ஆதன் அவினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆதன் அவினி சங்ககால மன்னர்களில் ஒருவன். புலவர் ஓரம்போகியார் ஐங்குறுநூறு தொகுப்பில் உள்ள மருதத்திணை பாடல்களில் முதல் பத்திலுள்ள 10 பாடல்களையும் 'வாழி ஆதன் வாழி அவினி' என்று அரசவாழ்த்துப் பாடித் தொடங்குகிறார்.

இதில் ஆதன் என்பது தந்தையின் பெயர். அவினி என்பது மகன் பெயர்.

எழினி, வழுதி, ஓரி, காரி, நள்ளி முதலான பெயர்கள் இகர விகுதி பெற்று முடிந்துள்ளதைக் காணமுடிகிறது. அவற்றைப் போல அவினி என்னும் பெயரும் இகர இறுதி பெற்ற ஆண்பால் பெயர்.

மூச்சுக் காற்றில் உள்ளிழுக்கும் காற்று, வெளிவிடும் காற்று என்று இரண்டு வகை உண்டு. உள்ளிழுக்கும் காற்றிலுள்ள உயிர்வளி(பிராண வாயு) உடலில் ஊறிய சத்தை எரிக்க உதவுகிறது. உதவும் காற்று நமக்கு ஆகும் காற்று. ஆகும் காற்று ஆதல் காற்று. ஆதல் காற்றை ஆதன் என்பது தமிழ்.

வெளிவிடும் காற்று அவிந்த காற்று. எரிந்தது அவிந்தால் கரி. அதனால் வெளிவிடும் காற்றைக் கரி+அமில வாயு என்பர். தமிழ் அவிந்த காற்றை அவினி என்று குறிப்பிடுகிறது.

ஆதன், அவினி என்னும் பெயர்கள் இவ்வாறு தோன்றின. இவற்றை மக்களும் தமக்குப் பெயராக்கிக்கொண்டனர்.

இந்த அரசர்களைப் பற்றி வேறு செய்திகள் காணப்படவில்லை.

ஆதன் அழிசி, ஆதன் எழினி, ஆதனுங்கன், ஆதன் ஓரி ஆகிய சங்ககால அரசர்களின் பெயர்கள் இங்கு ஒப்புநோக்கத் தக்கவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதன்_அவினி&oldid=701369" இலிருந்து மீள்விக்கப்பட்டது