ஆன்சு கிறிட்டியன் கிராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆன்சு கிறிட்டியன் கிராம்
Hans Christian Gram
பிறப்புசெப்டம்பர் 13, 1853
சேம்சு டவுன்
இறப்புநவம்பர் 14, 1938
துறைநுண்ணுயிரியல்
ஆய்வு நெறியாளர்Japetus Steenstrup

ஆன்சு கிறிட்டியன் யோக்கிம் கிராம் (Hans Christian Joachim Gram, செப்டம்பர் 13, 1853 - நவம்பர் 14, 1938) டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பாக்டீரியாவியல் (நுண்ணுயிரியியல்) வல்லுநர். இவரின் தந்தையார் பெடரிக் டெர்க்கெல் யூலியசு கிராம் என்னும் சட்டவியல் பேராசிரியர், தாயார் லூயிசு கிறிட்டியன் ரூலுண்டு.

ஆன்சு கிறிட்டியன் கிராம், கோப்பனேகன் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் (நிலைத்திணையியல்) படித்தார். உயிரியலாளர் யபேட்டசு இசுட்டீன்சுட்ரப் (Japetus Steenstrup) என்பாரின் தாவரவியல் உதவியாளரரக இருந்தார். தாவரவியல் அறிமுகத்தால், மருந்தியல், நுண்ணோக்கியின் பயன்பாடு ஆகியவற்றைப் பற்றி அறிந்தார்

நீலநிறச் சாயம் பற்றும் நேர்வகை கிராம் பாக்டீரியா (கிராம் பாசிட்டிவ் பாக்டீரியா). நீல நிறக் குச்சிகள் போல் தெரிவது ஆந்த்ராக்ஃசு (anthrax).

இவர் 1878 இல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து 1883 இல் பட்டம் பெற்றார். 1878 முதல் 1885 வரை ஐரோப்பாவில் பல இடங்களுக்குச் செலவு (பயணம்) செய்தார். 1884 இல் பெர்லினில் இருந்தபொழுது பாக்டீரியாக்களில் உள்ள இரு பெரும் வகைகளைப் பிரித்தறிய ஒரு புது முறையைக் கண்டுபிடித்தார். இன்னுட்பத்திற்கு கிராம் நிறச்சாயம் முறை என்று பெயர். அதாவது ஒருசில வகையான பாக்டீரியாக்கள் அவற்றின் செல் அல்லது உயிரணுவின் சுவரில் உள்ள பொருளால் குறிப்பிட்ட நிறச்சாயம் ஏற்றும் பொழுது நீலம் சார்ந்த நிறம் அடைகின்றது. மற்ற வகை பாக்டீரியாக்களில் இவ்வகை நிறம் தங்குவதில்லை. ஆகவே நீல நிறம் ஏற்கும் பாக்டீரியாக்கள் நேர்வகை கிராம் (கிராம் பாசிட்டிவ்)பாக்டீரியாக்கள் என்றும், நீல நிறம் ஏற்காமல் இளஞ்சிவப்பு நிறம் காட்டும் பாக்டீரியாக்களை எதிர்வகை கிராம் (கிராம் நெகட்டிவ்) பாக்டீரியாக்கள் என்றும் கூறுவர். இந்நுட்பம் இன்றளவும் மருத்துவத் துறை பாக்டீரியாவியலில் சீர்வழக்கமான முறையாக பயன்பாட்டில் உள்ளது.

1891 இல் கிராம் கோப்பனேகன் பல்கலைக்கழகத்தில் மருந்தியலில் விரிவுரையாளராக இருந்து பின்னர் அவ்வாண்டில் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். 1900 இல் மருந்தியல் தன் பேராசிரியர் பதவியைத் துறந்து மருத்துவப் பேராசிரியரானார்.

மருத்துவப் பேராசிரியராக ஆன பின்பு மருத்துவ நோய்நாடும் கலைகள் பற்றி நான்கு தொகுதிகள் கொண்ட புத்தகத்தை வெளியிட்டார். இவை டென்மார்க்கில் பரவலாகப் பயன்பட்டன. இவர் 1923 இல் ஓய்வு பெற்றார்.

உசாத்துணை[தொகு]

  • Whitworth, Judith A.; Firkin, Barry G. (2002). Dictionary of medical eponyms. Carnforth, Lancs: Parthenon. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85070-333-7.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  • Hans Christian Joachim Gram at கூ நேம்ட் இட்?

)