1943 ஆம் ஆண்டுவரையில் நடைமுறையிலிருந்த பாசிச சர்வாதிகாரத்தின் கீழ், இத்தாலிய அரசியல் அமைப்பு, பெயரளவில் முடியரசாயிருந்ததெனினும், பிரதம மந்திரியாயிருந்த முசொலீனியே இராச்சியத்தின் தலைவனாயிருந்தான். முன்பு, நாடளுமன்றத்திற்குப் பொறுப்புடையதாயிருந்த, மந்திரிசபை மாற்றப்பட்டுப் பாசிசக் கட்சி உறுப்பினர்களே மந்திரிகளாய் விட்டனர்; இவர்கள் முசொலீனிக்கு முழுவதும் அடங்கியவர்கள். பாசிசக் கட்சியின் சின்னமான ' கழிகளின் கட்டு', அடக்கு முறையைக் குறிப்பிட்டது.
பாசிசம்
[தொகு]நாடாளுமன்றத்தின் கீழ்ச்சபையான 'பிரதிநிதிகள் சபை'க்கு அங்கத்தினர்கள் கீழ்க்கண்டவாறு தேர்ந்தெடுக்கப்படுவர். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு பட்டி இருக்கும். தேர்ந்தெடுப்போர் ஒவ்வொரு பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்காமல் முழுப்பட்டிகளாகவே தேர்ந்தெடுக்க வேண்டும். பெரும்பான்மை வாக்குக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி மொத்தத்தில் மூன்றில் இரண்டு பங்கு நிறுவனங்கள் பெறும். மற்றக் கட்சிகள் தாங்கள் பெற்ற வாக்குக்களுக்குத் தக்கவாறு பெறும். இச்சபை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படும். ஆயினும், அதற்குள்ளாகப் பிரதம மந்திரியால் கலைக்கப்படவும் கூடும். 1933 லிருந்து பிரதம மந்திரி ஒரே பட்டியை வாக்காளர்களுக்கு அனுப்பி, அதை அவர்கள் மொத்தமாகத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் ஏற்பட்டது. பாசிஸ்டுகளின் ஆதிக்கத்தினால், அக்கட்சியின் பட்டியையே முழுவதும் மக்கள் ஒப்புக்கொள்ளத் தொடங்கினர். பண மசோதாவைப் பிரேரேபிக்கக் கீழ்ச்சபையாருக்கே உரிமையுண்டு; மேல்சபையான செனெட் இம்மசோதாவை எதிர்த்தால், தேவையான அளவு புது அங்கத்தினர்களை மேல்சபைக்கு நியமனம் செய்து எதிர்ப்பைச் சமாளித்து விடுவார்கள்.
பிரபுக்கள் சபை பெரும்பாலும் நியமன அங்கத்தினர்களும் சில பாரம்பரிய அங்கத்தினர்களுமே உண்டு. கீழ்ச்சபை அலுவல்களைக் கவனிக்க ஒன்பது குழுக்கள் உண்டு. இவ்வவையினர் மந்திரி சபையைக் கேள்விகள் கேட்கலாம். மந்திரிசபை கீழ்ச்சபைக்குப் பொறுப்புள்ளதேயன்றிச் செனெட்டிற்குப் பொறுப்புள்ளதல்ல.
இயற்றப்பட்ட சட்டங்கள் மிகவும் பொதுவான முறையிலேயே இருந்தன. இச்சட்டங்களின் விவரங்களை யெல்லாம் நிருவாகத்தின் அவசரச் சட்டங்கள், விதிகள், உத்தரவுகள் மூலம் விரிவுபடுத்தினர். ஆகையால், நிருவாகத்தார் இயற்றிய சட்டங்கள் ஏராளமாகக் குவிந்தன.
நாட்டின் 25 மாகாணங்களையும் நிருவகிப்பதற்கு மாகாணத் தலைவர்களும் மந்திரிசபைகளும் இருந்தன. இம்மாகாணத் தலைவர் மத்திய அரசாங்கத்தின் முகவராகவே இருந்து வந்தார். நகரங்களும் கிராமங்களும் கம்யூன்களாகப் பிரிக்கப்பட்டன. அக்கம்யூன்களின் மேயர்கள் மாகாணத் தலைவர்களிடமிருந்து உத்தரவு பெற்று அலுவல் பார்த்தனர்.
கால வளர்ச்சி
[தொகு]இத்தாலிக்கு எதிரியாக இருந்த நேச நாடுகளின் முன்னேற்றம் (1943), முசொலீனியின் ஆதிக்கத்தைச் சிதைத்தது. அவர் பதவியினின்றும் விலகிக்கொள்ளவே, அவருக்குப்பின் பிரதமரான மார்ஷல் படாளியா பாசிசக் கட்சியைக் கலைத்துவிட்டான். படாளியாவிற்குப் பின் வந்த அரசாங்கம் விக்டர் இம்மானுவலை அரச பதவியினின்றும் விலகச் செய்து இளவரசனை ரீஜன்டாக நியமித்தது. எல்லாக் கட்சிகளின் ஆதரவும் கிடைக்கும் முறையில் அரசாங்கமும் மாற்றியமைக்கப் பெற்றது (1944). நேசநாட்டு ராணுவ அரசாங்கம் ஒன்று, கைப்பற்றிய பிரதேசங்களில் இடையிற் சில காலம் வரையில் அதிகாரம் செலுத்திவந்தது. பிறகு இத்தாலிய அரசாங்கத்திற்கு முழு ஆதிக்கமும், பன்னாட்டு ஏற்பும் அளிக்கப்பட்டன.
1946 ஜூனில் ஒரு குடியொப்பத்தின் மூலம் அரச பதவி நிராகரிக்கப்பட்டது. மன்னரும் இளவரசரும் நாடு கடந்தனர். குடியொப்பத்தின் முடிவு பெரும் பான்மையோரின் முடிவேயாயினும், பலர் அம்முடிவை எதிர்த்தும் வாக்களித்தனர். இத்தாலி குடியரசாயிற்று. குடியரசை ஆதரித்த பெரும்பாலோர் வடஇத்தாலியைச் சார்ந்தவர்களே. அரச வமிசத்தினர் அயல் நாட்டவராகக் கருதப்பட்டு நாடுகடத்தப்பட்டனர். புதிய திட்டத்தின்படி பட்டங்கள் அளிப்பது நின்று விட்டது.
அமைப்பு
[தொகு]1947 திசம்பரில் கூடிய ஒரு அரசியல் நிருணய சபை புது அரசியலை வகுத்தது.[2] அது 1948 சனவரி 1லிருந்து நடைமுறைக்கு வந்தது. அரசியல் சட்டத்தில் 139 சரத்துக்களும், 18 இடைக்கால விதிகளும் அடங்கியுள்ளன. இவ்வரசியல் சட்டத்தின்படி, நாடளுமன்றம் என்பது பிரபுக்கள் சபையும், உறுப்பினர்களும் சேர்ந்தது. உறுப்பினர் சபையும், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வயது வந்தோர் வாக்குரிமைப்படி நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் பெறுவது. 80,000 மக்களுக்கு ஒரு உறுப்பினராக இருக்கவேண்டும். அவர் 25 வயதிற்கு மேற்பட்டவராதல் வேண்டும். பிரபுக்கள் சபை 6 ஆண்டிற்கொருமுறை, பிரதேசவாரியாகத் தேர்ந்தெடுக்கப் பெறும். ஒவ்வொரு பிரதேசத்திலும் 6 அங்கத்தினர்கள் ஆக 2 இலட்சம் மக்களுக்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். பிரபுக்கள் சபை உறுப்பினர்களில் ஒருவரான, குடியரசுத்தலைவர் ஐந்து உறுப்பினர்களை சபைக்கு நியமனம் செய்வார்.
நாடாளுமன்றத்தோடு, ஒவ்வொரு மண்டல குழுமத்திலிருந்தும், 3 உறுப்பினர்களும் சேர்ந்து குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இத்தேர்தலுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையோர் வேண்டும். குடியரசுத் தலைவர், 50 வயதேனும் நிரம்பியவராயிருக்க வேண்டும். அவர் 7 ஆண்டிற்குப் பதவியிலிருப்பார். பிரபுக்கள் சபையின், தலைவர் குடியரசின் துணைத் தலைவாரக இருப்பார். தமது பதவியின் இறுதி ஆறு மாதங்களில், தவிர வேறு காலங்களில் குடியரசு நாடாளுமன்றத்தின் இரு சபைகளில் எதையும் கலைத்துவிடலாம்.
நிருவாகத்திற்காக இத்தாலியை 19 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். மண்டலங்கள் மாகாணங்களாகவும் கம்யூன்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. மண்டலங்களின் நிருவாகம், பகுதிகளின் சபையும், நிருவாகக் குழுவாலும் அக்குழுவின் தலைவராலும் நடத்தப்படுகிறது.
நீதி
[தொகு]பதினைந்து நீதிபதிகள் கொண்ட, அரசியலமைப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அரசியலைப் பற்றிய சட்ட நிருணயத்தின் இறுதி அதிகாரம் இதற்கு உண்டு. இந்த நீதிமன்றத்திற்கும், மாகாணங்களுக்குமிடையே ஏற்படும் தகராறுகளை விசாரிக்கும், குடியரசுத் தலைவரையும், மந்திரிகளையும் கூட விசாரிக்க, இந்த நீதிமன்றம் உரிமை உண்டு. இரத்து அதிகார நீதிமன்றம் ஒன்று ரோமில் இருக்கிறது. சில்லரை பொதுமக்கள் தாவாக்களை விசாரிக்கும் தனிப்பட்ட அலுவலர்களும் இருக்கின்றனர்.[3]
1929 ஆம் ஆண்டு போப்பிற்கும், இத்தாலிக்கும் ஏற்பட்ட ஒப்பந்தம் புது அரசியலின் 7 ஆம் சரத்துப்படி ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. கத்தோலிக்க மதமே இத்தாலிய இராச்சியத்தின் மதம். சட்டப்படி பிராட் டெஸ்டென்டு முதலிய மதத்தவர்களுக்கும், சம உரிமைகளிருப்பினும், அவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். மத அடிப்படையிலான மேலதிகாரிகளைப் போப் நியமிக்கிறார். நியமனம் செய்யப்படுபவர்களுடைய பெயர்ப்பட்டி இத்தாலிய அரசாங்கத்திடம் கொடுக்கப்படும்.