அ. ரமணா ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரிக்காபுடி ரமணா ராவ் (Arikapudi Ramana Rao) என்பவர் முன்னாள் இந்திய கைப்பந்து விளையாட்டு வீரர் ஆவார்[1]. ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள சாமல்லமுடி கிராமத்தில் 1945 ஆம் ஆண்டு சூலை முதல் தேதியில் இவர் பிறந்தார். 1977-1978 ஆம் ஆண்டுக்கான அருச்சுனா விருது மற்றும் 1990-1991 ஆம் ஆண்டுக்கான துரோணாச்சார்யா விருது ஆகிய இரண்டு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

கல்லூரியில் சேர்ந்த பிறகு ரமணா ராவ் கைப்பந்து விளையாடத் தொடங்கினார். 1966 இல் குண்டூர் இந்துக் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1966 ஆம் ஆண்டு முதல் 1976 வரை இவர் தேசிய கைப்பந்து சாம்பியன் பட்டப் போட்டிகளில் பங்கு பெற்றார், தொடர்ந்து நான்கு ஆண்டுகள் தமிழ்நாடு மாநிலக் கைப்பந்து குழுவுக்கு தலைவராக இருந்துள்ளார். 1976 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற தேசிய கைப்பந்து போட்டியில் இவர் தமிழ்நாடு அணியில் விளையாடினார். இப்போட்டியில் முதல் முறையாக தேசிய கைப்பந்து சாம்பியன் பட்டத்தை தமிழ்நாடு மாநில அணி வென்றது.

1991 ஆம் ஆண்டு பெர்த் நகரில் நடைபெற்ற ஆசிய ஆண்கள் கைப்பந்து சாம்பியன் பட்டப்போட்டியில் பங்கேற்ற இந்திய ஆண்கள் கைப்பந்து அணிக்கு தலைமை பயிற்சியாளராக ரமணா ராவ் பணிபுரிந்தார். 1986 இல் செருமன் சனநாயக குடியரசில் அனைத்துலக கைப்பந்து கூட்டமைப்பு தேர்வு செய்த ஒரு கைப்பந்து பயிற்றுநராகத் தகுதி பெற்றார். இத்தகுதியைப் பெற்ற முதல் இந்தியரும் இவரேயாவார். இதன்மூலம் இந்தியா மற்றும் பல வெளிநாடுகளுக்குச் சென்று கைப்பந்து விளையாட பயிற்சிகள் அளித்தார். 1993-1997 ஆம் ஆண்டுகளில் ஆசிய கைப்பந்து பயிற்றுநர்கள் குழுவில் ஓர் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

அனைத்துலக கைப்பந்து கூட்டமைப்பினுடைய பிராந்திய மேம்பாட்டு மையத்தின் இயக்குநராக ரமனா ராவ் நியமிக்கப்பட்டார். இந்தியாவின் சென்னை நகரில் இந்த மையம் அமைந்திருந்தது. தற்போது ரமணா ராவ் ஆந்திரப் பிரதேச கைப்பந்து சங்கத்தின் தலைவராக உள்ளார்[2]. இந்திய கைப்பந்து கூட்டமைப்பின் பயிற்சியாளர் குழுவின் தலைவராகவும் இயங்கி வருகிறார்[3].

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._ரமணா_ராவ்&oldid=3259252" இலிருந்து மீள்விக்கப்பட்டது