அறிவுப்பல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈற்று வர‌ியைத் தாண்டி வெளி‌யே தெரியும் மூன்றாவது கடைவாய்ப்பல் (அறிவுப்பல்)

அறிவுப்பல் (wisdom tooth) அல்லது ஞானப்பல் என்பது மனிதர்களில் இருபுற மேல் மற்றும் கீழ்த்தாடைகளில் இருபுறமும் (மொத்தம் நான்கு) முளைக்கக் கூடிய மூன்றாவது கடைப்பல் (third molar tooth) ஆகும். சிலருக்கு இந்தப் பற்கள் முளைக்கும் வேளையில் சிக்கிக் கொள்ள (impacted) வாய்ப்புள்ளது. இவ்வாறு நேருமாயின் பல்லைப் பிடுங்க வேண்டியிருக்கும்.

பெயர்க்காரணம்[தொகு]

பொதுவாக இந்த அறிவுப்பல் 17 முதல் 25 வயதுக்குள் அதாவது ஒரு மனிதன் உலக அறிவைப் (ஞானம்) பெறும் வேளையில் முளைக்கும். ஆகவே இது அறிவுப்பல் அல்லது ஞானப்பல் என்று பெயர் பெற்றது.

சிக்கிக் கொள்தல்[தொகு]

வலது மற்றும் இடது மேல் அறிவுப்பற்கள் பின்னோக்கிச் சிக்கிக் கொண்டவை. இடது கீழ் அறிவுப்பல் கிடைமட்டமாய்ச் சிக்கிக் கொண்டது. வலது கீழ் அறிவுப்பல்லானது பகுதி வளர்ந்து உள்ளே உள்ளதால் படத்தில் தெரியவில்லை

அறிவுப்பற்கள் முளைக்கும் வேளையில் சிக்கிக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு சிக்குவது நான்கு வகையாகப் பிரித்தறியப்பட்டுள்ளது.

முன்னோக்கிய வகை (44%) - மிகப் பொதுவான இவ் வகையில் பல் வாயின் முன்பகுதியை நோக்கிச் சாய்ந்திருக்கும்.

நேர்நோக்கு வகை (38%) - இவ்வகையில் பல் எப்புறமும் சரியாமல் நேராகத் தானிருக்கும். ஆனால் ஈற்று வரியை விட்டு மேலே வராமல் உள்ளேயே இருக்கும்.

பின்னோக்கு வகை (6%) - பல்லானது வாயின் பின்புறத்தை நோக்கிச் சாய்ந்திருக்கும்.

கிடைமட்ட வகை (3%) - பல்லானது கிடைமட்டமாய்ப் படுத்தபடி இரண்டாவது கடவாய்ப்பல்லின் வேருக்குள் வளரும்.

இவ்வாறு மாட்டிக் கொண்ட பற்களில் ஒன்று முதல் இரண்டு விழுக்காடு புற்று வளர வாய்ப்புண்டு.

பகுதி முளைத்தல்[தொகு]

சில வேளைகளில் அறிவுப்பல் முழுதும் முளைக்காமல் இருக்கும். இது ஈற்று வரியை விட்டு வெளியே வராமல் மென்திசுக்களைச் சற்றுத் தூக்கியபடி உள்ளே காணப்படும். இதனால் பல் துலக்கும் போது சரியாகத் தூய்மை செய்ய முடியாது போகும். இதனால் பாக்டீரியத் தொற்று ஏற்படும். இது பல்லைப் பிடுங்க வேண்டிய நிலையை உருவாக்கும்.

அறிவுப்பல் அகற்றம்[தொகு]

அறிவுப்பல் பொதுவாக இரண்டு காரணங்களுக்காக அகற்றப்படும்.

முதல் காரணம் - முளைத்த அறிவுப்பல் பிரச்சினைகளை உண்டு செய்து விட்டதற்காக அகற்றுதல்

இரண்டாம் காரணம் - தற்போதைக்கு பிரச்சினைகள் இல்லையென்றாலும் இனிமேல் பிரச்சினைகள் உருவாகும் வாய்ப்புள்ளதென்று கருதி முன்னெச்சரிக்கையாக அகற்றுதல்

முதற் காரணத்திற்காக அறிவுப்பல்லைப் பிடுங்குவதில் யாருக்கும் கருத்து வேறுபாடில்லை. ஆனால் இரண்டாம் காரணத்திற்காக இப்பல்லைப் பிடுங்குவதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

எச்சத் தன்மை[தொகு]

(பார்க்க: முதன்மைக்கட்டுரை மனிதர்களில் எச்சத்தன்மை)

மனிதனின் மூதாதையர்களில் இந்த மூன்றாம் கடைப்பற்கள் தாவர உணவை நன்கு மென்று தின்ன உதவியிருக்கின்றன. ஆனால் காலமாக ஆக மனிதன் உண்ணும் தாவர உணவின் அளவு சுருங்கத் துவங்கியது. மனிதத் தாடையினளவும் சுருங்கியது. ஆகவே நவீன கால மனிதனின் வாயில் இந்தப் பற்கள் பயனற்ற எச்ச உறுப்புகளாய் எஞ்சி உள்ளன.

வேறுபாடுகள்[தொகு]

அறிவுப்பல் முளைக்காமை (agenesis of wisdom teeth) தாஸ்மானியர்களில் சுழிய விழுக்காடாகவும் மெக்சிகோவின் ஆதிகுடிகளில் நூறு விழுக்காடாகவும் காணப்படுகிறது. இதற்கெல்லாம் PAX9 ஜீன் தான் காரணம்.

பிடுங்கப்படும் பல்லின் பயன்கள்[தொகு]

ஆகஸ்டு 2008 ஆம் ஆண்டில் யப்பான் ஆய்வாளார்கள் பிடுங்கப்பட்ட அறிவுப்பல்லிலிருந்து குருத்தணுக்களைப் (stem cell) பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டனர்.[1] இது உண்மையில் மருத்துவத்துறையின் மாபெரும் வெற்றியாகும். ஆகவே, இனிமேல் அறிவுப்பல் பிடுங்கப்பட்டால் மக்கள் அவற்றிலிருந்து குருத்தணுக்களைப் பிரித்தெடுக்கச் செய்து அவற்றை அவர்களின் பிற்காலத் தேவைகளுக்காகச் சேமித்துக் கொள்ளலாம்.

குறிப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Wisdom teeth
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "அறிவுப்பல்லினின்று குருத்தணு செல்கள்". Archived from the original on 2011-02-09. பார்க்கப்பட்ட நாள் 2010-07-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவுப்பல்&oldid=3894728" இலிருந்து மீள்விக்கப்பட்டது