ஐக்கிய அமெரிக்கப் பசுமைக் கட்டிட அவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐக்கிய அமெரிக்கப் பசுமைக் கட்டிட அவை (U.S. Green Building Council - USGBC) என்பது ஒரு இலாப நோக்கமற்ற வணிக நிறுவனம் ஆகும். இது, கட்டிடங்களின் வடிவமைப்பு, கட்டுமானம், இயக்கம் ஆகியவற்றில் பேண்தகு தன்மையை உயர்த்துவதில் ஈடுபட்டுள்ளது. ஆற்றல் மற்றும் சூழல்சார் வடிவமைப்பில் தலைமைத்துவம் (லீட்) என்னும் தர அளவீட்டு முறைமை; சூழலுக்குத் தீங்கற்ற கட்டிடப் பொருட்கள், பேண்தகு கட்டிடக்கலைத் தொழில் நுட்பம், இது தொடர்பான பொதுக் கொள்கை ஆகியவை உள்ளிட்ட பசுமைக் கட்டிடத் தொழில் துறையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட கிறீன்பில்ட் (Greenbuild) என்னும் மாநாடு ஆகியவற்றை உருவாக்கியதன் மூலம் இந் நிறுவனம் பரவலாக அறியப்பட்டது.

ஐக்கிய அமெரிக்கப் பசுமைக் கட்டிட அவை, கட்டிடத் தொழிலின் பல துறைகளையும் சேர்ந்த 13,000 க்கும் அதிகமான உறுப்பு நிறுவனங்களைக் கொண்டுள்ளதுடன், சூழலுக்குப் பொறுப்பான, இலாபம் தரக்கூடிய, வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் உகந்த கட்டிடங்களை உருவாக்குவதையும் ஊக்குவித்து வருகிறது. இந் நோக்கங்களை அடைவதற்காக இது பல்வேறுபட்ட திட்டங்களை உருவாக்கிச் சேவைகளையும் வழங்கி வருவதுடன், முக்கிய தொழிற்துறை மற்றும் ஆய்வு நிறுவனங்களுடனும், மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அரச நிறுவனங்களுடனும் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது.