இசுலாமிய எழுத்தணிக்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
18ஆம் நூற்றாண்டு காலப்பகுதியின் உதுமானிய பேரரசின் எழுத்தணிக்கலைகள்

இஸ்லாமிய எழுத்தணிக்கலை (Islamic Calligraphy) என்பது பொதுவாக அரேபிய எழுத்துக்கலை என அறியப்படுகின்றது. பொதுவான இஸ்லாமிய கலாச்சார மரபுரிமையை வெவ்வேறு இடங்களில் அடையாளப் படுத்தும் முகமாக ஓவியாளர்களால் பயன்படுத்தப்படும் கையெழுத்து முறையே அரேபிய எழுத்துக்கலை என அழைக்கப்படுகின்றது. இவ் எழுத்துக்கலையானது அரபு மொழி எழுத்துமுறையை அடிப்படையாகக் கொண்டு வரையப்படுகின்றது. இஸ்லாமிய எழுத்தணிக்கலை நீண்டகாலமாக முஸ்லிம்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இஸ்லாமிய எழுத்துக்கலையானது, இஸ்லாத்தில் உயர்ந்த சித்திரக் கலையாக நோக்கப்படுகின்றது.

வரலாறு[தொகு]

அரபிமொழியானது இஸ்லாம் அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் மக்களால் பேசப்பட்டு வந்தது. புனித இஸ்லாம் மார்க்கம் நபி(ஸல்) அவர்களால் அரபிமொழியில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், புனித அல்குர்ஆனும் அரபிமொழியில் இறக்கப்பட்டது. இதனால் அரபுமொழியானது இஸ்லாமிய கலாச்சாரத்தில் மிக முக்கிய செல்வாக்கைப் பெற்றிருந்தது. உமையா கிலாபத்தின் ஆட்சியாளர்களில் ஒருவரான கலீபா அப்துல் மலிக்கின் காலத்தில் இஸ்லாமிய ஆட்சிப்பிரதேசங்களில் உத்தியோகபூர்வ மொழியாக அரபிமொழி மாற்றப்பட்டது. அக்காலத்தில் அதிகமான முஸ்லிம் பிரதேசங்களில் தாய்மொழியாக அரபுமொழி காணப்படவில்லை. அக்கால இஸ்லாமிய உலகில் அரபு மொழிக்கு அடுத்தபடியாக பெருன்பான்மை மக்களால் பாரசீக மொழி பேசப்பட்டு வந்தது. இஸ்லாமிய உலகில் ஆரம்ப காலப்பகுதியில் எகிப்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆட்டுத்தோல்களிலும், ஒரு வகையான மரஇலைகளிலும் எழுத்துக்கலைகள் வரையப்பட்டு வந்தன. கி.பி. 9ஆம் நூற்றாண்டில் சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட காகிதத் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், காகிதத் தாள்களில் இஸ்லாமிய எழுத்தணிக்கலைகள் வரையப்பட்டன. இஸ்லாமிய எழுத்தணிக்கலைகள் சிறந்தமுறையில் வரைவதற்கு காகித்தாள்கள் பெரிதும் உதவிசெய்தது. அக்கால இஸ்லாமிய எழுத்தணிகளை வரைவதற்கு ‘கலம்’எனும் சாதானம் பயன்படுத்தப்பட்டது. அது கோரைப்புல் தாவரத்தால் உருவாக்கப் பட்டிருந்தது. ஆரம்பகால குர்ஆன் பெரியவையாகக் காணப்பட்டதுடன், அவை இஸ்லாமியக் கலைத்திறன் மிக்கதாகக் காணப்பட்டது. அதிலிருந்து இஸ்லாமிய எழுத்தணிக்கலைகள் சிறந்த ஓவியமுறையாக வளர்ச்சியடைந்தது.

தாஜ்மஹால் சுவரில் எழுதப்பட்டுள்ள அரபு எழுத்தணிக்கலைகள்

அரபு எழுத்தணி வகைகள்[தொகு]

அரபு எழுத்தணிக்கலைகள் பல்வேறுபட்ட முறைகளில் எழுதப்படுகின்றன. கூபிக், நாஸ்க், தூலுத், தவ்கி என்பன இவற்றுள் சிலவாகும். புனித அல்குர்ஆன் அதிகமாக கூபிக் முறையில் எழுதப்படுகின்றது. படித்த முஸ்லிம்கள் நாஸ்க் முறையை பயன்படுத்துகின்றனர்.தூலுத் முறையானது அலங்கார முறையாக காணப்படுவதுடன், இம்முறை தலைப்புக்கள் எழுதப்பயன்படுத்தப்படுகின்றன.

பள்ளிவாசல்களில் அரபு எழுத்தணிக்கலைகள்[தொகு]

பூப்பின்னல் வேலைப்பாட்டினால் ஒப்பனை செய்யப்பட்ட சித்திரவேலைப்பாட்டுக் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட அரபு, பாரசீக மற்றும் உஸ்மானிய துருக்கி எழுத்தணிக்கலைகள் பள்ளிவாசல்களின் சுவர்களிலும், கூரைகளிலும் எழுதப்பட்டுள்ளன. இஸ்லாமிய எழுத்துக் கலைகள் உலகின் வெவ்வேறு பகுதிகளில் காணப்படும் பள்ளிவாசல்களில் வரையப்பெற்றுள்ளன. மதீனா நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசல், துருக்கியின் இஸ்தான்பூல் நகரில் அமைந்துள்ள செலிமிய்யி பள்ளிவாசல் என்பன இஸ்லாமிய எழுத்தணிக்கலைகள் சிறந்த உதாரணங்களாகும்.

மேலும் பார்க்க[தொகு]

இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுலாமிய_எழுத்தணிக்கலை&oldid=3792576" இலிருந்து மீள்விக்கப்பட்டது