உள்ளடக்கத்துக்குச் செல்

அந்தோனியோ பொக்காரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்தோனியோ பொக்காரோ
பிறப்பு1594
இறப்பு1642

அந்தோனியோ பொக்காரோ (Anthonio Bocarro) என்பவர், 17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் போர்த்துக்கேயரின் கிழக்கிந்திய அரசின் வரலாற்று எழுத்தராக கோவாவில் பணியாற்றியவர். போர்த்துக்கேய அரசரின் கட்டளைக்கு இணங்க கிழக்கிந்தியப் பகுதிக் கோட்டைகள், நகரங்கள், குடியிருப்புக்களுக்கான நூல் (O Livro das Plantas de todas as fortalezas, cidades e povoaçoens do Estado da Índia Oriental) என்னும் அறிக்கையை எழுதியதன் மூலம் இவர் பெரிதும் அறியப்படுகிறார்.

வரலாறு

[தொகு]

அந்தோனியோ பொக்காரோ 1594 ஆம் ஆண்டு போர்த்துக்கலில் உள்ள அப்ரான்தெசு அல்லது லிசுபன் நகரில் பிறந்தார். இவரது தந்தையார் பேர்னோ பொக்காரோ (Fernão Bocarro), இவர் ஒரு மருத்துவர். தாயார் கியோமார் நூனிஸ் (Guiomar Nunes). இவர்கள் கிறித்தவராக மதம் மாறிய யூத இனத்தவர். அந்தோனியோவும் ஒரு ரோமன் கத்தோலிக்கராகவே ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டதுடன், லிசுபனில் இருந்த யேசு சபையினரின் புனித அந்தோனியார் கல்லூரியிலேயே கல்வியும் கற்றார். எனினும், இவர்கள் தமது முன்னோர்களின் மதத்தை முற்றாகவே கைவிட்டதாகத் தெரியவில்லை. 1610 ஆம் ஆண்டில் இவரது தமையனாரான மனுவேல் பொக்காரோ பிரான்சிசு இரகசியமாக மீண்டும் யூத மதத்தில் இணைந்து கொண்டார். இவர் பின்னாளில் ஒரு மருத்துவராகவும், சோதிடராகவும், கணித வல்லுனராகவும் விளங்கியவர். அவரைத் தொடர்ந்து அந்தோனியோவும் மதம் மாறினார். அக்காலத்தில் கிறித்தவராக இருந்து மதம் மாறுவது என்பது குற்றமாகக் கருதப்பட்டது. இந்தச் சிக்கலில் இருந்து தப்ப வேண்டிய தேவை அந்தோனியோவுக்கு இருந்தது. அக்காலத்தில் இன்றைய கேரளாவின் கொச்சியில் யூத இனத்தவர் செல்வாக்குடன் வாழ்ந்து வந்தனர். இது பற்றிக் கேள்வியுற்ற அந்தோனியோ கொச்சிக்குச் செல்ல விரும்பி 1615 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவுக்குக் கப்பல் ஏறினார். கொச்சியை அடைந்த அந்தோனியோ அங்கே சிறிது காலம் ஒரு படைவீரனாகப் பணியாற்றினார். அக்காலத்தில் இசபெல் வியேரா என்பவரைத் திருமணமும் செய்துகொண்டார். ஆறு அல்லது ஏழு ஆண்டுகள் கழிந்த பின்னர் மீண்டும் கத்தோலிக்கராக மாற எண்ணம் கொண்ட அந்தோனியோ, 1624 ஆம் ஆண்டில் மீண்டும் முழுமையான கிறித்தவரானார்.[1]

சிறிது காலத்தின் பின்னர் மலபார் கரையில், கிரங்கனூர் பகுதியில் இருந்த போர்த்துக்கேயக் கப்பற்படையில் பணியாற்றினார். 1631 மே 9 ஆம் தேதி இவர் போர்த்துக்கேய இந்தியாவின் வரலாற்று எழுத்தராகவும், ஆவணக் காப்பகத்தின் காப்பாளர் ஆகவும், அக்காலத்துப் போர்த்துக்கேய வைசுராய் டி நோரன்காவின் கீழ் பணியில் அமர்ந்தார். அவர் 1642ல் அல்லது 1643ல் இறக்கும்வரை சுமார் 11 ஆண்டுகளுக்கு மேல் இந்தப் பதவியில் இருந்தார்.

எழுதிய நூல்கள்

[தொகு]

இவர் கோவாவில் பணியாற்றிய காலத்தில் பல நூல்களை எழுதியுள்ளார். சில நூல்கள் பிற்காலத்தில் அச்சில் பதிப்பிக்கப்பட்டன. வேறு சில காணாமல் போய்விட்டன. இவர் பின்வரும் நூல்களை எழுதியதாகத் தெரிகிறது:

  1. Livro das Plantas de todas as fortalezas, cidades e povoaçoens do Estado da Índia Oriental (கிழக்கிந்தியப் பகுதிக் கோட்டைகள், நகரங்கள், குடியிருப்புக்களுக்கான நூல்)
  2. Década XIII da História da Índia (13 பத்தாண்டுகள் இந்திய வரலாறு)
  3. Livro das Monções (பருவக் காற்றுகள் நூல்)
  4. Da Reforma do Estado da India (இந்திய அரசு தொடர்பான சீர்திருத்தங்கள்)
  5. Livro dos Feitos de Goncalo Pereira (கொன்சாலோ பெரெய்ராவின் பணிகள்)
  6. Cronica dos Feitos de Sancho de vasconcelhos (சான்சோ வாசுக்கொன்செலோசின் பணிகள்)

காணாமல் போய்விட்டதாகக் கருதப்படுவனவற்றுள் இறுதி மூன்று நூல்களும் அடங்கும்.

குறிப்புகள்

[தொகு]
  1. "Antonio Bocarro's Description of Ceylon Translated into English by T. B. H. Abeyasinghe" நூலுக்கு சந்திரா ஆர். டி சில்வா வழங்கிய வரலாற்று அறிமுகம். பக். xiv.

உசாத்துணைகள்

[தொகு]
  • Abeyasinghe, T. B. H. (Translator), De Silva, G. P. S. H., (Honorary Editor), Antonio Bocarro's Description of Ceylon Translated into English, Journal of the Royal Asiatic Society of Sri Lanka, New Series, Volume XXXIX, Special Number, Royal Asiatic Society of Sri Lanka, Colombo, 1996.
  • Mendiratta, Sidh., Goa, Daman and Diu as seen by Pedro Resende: a comparative analysis of his cityscapes (Goa, Dam�o e Diu aos olhos de Resende : an�lise comparativa das vistas representadas), Revist Oriente, 20, 51-62. 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தோனியோ_பொக்காரோ&oldid=2916266" இலிருந்து மீள்விக்கப்பட்டது