அம்பாறை மாவட்ட ஸியாரங்கள் (சமாதிகள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸியாரம் என்னும் அரேபியச் சொல்லுக்கு சமாதி என்ற பொருளுண்டு. முஸ்லிம் பெரியார்களது அடக்கஸ்தலங்களை ஸியாரங்கள் என்று குறிப்பிடுவர். முஸ்லிம் குடியிருப்புகளுக்குச் சான்று பகரும் இவை அம்பாறை மாவட்டத்தில் பல கிராமங்களில் காணப்படுகின்றன. பிற நாடுகளிலிருந்தும், வேறு ஊர்களிலிருந்தும் இங்குள்ள மக்களை இஸ்லாமிய வாழ்க்கையின்பால் அழைப்பதற்காக வருகை தந்து, அவர்களோடு வாழ்ந்து சமாதியடைந்திருக்கும் முஸ்லிம் பெரியார்களின் சமாதிகள் பற்றிய குறிப்புக்களைப் பார்ப்போம்.

ஸியாரங்கள் பட்டியல்[தொகு]

செய்யித் அப்துர்றஹ்மான் ஹழரமி மெளலானா[தொகு]

18 ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் 'ஹழரமெளத்' என்னும் இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட செய்யித் அப்துர்றஹ்மான் மெளலானா மருதமுனைக்கு வந்து, அங்குள்ள மக்களுக்கு மார்க்க ஞானத்தையும், இஸ்லாமிய வழிமுறைகளையும் போதித்து வந்தார்கள். அந்நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இறையடி சேர்ந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்கள். அவர்களது சமாதி மஸ்ஜிதுல் கபீர் பள்ளிவாசலில் உள்ளது.

ஹாஜி ஐதுரூஸ் மெளலானா[தொகு]

1860 ம் ஆண்டு யெமன் நாட்டிலிருந்து மருதமுனைக் கிராமத்துக்கு வருகை தந்து, மஸ்ஜிதுல் நூர் பள்ளிவாசலில் தங்கியிருந்து சன்மார்க்கப் பணியாற்றி வந்த செய்யித் உத்மான் அஹ்தலி மெளலானா அவர்கள், மருதமுனையில் சரிபா உம்மா என்னும் பெண்ணை மணமுடித்து இல்வாழ்க்கை நடாத்தி வந்தார்கள். அவர்களிருவருக்கும் பிறந்த ஐதுரூஸ் மெளலானா அவர்கள் இந்தியாவிலுள்ள பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக்கல்லூரியில் கல்வி கற்று மீண்டும் மருதமுனைக்கு வந்து சன்மார்க்கப் பணியாற்றினார்கள். ஷாதுலியா தரீக்காவின் கலீபாவாகிய இவர்கள் தமது 85 வது வயதில் 1950 ம் ஆண்டு இறையடி சேர்ந்தார்கள். இவர்களது சமாதி பள்ளிவாசலிலேயே அமைந்துள்ளது.

பெரிய மெளலானா அப்பா[தொகு]

ஈராக் நாட்டிலிருந்து 1826 ம் ஆண்டு இஸ்லாமிய பிரச்சார நோக்குடன் அஸ்ஸெய்யிது இஸ்மாயில் மெளலானா அல்பஃதாதி (வலி) அவர்கள் மருதமுனைக்கு வருகை தந்து. மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசலில் தங்கியிருந்து சன்மார்க்கப் பணிகளில் ஈடுபட்டார்கள். அன்னாரின் சமாதி மக்காமடி வீதியில் அமைந்துள்ளது.

சாய்ந்தமருது அஸ்கோல் அவ்லியா[தொகு]

18 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியாவிலிருந்து சாய்ந்தமருதுக் கிராமத்துக்கு வருகை தந்த அஸ்கோல் அவ்லியா என்னும் பெரியார் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் காணியில் தங்கியிருந்து மக்களுக்கு நல்லுபதேசம் செய்து வந்தார்கள். அவர்களது சமாதி பள்ளிவாசலின் முன்பக்கத்தில் அமைந்துள்ளது.

அஸ்ஸெய்கு செய்யிது அப்துல் வாஹிது மெளலானா[தொகு]

சங்கைக்குரிய அஸ்ஸெய்கு செய்யிது அப்துல் வாஹிது மெளலானா பின் அஸ்ஸெய்யிது அப்துல் வஹாப் மெளலானா அல் காதிரிய்யி ஐதுரூஸிய்யி அவர்களின் பரம்பரை தென்னிலங்கை வெலிகமவில் சமாதி கொண்டிருக்கும் அஸ்ஸாதாத் முகம்மதிஸ்மாயில் யெமனி (ரஹ்) அவர்களின் வழியாக முகம்மது நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) அவர்களைச் சென்றடைகின்றது. 1908 ல் பொத்துல் கிராமத்தில் பிறந்த இவர்கள் குர்ஆன், ஹதீஸ் ஆகியவைகளைக் கற்றுத் தேர்ந்த பெரும் அறிஞராகவும், யூனானி வைத்தியராகவும், மாணிக்கக்கல் வியாபாரியாகவும் திகழ்ந்தார்கள். கதிர்காமத்தில் 10 ஆண்டுகளை இறைதியானத்தில் கழித்த இவர்கள், இலங்கையில் மட்டுமன்றி இந்தியாவிலும் இருந்த பிரபல அறிஞர்களோடு நல்லுறவு வைத்திருந்தார்கள். காத்தான்குடி, கிண்ணயா, கந்தளாய், முள்ளிப்பொத்தானை முதலிய இடங்களில் பள்ளிவாசல்களை நிறுவ முக்கிய காரணகர்த்தாவாக இருந்த அன்னாரின் சமாதி சாய்ந்தமருது அக்பர் பள்ளிவாசலில் அமைந்திருக்கின்றது.

அஸ்ஸெய்கு ஹாஜா ஜெளஹர்சா சிஸ்தி[தொகு]

இந்தியாவின் மலபார் பிரதேசத்தைச் சேர்ந்த குண்டுவெட்டி கிராமத்தில் பிறந்த ஹாஜா ஜெளஹர்சா சிஸ்தி அவர்கள் 1880 ம் ஆண்டு சாய்ந்தமருது ஊருக்கு வந்து வாழ்ந்திருந்தார்கள். செல்வந்தராக வாழ்ந்த அவர்கள் மக்களுக்கு நல்லுபதேசம் செய்தது மட்டுமன்றி, சிறந்த தர்மவானாகவும் விளங்கினார்கள். மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட அன்னாரின் சமாதி அவர்கள் வாழ்ந்த வீட்டிலேயே அமைந்துள்ளது. தற்போது அந்தக் காணியில் பள்ளிவாசலொன்றும் இயங்கி வருகின்றது.

மாவடிப்பள்ளி அஸ்ஸெய்கு செய்யது செயின் மெளலானா[தொகு]

காரைதீவு - சம்மாந்துறை பிரதான வீதியின் அருகாமையில் மாவடிப்பள்ளிக் கிராமத்தில் அமைந்திருக்கும் சுமார் 300 வருடங்கள் பழைமையானதும், ஹயாத்து நபியென்று அழைக்கப்படும் ஹில்ரு (அலை) அவர்களின் நினைவிடத்தை அஸ்ஸெய்கு செய்யது செயின் மெளலானா அவர்கள் தமது குடும்பத்தினரோடு பராமரித்து வந்தார்கள். அங்கேயிருந்து மெளலானா அவர்கள் மக்களுக்கு சன்மார்க்க போதனை செய்து, பல அற்புதங்களையும் புரிந்து வந்தார்கள். மக்களின் நலனுக்காக மெளலானா அவர்களால் நட்டு வைக்கப்பட்டிருக்கும் விஷக்கல் மற்றும் கிணறு ஆகியவை இன்றும் உள்ளன. மக்களை இறைவழியில் நடாத்தும் பொருட்டு காலி, மாத்தளை, காத்தான்குடி ஆகிய ஊர்களில் தக்கியாக்களை அமைத்தார்கள். அவைகள் இன்றும் 'செயின் மெளலானா தக்கியா' என்று அழைக்கப்படுகின்றன. அன்னாரின் சமாதி ஹில்ரு (அலை) அவர்களின் நினைவிடத்திலேயே அமைந்துள்ளது.

கொண்டவட்டுவான் வீரையடி அப்பா[தொகு]

கொண்டவட்டுவான் அம்பாறைக்கு மேற்கே 5 கிலோமீற்றர் தூரத்திலுள்ள ஒரு புராதன கிராமமாகும். இங்கு நெல் வயல்கள், குளம் மற்றும் சிறிய முஸ்லிம் குடியிருப்பு, சிறியதொரு தர்ஹா ஆகிய இருந்தன. தற்போது குடியிருப்பு எதுவும் இல்லை. இராணுவ பயிற்சி முகாம் மாத்திரம் உண்டு. அக்கிராமத்தில் இயற்பெயர் தெரியாத வீரையடி அப்பா என்னும் பெரியாரின் சமாதி அமைந்துள்ளது. வீரை மரத்தின் கீழே இச்சமாதி இருப்பதால் மேலே குறிப்பிடப்படும் பெயர் வந்திருக்கலாம்.

மல்கம்பிட்டி கலந்தர், சிக்கந்தர் அவுலியாக்கள்[தொகு]

மல்கம்பிட்டி சம்மாந்துறைக்குத் தெற்கே அமைந்துள்ள நெற்காணிகள் சூழ்ந்திருக்கும் ஒரு கிராமாகும். சம்மாந்துறையில் மக்கள் வாழத்தொடங்கிய சமகாலத்தில் அல்லது அதற்கு முன்பே மல்கம்பிட்டி பிரசித்தி பெற்று விளங்கியது. ஈரான் நாட்டின் கொரஸான் பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரர்களான மெளலானா சிக்கந்தர் (ரஹ்), மெளலானா கலந்தர் (ரஹ்) ஆகிய இருவரும் அங்கு வந்து, அப்பிரதேச மக்களுக்கு சன்மார்க்க நெறியைப் புகட்டி அவர்களோடு வாழ்ந்திருந்தார்கள். சகோதரர்கள் இருவருடைய சமாதிகளும் அங்குள்ள சிறிய தர்ஹாவில் அருகருகே அமைந்துள்ளன. அவர்களின் சீடர்களான கட்டப்பக்கீர் அப்பா, அலிமலுங்கு அப்பா, அஸானியா உம்மா ஆகியோர்களின் சமாதிகளும் தர்ஹா காணியில் அமைந்திருக்கின்றன.

காட்டவுலியா[தொகு]

இவர்களது சமாதி சம்மாந்துறை நெல்லுச்சேனைக் கண்டம் என்னும் வயல்வெளியில் அமைந்துள்ளது. இப்பெரியாரின் ஊர், பெயர் தெரியாமலுள்ளது. மக்கள் காடு வெட்டி கழனிகளாக்குகின்ற போது இச்சமாதியைக் கண்டதனால் காட்டவுலியா என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

குருந்தையடியப்பா[தொகு]

இப்பெரியாரின் சமாதி சம்மாந்துறைக்கு வடமேற்கே குடாவட்டை நடுக்கண்டம் என்னும் வயல்வெளியில் அமைந்துள்ளது. ஊர், பெயர் தெரியாத இப்பெரியார் அங்குள்ள குருந்தை மரத்தினடியில் தியானத்தில் அமர்ந்திருந்தபோது சமாதியடைந்ததனால் குருந்தையடியப்பா என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம். ஆண்டுதோறும் அப்பிரதேச மக்கள் இவ்விடத்தில் ஒன்றுகூடி, அன்னாரின் புகழ் பாடி அன்னதானம் வழங்குகின்றனர்.

மஸ்தார் வாப்பா[தொகு]

ஆதம்பாவா என்னும் இயற்பெயரைக் கொண்டவரும், "மலங்கர் ஹாஜி" என்று தம்மைத்தாமே அழைத்துக்கொண்டவருமான மஸ்தார் வாப்பா அவர்கள் சம்மாந்துறையைச் சேர்ந்தவர்கள். சிறு வயதில் தென்னிந்தியாவுக்குச் சென்று சன்மார்க்கக் கல்வியைப் பயின்ற பின்னர், அங்குள்ள முத்துப்பேட்டை தர்ஹாவில் சில காலம் தங்கியிருந்தார்கள். 1933 ம் ஆண்டு தனது சொந்த ஊரான சம்மாந்துறைக்கு வந்து வாழ்ந்தார்கள். மறைவான ஆன்மீக விடயங்களை தம்மை நாடி வந்த மக்களுக்குப் போதித்ததனால், சம்மாந்துறை மட்டுமன்றி ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் வாப்பா அவர்களிடம் வந்து ஆசி பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். 1960 ம் ஆண்டு இறையடியெய்திய அன்னாரின் சமாதி அவர் வாழ்ந்த சிறிய குடிசையிலேயே அமைந்துள்ளது.

இறக்காமம் சேகு. சரீப் அவுலியாக்கள்[தொகு]

1740 ம் ஆண்டு இந்தியாவிலிருந்து இறக்காமத்துக்கு வருகை தந்த பெரியார்களான சேகு (ரஹ்). சரீப் (ரஹ்) சகோதரர்கள் அங்குள்ள மக்களுக்கு சன்மார்க்க நெறியைப் புகட்டி வாழ்ந்திருந்த காலத்தில் அங்கேயே காலமானார்கள். அவர்கள் இருவருடைய சமாதிகளும் இறக்காமம் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் பரிபாலிக்கப்பட்டு வருகின்றது.

விறுமாண்டவர்[தொகு]

18 ம் நூற்றாண்டில் பர்மா (மியன்மார்) விலிருந்து வந்து நிந்தவூர், அல்லிமுல்லை என்னும் வயற்பிரதேசத்தில் வாழ்ந்திருந்த இப் பெரியாரின் இயற்பெயர் தெரியாது. "பர்மா ஆண்டகை" என்பது விறுமாண்டவர் என்று திரிபடைந்திருக்கலாம். அன்னாரின் சமாதி மேற்படி வயற்பிரதேசத்திலேயே அமைந்துள்ளது.

அட்டப்பள்ளம் நாற்பது முழ அவுலியா[தொகு]

அட்டப்பள்ளம் நிந்தவூருக்கு அருகாமையில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். ஏறத்தாள 300 வருடங்களுக்கு முன்னர் அரபு நாடுகளுள் ஒன்றிலிருந்து இங்கு வருகை தந்த இப்பெரியாரின் பெயர் தெரியாமலுள்ளது. இப்பிரதேசத்தில் காடு வெட்டிப் பயிர் செய்யச் சென்றவர்களினால் இச்சமாதி கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு ஆலமரங்களுக்கு இடையிலுள்ள சமாதி நாற்பது முழம் (60 அடி) நீளமாக இருப்பதால் மேற்படி பெயர் ஏற்பட்டது. தற்போது சமாதியின் அருகில் சிறியதொரு பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது. இது மாதிரி வேறு 40 முழம் நீளமான சமாதிகள் இலங்கையின் வேறு சில பகுதிகளிலும் உள்ளதாக அறிய முடிகிறது.

வெள்ளி ஆலிம் சாஹிபு[தொகு]

காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட வெள்ளி ஆலிம் சாஹிபு அவர்கள் சிறுவயதில் தென்னிந்தியாவில் சன்மார்க்கக் கல்வியைக் கற்று பின்னர் அட்டாளைச்சேனையில் வாழ்ந்து ஆன்மீக நெறியைப் பரப்பினார்கள். அன்னாரின் சமாதி அட்டாளைச்சேனை சூபி மன்ஸிலில் அமைந்துள்ளது. அங்கு அப்துர் ரஹ்மான் ஆலிம் அவர்களது சமாதியும் உள்ளது.

பக்கீர் மிஸ்கீன் அலிஷா மஃபூப்[தொகு]

அட்டாளைச்சேனைக்கும் அக்கரைப்பற்றும் இடையில் உள்ள தைக்கா நகர் என்று அழைக்கப்படும் கிராமத்தில், இந்தியாவிலிருந்து சன்மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்வதற்காக இங்கு வருகை தந்து சிறு குடிசையில் வாழ்ந்திருந்த பெரியார் பக்கீர் மிஸ்கீன் அலிஷா மஃபூப் அவர்களின் சமாதி, அவர்கள் வசித்த இடத்திலேயே அமைந்துள்ளது.

பட்டினப்பள்ளி அஸ்ஸெய்கு அப்துஸ்ஸமது மெளலானா[தொகு]

18 ம் நூற்றாண்டில் யெமன் தேசத்திலிருந்து செய்கு இஸ்மாயில் மெளலானா அவரது தோழர் செய்யிது அப்துல் காதிர் மெளலானாவுடன் பிரயாணம் செய்த பாய்மரக்கப்பல் புயற்காற்றில் சிக்கியதனால் அவர்களிருவரும் இலங்கைக்கரையை வந்தடைந்தனர். வெலிகாமத்தில் திருமணம் செய்த செய்கு இஸ்மாயில் மெளலானா அவர்களுக்குப் பிறந்தவர்தான் அஸ்ஸெய்கு அப்துஸ்ஸமது மெளலானா அவர்கள். தனது சிறிய வயதிலேயே புனித குர்ஆனை மனனம் செய்திருந்த அவர்கள் அக்கரைப்பற்றில் திருமணம் முடித்து வாழ்ந்தார்கள். மக்களுக்கு சன்மார்க்க போதனை செய்வதிலும் ஆன்மீக நெறியைப் பரப்புவதிலும் தனது முழு நேரத்தையும் செலவிட்ட அவர்களை மக்கள் "சின்ன மெளலானா" என்று பிரியத்துடன் அழைத்து வந்தார்கள். அன்னாரின் சமாதி அக்கரைப்பற்று பட்டினப்பள்ளி முன்றலில் அமைந்துள்ளது.

அம்பலத்தாறு (வேகாமவெளி) செய்கு சிக்கந்தர் அவுலியா[தொகு]

அக்கரைப்பற்றிலிருந்து நீத்தை வழியாக மாந்தோட்டம் கிராமத்திற்குச் செல்லும் வழியில் 20 கிலோமீற்றர் தூரத்தில் அம்பலத்தாறு கிராமம் உள்ளது. சுமார் 250 வருடங்களுக்கு முன்னர் செய்கு சிக்கந்தர் அவுலியா அவர்கள் தனது குடும்பத்தாருடன் இங்கு வாழ்ந்து மக்களுக்கு ஞான போதனை செய்து மக்களை நல்வழிப்படுத்தினார்கள். அன்னாரின் சமாதி இங்குள்ள சிறிய பள்ளிவாசலில் அமைந்தள்ளது. தற்போது பள்ளிவாசல் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  • சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் வரலாறு - எஸ்.எச்.எம்.ஜெமீல் - 1989
  • மருதமுனை மஸ்ஜிதுல் நூர் பள்ளிவாசல் யாப்பு - 1989.09.01
  • Monograph of Batticaloa District of Eastern Province by Mudaliyar S.O.Kanagaratnam
  • 1921 and Phillips Baldaus True and Exact Description of the Grater Island of Ceylon - 1672