உள்ளடக்கத்துக்குச் செல்

ஆற்றல் மற்றும் சூழல்சார் வடிவமைப்பில் தலைமைத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
7 உலக வணிக மையம், ஐக்கிய அமெரிக்க பசுமைக் கட்டிட அவையின் லீட் திட்டத்தில் தங்கத் தகுதி பெற்றதன் மூலம் நியூ யார்க்கின் முதலாவது பசுமை அலுவலகக் கோபுரம் என்று கருதப்படுகிறது.[1]

ஆற்றல் மற்றும் சூழல்சார் வடிவமைப்பில் தலைமைத்துவம் என்பது, ஐக்கிய அமெரிக்கப் பசுமைக் கட்டிட அவையினால் உருவாக்கப்பட்ட பசுமைக் கட்டிடம் தொடர்பான தரவரிசைப்படுத்தல் முறைமை (Green Building Rating System) ஆகும். இதன் ஆங்கிலப் பெயரான Leadership in Energy and Environmental Design என்பதன் சுருக்கமான LEED (லீட்) என்ற பெயரில் இது பரவலாக அழைக்கப்படுகின்றது. இது, சூழல்சார்ந்த பேண்தகு தன்மை (environmentally-sustainable) கொண்ட கட்டுமானத்துக்கான தரப் பட்டியலொன்றை உருவாக்கியுள்ளது.

உருவாக்கம்[தொகு]

லீட் பின்வருவனவற்றை அடைவதற்காக உருவாக்கப்பட்டது:

 • அளப்பதற்கான பொதுத் தரம் ஒன்றை உருவாக்குவதன் மூலம் பசுமைக் கட்டிடம் என்பதை வரையறை செய்தல்.
 • ஒருங்கிணைக்கப்பட்ட முழுமையான கட்டிட வடிவமைப்பு நடைமுறைகளை வளர்த்தல்.
 • கட்டிடத் தொழில்துறையில், சூழல்சார் தலைமைத்துவத்தை அடையாளம் காணல்.
 • பசுமைப் போட்டியைத் தூண்டுதல்.
 • பசுமைக் கட்டிட நன்மைகள் தொடர்பான உணர்வை மக்களிடையே வளர்த்தல்.
 • கட்டிடங்களுக்கான சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்துதல்.

கட்டிடத் தொழில்துறையின் எல்லாப் பகுதிகளையும் சேர்ந்த உறுப்பினர்கள், லீட் முறைமையை உருவாக்கி அதனைத் தொடர்ந்து செப்பனிட்டு வருகிறார்கள். இதன் கீழான தரப்படுத்தல் முறைமை ஆறு முக்கியமான அம்சங்களைக் கவனத்தில் கொள்கிறது. சான்றிதழ் கொடுப்பதற்காக ஒவ்வொரு அம்சங்கள் தொடர்பிலும் வழங்கப்படக்கூடிய புள்ளிகளின் அளவுகள் அடைப்புக் குறிகளுக்குள் காட்டப்பட்டுள்ளன:

 • பேண்தகு தன்மை கொண்ட இடம் (14).
 • நீர் தொடர்பான செயற்திறன் (5)
 • ஆற்றலும், வளிமண்டலமும் (17).
 • பொருட்களும் வளங்களும் (13).
 • உள்ளகச் சூழல் தரம் (15).
 • புத்தாக்கமும், வடிவமைப்புச் செயல்முறையும் (5).

சான்றுப்படுத்தல்[தொகு]

வெவ்வேறு லீட் பதிப்புக்கள் சிறிதளவு வேறுபட்ட புள்ளி வழங்கும் முறைகளைக் கொண்டுள்ளன. லீட் சிஎஸ் (LEED CS) முறையில் சான்றுப்படுத்தலுக்காக (Certification) 69 புள்ளிகள் கொடுக்கப்படுகின்றன. கட்டிடங்கள் நான்கு மட்டங்களிலான சான்றுப்படுத்தலுக்கான தகைமைகளைப் பெற முடியும்.

 • சான்றிதழ் - 26 புள்ளிகள்
 • வெள்ளி - 33 புள்ளிகள்
 • தங்கம் - 39 புள்ளிகள்
 • பிளாட்டினம் - 52 புள்ளிகள்

தொழில்சார் சான்றளிப்பு[தொகு]

பசுமைக்கட்டிடத் தொழில் வல்லுனர்கள், LEED சான்றளிக்கப்பட்ட தொழில்வல்லுனர் பரீட்சை யில் சித்தியடைவதன் மூலம் சான்றளிக்கப்பட்ட தொழில் வல்லுனர் ஆக முடியும். இது மேற்படி வல்லுனர்கள் பல்வேறு LEED முறைமைகளூடாகக் கட்டிடங்களைச் சான்றுப்படுத்த உதவ வசதி செய்கிறது. தொழில்சார் சான்றளிப்பு பசுமைக் கட்டிடச் சான்றளிப்பு நிறுவனத்தால் நிர்வாகம் செய்யப்படுகிறது.

Other national rating systems[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. "7 உலக வணிக மையம், நியூ யார்க்கின் முதலாவது பசுமை அலுவலகக் கோபுரமாகச் சான்று அளிக்கப்பட்டுள்ளது" (PDF). Silverstein Properties. Archived from the original (PDF) on 2006-05-17. பார்க்கப்பட்ட நாள் 2006-05-26.