அரச வாகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரச வாகை என்பது வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறைகளில் ஒன்றாக இது உள்ளது. அரசனது இயல்பையோ, வெற்றியையோ எடுத்துரைத்தல் அரச வாகை என்னும் துறை. [1]

அரச வாகை என்னும் துறையைச் சேர்ந்தவை எனப் புறநானூற்றில் 36 பாடல்கள் உள்ளன. [2] பதிற்றுப்பத்து தொகுப்பிலும் உள்ளன.

தொல்காப்பியம் இதனை ‘ஐவகை மரபின் அரசர் பக்கம்’ எனக் குறிப்பிடுகிறது. [3] ஓதல், வேட்டல், ஈதல், படை வழங்குதல், குடியோம்புதல் ஆகிய ஐந்தும் அரச வாகை என உரையாசிரியர்கள் அதனை விரித்துரைக்கின்றனர். [4]

பிறரை நோகச் செய்யாத பண்பு, கொடைத்திறம், நாட்டின் பரப்பு, நாட்டுமக்கள் அச்சமின்றி வாழ்தல், நாட்டில் விழா, வீரம், பகைவர் அச்சம், பகைவர் திறை தருதல், பகை நாட்டு அழிவு, வேள்வி செய்தல் முதலான செய்திகள் அரசவாகையில் கூறப்படுகின்றன.

சேர மன்னர்களான சேரமான் குட்டுவன் தோதை [5], சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை [6] ஆகியோரும், சோழ மன்னர்களான சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி [7] சோழன் கரிகாற் பெருவளத்தான் [8] சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் [9] சோழன் நெடுங்கிள்ளி [10] சோழன் நலங்கிள்ளி [11] சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான் [12] சோழன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி [13] ஆகியோரும், பாண்டிய மன்னர்களான கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி [14] தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் [15] பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி [16] பாண்டியன் நெடுஞ்செழியன் [17] ஆகியோரும், குறுநில மன்னர்களில் வள்ளல்களாகவும், மூவேந்தர்களுக்கு உதவுபவர்களாகவும் விளங்கிய அதியமான் நெடுமான் அஞ்சி [18] ஏனாதி திருக்கிள்ளி [19] பிட்டங்கொற்றன் [20], மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் [21] மலையமான் திருமுடிக்காரி [22] ஆகியோரும் அரசவாகைத் துறை அமைந்த பாடல்களால் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.

அடிக்குறிப்பு[தொகு]

எண்கள் புறநானூற்றுப் பாடலின் வரிசை எண்ணைக் குறிப்பன.

  1. பகல் அன்ன வாய்மொழி இகல் வேந்தர் இயல்பு உரைத்தன்று - புறப்பொருள் வெண்பாமாலை 157
  2. 17, 19, 20, 21, 22, 23, 25, 26, 31, 33, 37, 42, 43, 44, 51, 52, 53, 54, 61, 66, 76, 77, 78, 79, 81, 82, 93, 94, 98, 99, 100, 104, 125, 167, 168, 174
  3. தொல்காப்பியம் புறத்திணையியல் 16
  4. இளம்பூரணர்
  5. 54
  6. 17, 20, 22, 53,
  7. 61,
  8. 66,
  9. 37, 42,
  10. 44,
  11. 31, 33,
  12. 43,
  13. 81, 82, 83,
  14. 21,
  15. 23, 25, 26, 76, 77, 78, 79,
  16. 51, 52,
  17. 19
  18. 94. 98, 99, 100, 104,
  19. 167,
  20. 168
  21. 174
  22. 125,
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரச_வாகை&oldid=3294206" இலிருந்து மீள்விக்கப்பட்டது