இடிப்புந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீனாவில் இடிப்புந்து (புல்டோசர்) பயன்படுத்தப்படும் காட்சி

இடிப்புந்து (bulldozer) என்பது இழுவை அல்லது உழுவை இயந்திரம் போன்ற ஓர் இயந்திரத்தின் முன்னே வேண்டாதவற்றை இடித்து அப்புறப்படுத்துவதற்கு ஏற்றவாறு பெரிய தடிப்பான மாழைத்தடுப்பு (உலோகத் தடுப்பு) பொருத்தியிருக்கும் நகரும் எந்திரம். இவ்வகை இடிப்புந்துகள் வீடுகள் கட்டுமானப் பகுதியில் பெரிய அளவிலான மண், குப்பை கூளங்கள் ஆகியவற்றை அசுர வலுவுடன் அகற்றவும், சுரங்கம் போன்ற பகுதிகளிலும் தொழிற்சாலைகளிலும் மிகுந்த எடையான பொருள்களை எடுத்துச் செல்லவும், நகர்த்தவும் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக இடிப்புந்து என்பது இழுவை அல்லது உழுவை எந்திரத்தை மாற்றி முன்னே பொருத்தப்பட்டிருக்கும் தடிப்பான மாழைத்தடுப்பு உள்ள எந்திர உந்தை மட்டுமே சிறப்பாகக் குறிக்கும், எடை மிகுந்த பொருள்களை ஏற்றிச் செல்லும் பிற வண்டிகளை கடுஞ்சுமை உந்துகள் என்றோ, நிலத்தை அகழும் பெரிய உந்துகளை அகழுந்துகள் என்றோ அழைக்கப்படும். இந்த இடிப்புந்துகளின் முன்னே இருக்கும் தடிப்பான தடுப்பு அல்லது தட்டகடு[1] சற்றே உள்வளைந்தோ, தேவைக்கேற்பப் பல்வேறு வடிவுகளிலோ அமைந்திருக்கும்.

அமைப்பு[தொகு]

கேட்டர்பில்லர் நிறுவனத்தின் D10N இடிப்புந்து, bulldozer equipped with a single shank ripper.

பெரும்பாலான இடிப்புந்துகள் வலிமை மிக்க இழுவை அல்லது உழுவை வகை எந்திர வண்டிகள். இழுவை வண்டிகளைப்போலவே நிலத்தில் நன்றாக உறுதியாக பற்றி இருக்கும் தன்மை கொண்டவை. மிகவும் கடுமையான நிலப்பகுதிகளிலும் எளிதில் சாய்ந்துவிடாமல் நகரும் தன்மை கொண்டது. அகலமான அடிப்பக்கம் கொண்டிருப்பதாலும், இந்த எந்திர வண்டிகளின் மிகுந்த எடை சீராக பரவி இருப்பதாலும் நிலைப்புத்தன்மை மிக்கதாக இருக்கும். எடை பரவி இருப்பதால் மணலிலோ சேறிலோ புதைந்து சிக்காமல் நகரும். வழக்கத்துக் கூடுதலான அகல அமைப்பு கொண்ட வண்டிகளை "குறைவழுத்த" (LGP, Low Ground Pressure) அல்லது சதுப்பு ஓடி ("swamp tracks") எந்திரவண்டிகள் என்றழைக்கப்படும். இந்த இடுப்புந்து வகை வண்டிகள் திறம்பட முறுக்குத்திறனைப் பிரித்து இழுவைத் திறனை (dragging ability) கூட்டவல்லன. கேட்டர்பில்லர் பேரெடை உந்துகளில் (பெரிய எடையுள்ள வண்டிகள்) டி9 (D9) என்னும் வகை 70 டன் எடை கொண்ட போர்ப்படைகள் பயன்படுத்தும் தாங்கிகளை இழுத்துச் செல்ல வல்லன. போர்க்களங்களில் பலவகையான தடகளை அகற்றவும் இவை பயன்படுத்தப் படுகின்றன.

இடிப்புந்துகள் பெரும்பாலும் டீசல் உள் எரி பொறி வகை உந்தால் இயங்குவது.

வரலாறு[தொகு]

இலீபெர் (Liebherr) இடிப்புந்து; இதில் பல உழுகால்கள் போன்ற கிழிப்பான்கள் எனப்படும் கூரிய வளைந்த வலிந்த மாழைக்கொம்புகள் உள்ளன. பல்கிழி இடிப்புந்து என சுருக்கமாகக் கூறப்படும்
இடாய்ச்சுலாந்தில் உள்ள சின்ஃகைம் (Sinsheim) என்னும் இடத்தில் உள்ள காட்சியத்தில் இருக்கும் கேட்டர்பில்லர் டி-9 இடிப்புந்து.

உழுவதற்காகப் பயன்படுத்திய எந்திர ஏர்க்கால் எந்திரத்தை மாற்றியமைக்கப்பட்ட ஃகோல்ட்டு என்னும் அமெரிக்க நிறுவன இழுவை எந்திரங்களே முதன்முதல் உருவாக்கப்பட்ட இடிப்புந்துகள். இவை முதல் உலக்ப்போர் காக கட்டத்தில், சாலை அமைப்புகளுக்கும், வேளாண்மை எந்திர பொறிகள் வழி பயிர்த்தொழில் செய்வதற்காகவும் உருவாக்கப்பட்டன.

1923 ஆம் ஆண்டு சேம்சு கம்மிங்சு (James Cummings) என்பாரும், வரைபடக் கலைஞர் சே. ஏர்ல் மெக்லியாடு (J. Earl McLeod) என்பாரும் முதல் இடிப்புந்துக்கான வகுதிப் படம் (design) உருவாக்கினார்கள். இதன் அடிப்படையில் முதல் இடிப்புந்தையும் செய்தார்கள். இதன் ஒப்புரு அமெரிக்க மாநிலம் கன்சாசில் உள்ள மாரரோவில் என்னும் இடத்தின் சிட்டி பார்க்கில் உள்ளது. .[2] திசம்பர் 18, 1923 அன்று, கமிங்சும் மெக்குலியாடும் (Cummings and McLeod) அமெரிக்க புத்தாக்க உரித்துக்குப் பதிவு செய்தனர் (U.S. patent #1,522,378), அது சனவரி 6, 1925 ஆம் நாள் வழங்கப்பட்டது- இவ்வுரிமம் இழுவை உழுவெந்திரத்திற்கான சேர்ப்புக் கருவிக்காகும் ("Attachment for Tractors.")[3].

1920கள் காலப்பகுதியில் மடிபட்டை உருள் கால்கள் அமைப்புகள் கொன்ட எந்திரங்கள் வழக்குக்கு வந்தன (அமெரிக்காவில்), எடுத்துக்காட்டாக கேட்டர்பில்லர் 60. இரப்பர் மெத்துருளி வகை வண்டிகள் 1940 களில் வழக்குக்கு வந்தன. கால்வாய்கள் தோண்டவோ, மண் அணைக்கட்டுகள் போல் எழுப்பவோ வண்டியின் முன்னே தட்டகடு (அகன்ற மாழையால் ஆன பாளம்போன்ற தடிப்பான தடுப்பு) பொருத்தப்பெற்ற வண்டிகள் பயனுக்கு வந்தன. இந்த தட்டகடு பிறபோன்ற குறுக்குவெட்டுத் தோற்றம் கொண்டதாகவோ நேரானதாகவோ இருந்தன வளைந்த தட்டகடு பிற்காலத்தில் தோன்றியது. இதன் ஓட்டுநர் அமர்திருக்கும் இடம் மூடிய அறை போன்ற அமைப்பு இல்லாததாக முதலில் இருந்தது.

இன்று இடிப்புந்துகள் படைக்கும் நிறுவனங்களில் அமெரிக்காவின் கேட்டர்பில்லரும், சப்பானின் கோமாட்ஃசு (Komatsu), இங்கிலாந்தின் சேசிபி (JCB, சே.சி. பேம்ஃபோர்டு), அமெரிக்காவின் சான் தீயிர் (John Deere) போன்றவை முன்னணில் உள்ளவை.

இடிப்புந்து படைப்பகங்கள்[தொகு]

தொழிலகப் புள்ளிக்குறிப்புகளின்படி[4] சாந்தூயி (Shantui) என்னும் நிறுவனமே 2010 ஆம் ஆண்டுக் கணக்கின் படி ஆண்டுக்குப் பத்தாயிரத்துக்கும் மேலானான இடிப்புந்துகளைப் படைத்து உலகில் முதலில் நிற்கின்றது. அடுத்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த கேட்டர்பில்லர் நிறுவனமாகும். இது ஆண்டுக்கு 6,400 இடிப்புந்துகளைப் படைக்கின்றது[4].

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. அகடு என்றால் வயிறு என்று ஒரு பொருள் இருந்தாலும், பெரிய பட்டையான பாளம் போன்ற மலைப்பகுதிகளைக் குறிக்கவும் பயன்படுகின்றது. இங்கே அகன்ற, தடிப்பான மாழையால் செய்யப்பட்ட, தட்டு
  2. Kansas Curiosities: Quirky Characters, Roadside Oddities & Other Offbeat Stuff. பார்க்கப்பட்ட நாள் 2012-04-01.
  3. Patent 1522378, Attachment For Tractors, John E McLeod and James D Cummings, Filed December 18, 1923.
  4. 4.0 4.1 "Shantui officially largest dozer producer in the world". The Earthmover & Civil Contractor. May 2011. http://www.earthmover.com.au/new-equipment/2011/may/shantui-officially-largest-dozer-producer-in-the-world. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடிப்புந்து&oldid=2745722" இலிருந்து மீள்விக்கப்பட்டது