இகோர் ஸ்ட்ராவின்ஸ்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இகோர் ஸ்ட்ராவின்ஸ்கி.

இகோர் ஃபியோடோரோவிச் ஸ்ட்ராவின்ஸ்கி (Igor Fyodorovich Stravinsky - 17 ஜூன் [யூ.நா. 5 ஜூன்] 1882 – 6 ஏப்ரல் 1971) ரஷ்யாவில் பிறந்த ஒரு இசையமைப்பாளர் ஆவார். சிலர் இவரை 20 ஆம் நூற்றாண்டின் மிகச் செல்வாக்கு மிக்க இசையமைப்பாளராகக் கருதுகிறார்கள். அடிப்படையில், உலகக் குடிமகனான இவரை "டைம்" இதழ் 20 ஆம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க மனிதர் 100 பேர்களுள் ஒருவராகத் தெரிவு செய்தது. ஒரு இசையமைப்பாளராக மட்டுமன்றி, ஒரு பியானோக் கலைஞராகவும், நிகழ்ச்சி இயக்குனராகவும் இவர் புகழ் பெற்றவர்.

ஸ்ட்ராவின்ஸ்கியின் இசையமைப்புகள் பல்வகைமைத் தன்மை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 1910ல் சேர்கி டயகிலேவ் என்பவருடைய பலே நடன நிகழ்ச்சியொன்றுக்கு இசையமைத்ததன் மூலம் இவர் முதன் முதலில் உலகின் கவனத்தை ஈர்த்தார். "வசந்தத்தின் சடங்கு" ("The Rite of Spring") என்னும் நடன நிகழ்ச்சிக்கு அவர் செய்த இசையமைப்பு இசையமைப்புத் துறையில் ஒரு புரட்சியாக அமைந்தது. இது பின்வந்த பல இசையமைப்பாளர்களின் இசையமைக்கும் தன்மையை மாற்றி அமைத்ததுடன், இசைப் புரட்சியாளர் எனும் ஸ்ட்ராவின்ஸ்கியின் நிலைத்த புகழுக்கும் காரணமாகியது.