ஆதகட கல்வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆதகட கல்வெட்டு எனக் குறிப்பிடப்படுவது, இலங்கையில் வடமத்திய மாகாணத்தில் உள்ள ஆதகட கோறளையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு தமிழ்க் கல்வெட்டு ஆகும். இக்கல்வெட்டு ஒரு புத்த விகாரத்தில் கிடைத்தது. இது ஏழு கற்களில் எழுதப்பட்டுள்ளது. முதலில் இதை வாசித்தவர் தமிழகத்தின் பெயர்பெற்ற கல்வெட்டியலாளர்களில் ஒருவராக கிருஷ்ண சாஸ்திரி. இது தென்னிந்திய சாசனங்கள், நான்காம் தொகுதியில் வெளிவந்தது.[1]

காலம்[தொகு]

இக்கல்வெட்டில் அரசனின் பெயர் இல்லை. ஆனால், அரசன் ஒருவனின் ஆட்சியாண்டு என்று கருதத்தக்க "யாண்டு 28" என்னும் குறிப்பு உள்ளது. இதிலிருந்து, இது முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன் அல்லது முதலாம் இராசாதிராசன் ஆகிய சோழ மன்னர்களில் ஒருவரது காலப்பகுதிக்கு உரியதாக இருக்கலாம் என்றும், இதனால், இது 11 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு முந்தியது என்று பத்மநாதன் கருதுகிறார். எழுத்தமைதியின் அடிப்படையிலும் இது 11 ஆம் நூற்றாண்டுக்குரியதாகவே கருதப்படுகிறது.[2]

உள்ளடக்கம்[தொகு]

இக்கல்வெட்டு உத்தம சோழ ஈஸ்வரம் என்னும் கோயிலுக்கு வழங்கப்பட்ட தானத்தைப் பற்றிக் கூறுகிறது. இத்தானத்தை வழங்கிய அரங்கன் இராமேசன் என்பவனின் கட்டளைப்படியே இந்தக் கல்வெட்டு வெட்டப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்த அரங்கன் இராமேசனைப்பற்றி கல்வெட்டில் எவ்வித தகவலும் இல்லை.[2] இவன் இலங்கையில் இருந்த சோழ நிர்வாகத்தோடு தொடர்புகொண்டவனாக இருத்தல்கூடும்.

கல்வெட்டில் மூன்றுவிதமான தானங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒன்று மூன்று வேலி அளவு கொண்ட நிலம். இது வழங்கப்பட்டதன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. இரண்டாவதாக நந்தா விளக்கு ஏற்றுவதற்காக 20 பசுக்கள் அடங்கிய தானம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மூன்றாவது தானம் ஒரு தென்னந்தோப்பு. இது காலையும் மாலையும் ஐந்து சந்தி விளக்குகளை எரிப்பதற்காக வழங்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. பத்மநாதன், செ., 2006. பக். 121, 122.
  2. 2.0 2.1 பத்மநாதன், செ., 2006. பக். 122.
  3. பத்மநாதன், செ., 2006. பக். 123.

உசாத்துணைகள்[தொகு]

  • பத்மநாதன், சி., இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள், கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 2006.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதகட_கல்வெட்டு&oldid=3319589" இலிருந்து மீள்விக்கப்பட்டது