ஆதி தாளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆதி தாளம் கர்நாடக இசையில் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் தாளம் ஆகும். இந்த இசையில் 75% கிருதிகள் ஆதி தாளத்துக்கே அமைக்கப்பட்டுள்ளன.

ஏழு தாள வகைகளுள் திரிபுடை தாளம் வகையைச் சேர்ந்த இத் தாளம், ஒரு லகுவையும், இரண்டு திருதங்களையும் உறுப்பாகக் கொண்டது. இத் தாளத்தின் லகு ஒரு தட்டும் மூன்று விரல் எண்ணிக்கையும் கொண்ட சதுஸ்ர லகு. இதனால் "ஆதி" தாளம் சதுஸ்ர சாதி திரிபுடை தாளம் ஆகும்.

கர்நாடக இசை கற்கத் தொடங்கும் மாணவர்களுக்கு ஆதி தாளமே முதலில் கற்பிக்கப்படும் தாளம் ஆகும். ஆதி தாளத்தின் முதல் உறுப்பான லகுவில் நான்கு கால அலகுகளும், அடுத்து வரும் இரண்டு திருதங்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு கால அலகுகளுமாக மொத்தம் எட்டுக் கால அலகுகள் உள்ளன. கர்நாடக இசை கற்றலில் முதல் பாடமான சுவரவரிசை கற்கும்போது ஸ, ரி, க, ம, ப, த, நி என்னும் ஏழு சுரங்களுடன் மேல் ஸ்தாயியில் வரும் ஸ் சையும் சேர்த்து எட்டு சுரங்களை ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் ஆதி தாளத்துடன் மாணவர்கள் பாடிப் பழகுவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதி_தாளம்&oldid=2239071" இலிருந்து மீள்விக்கப்பட்டது