அலுமீனியம் கூட்டுத் தகடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அலுமீனியம் கூட்டுத் தகடு (Aluminium composite panel) என்பது, இரண்டு மெல்லிய அலுமீனியத் தகடுகளை, உலோகமல்லாத நெகிழி போன்ற பொருளினால் ஆன மெல்லிய தகட்டின் இருபுறமும் ஒட்டி உருவாக்கப்படும் ஒரு தகட்டைக் குறிக்கும். இதேயளவு தடிப்புக் கொண்ட அலுமீனியம் அல்லது பிற உலோகத் தகடுகளை விட எடை குறைவான இத்தகடுகள் கட்டிடத் துறையிலும், விளம்பரப் பலகைகள் மற்றும் பிற அமைப்புக்களை உருவாக்குவதற்கும் பெரிதும் பயன்படுகின்றன. தற்காலக் கட்டிடங்கள் பலவற்றில் வெளிப் போர்வையாகப் பயன்படும் இத் தகடுகள் அக்கட்டிடங்களுக்குப் புதுமத் தோற்றத்தைக் கொடுக்கின்றன.[1] வெளிப்புறப் போர்வையாக மட்டுமன்றி, கட்டிடங்களின் உட்புறத்தில் பிரிசுவர்கள், உட்கூரைகள் என்பன அமைக்கவும் இவை பயன்படுகின்றன.

இதன் வெளிப்புற அலுமீனியத் தகட்டுக்கு நெகிழியை அடிப்படையாகக் கொண்ட நிறப்பூச்சுக்களைப் பூசுவதன் மூலம் பல்வேறு நிறங்களையும், பரப்புத்தன்மையையும் கொண்ட கூட்டுத்தகடுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

நன்மைகள்[தொகு]

அலுமீனியம் கூட்டுத் தகடுகள் நெளிவுகள் எதுவும் இன்றி மிகவும் மட்டமாக இருக்கும். இதே தன்மையைப் பெறுவதற்குத் திண்ம உலோகத் தகடுகள் கூடிய தடிப்பு உள்ளவையாக இருக்கவேண்டும். இந்த இயல்பு கெடாமலேயே இத்தகடுகளை மடித்தும், வளைத்தும், வெட்டியும் பல்வேறு வடிவங்களாக ஆக்கிக்கொள்ள முடியும். இவை எடை குறைவானவையாக இருப்பதால், இவற்றைத் தாங்குவதற்கு எளிமையான சட்டக அமைப்புக்களே போதுமானது. இதனால் செலவும் குறைவாக இருக்கும். ஒப்பீட்டளவில் வலிமையானது என்பதுடன், கூடிய கணத்தாக்கங்களைத் தாங்கக்கூடியது. காலநிலைத் தாக்கங்கள், உயர்ந்த வெப்பநிலை போன்றவற்றுக்கும் ஈடுகொடுக்கும் தன்மையும் இதற்கு உண்டு. அதிரும் தன்மை குறைவாக இருப்பதால் காற்றினால் அதிர்ந்து ஒலி எழுப்புவதில்லை. ஒப்பீட்டளவில் நல்ல வெப்பத் தடுப்புத்திறன் கொண்டது.

உசாத்துணை[தொகு]

  1. "Sandwich Technology". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2016.