அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில் (Melaputhukudi Arunjunai Katha Ayyanar Thirukovil) இந்தியாவின் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே மேலப்புதுக்குடியில் அமைந்துள்ள ஓர் அய்யனார் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் குரும்பூரிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவிலும், அம்மன்புரத்திலிருந்து மூன்று கி.மீ தொலைவிலும் மேலப்புதுக்குடியில் கோயில் அமைந்துள்ளது.[1] [2]

தொடர்புடைய கதை[தொகு]

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு திருவைகுண்டத்தை தலைமையிடமாக கொண்டு சிங்கராஜன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அப்பகுதியில் இருந்த தடாகத்திலுள்ள நீர் பன்னீர் போன்று தெளிந்தும், சுவை மிக்கதாகவும் இருந்தது. ஒரு முறை இதிலிருந்து கனகமணி என்ற கன்னிப்பெண் குடத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு சென்றபோது கல்லால் கால் இடறி விழுந்தாள். குடத்து நீர் அவ்விடத்தில் தவம் செய்து கொண்டிருந்த முனிவரை நனைக்க அவர் சினந்து அவளுடைய கையால் நீர் வாங்குபவர் இறப்பர் எனச்சாபமிட்டு அவள் இறக்கும் தருணத்தில் சொல்வது எல்லாம் பலிக்கும் என்றும், மரணத்திற்கு பிறகு அவள் சொர்க்கம் செல்வாள் என்றும் கூறினார். அவ்வூரில் தினமும் ஒரு கனி காய்க்கும் மரத்திலிருந்து கனியை மன்னன் உண்டு வந்தான். அம்மரத்திற்குக் காவல் போடப்பட்டிருந்தது. ஒரு முறை அவள் தண்ணீர் எடுத்துவரும்போது குடத்திற்குள் அந்த கனி விழுந்து விட்டது. வரும் வழியில் 21 தேவாதி தேவதைகள் எதிரில் தண்ணீர் கேட்க, அவள் மறுத்தாள்.மன்னன் கனி களவாடப்பட்டதாக எண்ணினான். அதனை கனகமணி வீட்டில் கண்டனர். கனி எடுத்த காவலர்கள் கன்னியவளை இழுத்து வந்தனர். மன்னன் முன் நிறுத்தினர். குடத்தில் இருந்த நீருக்குள் கனி இருந்தது என காவலர்கள் கூறினர் . தேவதைகளும் அவள் களவாடியிருக்க வேண்டும் எனக் கூற, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இறக்கும் தருவாயில் அவள் தன் தெய்வமான அரிகரபுத்திரனை அழைக்க, அவர் உயிர்ப்பிக்க முயலும்போது அவள் இனி எவரும் தண்ணீருக்காக அலைந்து சாபம் பெறக்கூடாது என்று கூறி அவ்விடத்தில் சுனையாக மாறி இருக்க விரும்புவதாகக் கூறினாள். அருமையான சுனையாக மாறும் அவளைக் காத்தருளுவதாக அய்யன் சாஸ்தா கூறினார். அருஞ்சுனை காத்த அய்யனார் என்றழைக்கப்பட்டார். தவறிழைத்த மன்னன் உயிரை மாய்த்துக்கொண்டான். தேவதைகள் அய்யனாரிடம் மன்னிப்பு கோர, அவர்களைத் தனது கண்காணிப்பில் வைத்துக்கொண்டார் அய்யனார். [3]

மூலவர்[தொகு]

இக்கோயிலில் மூலவர் பூர்ண புட்கலையுடன் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். பரிவார தெய்வங்களாக பேச்சியம்மன், பரமேசுவரி அம்மன், தளவாய்மாடன், வன்னியடி ராசன், கருப்பசாமி, சுடலைமாடன், இசக்கியம்மன், பட்டாணி சாமி, முன்னோடி முருகன் உள்ளனர். [3]

நம்பிக்கை[தொகு]

சுனையில் குளித்தால் தீராத பிணிகள் விலகுவதாகம், அய்யனரை வழிபட்டால் கடன் தீரும் என்றும், துயரிலிருந்து நீங்கலாம் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.[3]

விழா[தொகு]

ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.இக்கோயிலை எட்டு பங்கு இந்து நாடார் உறவின் முறையினர் நிர்வகித்து வருகின்றனர்.[3]

போக்குவரத்து[தொகு]

திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் சுமார் 48 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்மன்புரம் என்னும் ஊரில் இருந்து, தெற்கே பிரிந்து செல்லும் சாலையில் செல்லும் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் அமையப்பெற்றுள்ளது நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்தில் ஏறி அம்மன்புரத்தில் இறங்கி அங்கிருந்து தனியார் வாடகை வாகனங்கள் மூலம் இந்த கோவிலை எளிதில் சென்று அடையலாம்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]