உள்ளடக்கத்துக்குச் செல்

ஆனையிறவு சமர், 1991

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதல் ஆனையிறவு சமர்
ஈழப் போர் பகுதி
Elephant Pass bulldozer
போரில் பயன்படுத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மேம்படுத்தப்பட்ட கவச இடிப்புந்து. இன்று இது இலங்கையின் உள்நாட்டுப் போர் நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும்.
நாள் யூலை 10 – ஆகத்து 9, 1991
இடம் ஆனையிறவு, இலங்கை
இலங்கை இராணுவம் வெற்றி
பிரிவினர்
இலங்கை ஆயுதப் படைகள் தமிழீழ விடுதலைப் புலிகள்
பலம்
800 (10,000 வலுவூட்டல்கள்) 5,000
இழப்புகள்
202-400+ கொல்லப்பட்டனர்[1]
156 கொல்லப்பட்டனர், 748 காயமுற்றனர் (இலங்கை அரசின் கூற்று)[2]
602 கொல்லப்பட்டனர்

முதல் ஆனையிறவு சமர் (First Battle of Elephant Pass, குறியீட்டுப் பெயர்: ஆகாய கடல் வெளிச்சமர்) என்பது வன்னி எனப்படும் வடக்குப் பெருநிலப்பரப்பை யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் இணைக்கும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள ஆனையிறவு தளத்தினை இலங்கை இராணுவத்திடமிருந்து கைப்பற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய ஒரு சமாராகும். இந்த சமரானது 1991 ஆம் ஆண்டு சூலை மாதம் துவங்கியது.

சமர்[தொகு]

1991, யூலை, 10 அன்று, ஆனையிறவில் புலிகள் பாரிய தாக்குதலைத் தொடங்கினர். அதுவரை, விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்துக்கும் இடையே நடந்த மோதல்களில் மிகக் கொடூரமானதும், குருதி தோய்ந்த்துமான மோதலாக இந்தச் சமர் இருந்தது. புலிகள் முதலில் தளத்தை சுற்றி வளைத்து வடக்கிலும் தெற்கிலும் உள்ள வழித்தடங்களைத் தடை செய்திருந்தனர். அதனால் எந்த துணைப்படைகளும் உள்ளே வர முடியவில்லை. மேலும், யூலை மாதத் தொடக்கத்தில், விடுதலைப் புலிகள் விமான எதிர்ப்பு பீரங்கிகளை தளத்திற்கு அருகில் கொண்டு சென்றதால், உலங்கு வானூர்திளும் பொருட்களை தளத்திற்கு கொண்டு வர முடியவில்லை. இவ்வாறு தளத்தில் நிலைகொண்டிருந்த இலங்கை சிங்கப் படையணியின் 6வது படைப்பிரிவின் 800 துருப்புக்கள் மாட்டிக் கொண்டாலும், மேஜர் சனத் கருணாரத்ன தலைமையில் அவர்கள் போரிட்டனர். தாக்குதல் தெற்கிலிருந்து வந்தது. முதல் நாளில், இலங்கைப் படைகள் வைத்திருந்த ஒரு சில பதுங்கு குழிகளை புலிகள் கைப்பற்றினர். இந்தத் தாக்குதலின் போது, விடுதலைப் புலிகள் இரும்புத் தகட்டால் மூடப்பட்ட மண் அள்ளும் வாகனங்களையும், உழுவைகளையும் (டிராக்டர்) பயன்படுத்தினர். அவர்கள் இலங்கைப் படைகளின் நிலைகள் மீது நூற்றுக்கணக்கான மோட்டார் குண்டுகளை வீசினர். அடுத்த நாள் தளத்தின் இரண்டாவது கட்டளைத் தளபதி ஒரு மோட்டார் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

கடும் துப்பாக்கிச் சூடு காரணமாக உலங்குவானூர்திகள் தளத்தில் தரையிறங்க முடியவில்லை. இறுதியில், தளத்தின் தெற்குப் பகுதியில் உள்ள ஓய்வு இல்ல முகாம் புலிகளின் கைகளில் விழுந்தது. பலத்த இழப்புகளை தாங்கிக்கொண்டு, இலங்கைப் படையினர் பின்தங்கிய நிலைகளுக்கு நகர்ந்தனர். அந்தி சாயும் போது விடுதலைப் புலிகளின் நூற்றுக்கணக்கான போராளிகள் பல தாக்குதல்களை நடத்தி இராணுவத்தின் அரண்களைச் சுற்றி வளைத்தனர். இதுவரை அறியப்படாத ஒரு இடிப்புந்தை (புல்டோசர்) ஒரு பெரிய கவச வாகனத்தைப் போல கவசத் தகடுகளால் மூடப்பட்டிருப்பதைக் கண்டு தற்காப்புப் படையினர் அதிர்ச்சியடைந்தனர். அதன் மேல் ஒரு இயந்திர துப்பாக்கி பொருத்தப்பட்டிருந்தது மேலும் அதன் உள்ளே பெருமளவிலான ஆயுதங்களும், வெடிமருந்துகளும் இருந்தன.

பாலவேகாயா நடவடிக்கை[தொகு]

துணைப்படைகளை அனுப்புவதற்கு முன்பு நான்கு நாட்கள் கடுமையான சண்டை தொடர்ந்தது. பாதுகாவலர்களின் உதவிக்கு 10,000 துருப்புக்கள் கொண்ட படை அனுப்பப்பட்டது. தளத்திற்கு கிழக்கே 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெற்றிலைக்கேணியில் ஒரு போர்க்கப்பல் தரையிறங்கியது. இருப்பினும், புலிகளிடமிருந்து அதிக எதிர்ப்பை எதிர்கொண்டது. மேலும் ஆனையிறவு தளத்தை அடைய நிவாரணப் படைக்கு 18 நாட்கள் ஆனது.

துருப்புக்கள் இறுதியாக ஆகத்து 3 மாலை ஆனையிறவு தளத்தை அடைந்தன. விடுதலைப் புலிகள் ஆகத்து 9 பின்வாங்கத் தொடங்கினர். அதுவரை தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். இச்சமரில் 950 போராளிகள் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்தது. மேலும் தங்கள் தரப்பில் 156 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 748 பேர் காயமடைந்தனர் என்று இராணுவம் தெரிவித்தது.[2] ஆனால் இராணுவத்தினரில் 400க்கும் மேற்பட்டோர் இறந்ததாக புலிகள் கூறினர். பிற்காலத்திய மதிப்பீடுகளில் இருபுறமும் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2,000 என்று தெரியவந்தது. சனாதிபதி இந்தச் சமரை "அனைத்து போர்களின் தாய்" என்று அழைத்தார். எனினும், 8+12 ஆண்டுகள் கழித்து தளம் மீண்டும் தாக்கப்பட்டது, அந்த நேரத்தில் புலிகள் அதைக் கைப்பற்றினர்.[1]2009 மே மாதம் முடிவடைந்த இலங்கை இராணுவத்தின் "வடக்கு தாக்குதலில்" (மூன்றாவது ஆனையிறவுப் போரில்) இலங்கை இராணுவம் தளத்தைத் திரும்பப் பெறுவதற்கு மேலும் 8+12 ஆண்டுகள் ஆனது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Asia Times
  2. 2.0 2.1 Humanitarian Operation Factual Analysis July 2006 – May 2009 (PDF). Ministry Of Defence Democratic Socialist Republic Of Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 9 September 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனையிறவு_சமர்,_1991&oldid=3960876" இலிருந்து மீள்விக்கப்பட்டது