உள்ளடக்கத்துக்குச் செல்

அந்தனி மூயார்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அந்தனி மூயார்ட் (6 டிச 1698 - 1 சன 1767) ஒல்லாந்தர் இலங்கையை ஆண்ட காலத்தில் யாழ்ப்பாணத்தின் கட்டளை அதிகாரியாக இருந்தவர். 1762 ஆம் ஆண்டுக்கும் 1766 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இவர் இப்பதவியை வகித்தார்.

வரலாறு

[தொகு]

17 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இருந்தே இவரது முன்னோர்கள் இரண்டு தலைமுறைகளாக இலங்கையிலேயே பிறந்து வளர்ந்தவர்கள். இவரது பாட்டனார் (இவரும் அந்தனி மூயார்ட்) ஒல்லாந்தர் இலங்கையைக் கைப்பற்றிய சில ஆண்டுகளில் ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியில் பணியாற்றுவதற்காக இலங்கைக்கு வந்தார். இவர் இலங்கையின் தென்பகுதியில் உள்ள மாத்தறையில் மணம் முடித்து அங்கேயே காலமானார்.[1] இளைய அந்தனி மூயார்ட்டினது தந்தையார் நிக்கோலசு மூயார்ட் கொழும்பில் பிறந்தவர். தாயார் யோகன்னா. நிக்கோலசு பின்னர் யாழ்ப்பாணத்துக்கு வந்து அங்கேயே வாழ்ந்தார். இளைய அந்தனி மூயார்ட் 1698 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் பிறந்தார்.

இவர் தமது குடும்ப நிகழ்வுகளைப் பற்றித் தொகுத்த நூலில் ஐரோப்பாவுக்குச் சென்றது பற்றிய குறிப்பு எதுவும் இல்லாததால், இவர் யாழ்ப்பாணத்திலேயே தனது கல்வியைக் கற்றிருக்கவேண்டும் என்று ஆர். ஜி. அந்தனீசு கருதுகிறார்.[1] ஒருவர் சாதாரண நிலையில் இருந்து இலங்கையின் ஆளுனராக உயரும் அளவுக்குத் தகுதி பெறக்கூடிய வசதி ஒல்லாந்தர் கால யாழ்ப்பாணத்தில் இருந்திருக்கிறது என்பது அவரது கருத்து. ஆனாலும், தலைமுறை ஆய்வு குறித்த இணையத் தளம் ஒன்றின்படி மூயார்ட் ஒல்லாந்தில் உள்ள லேடன் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.[2]

இவர் யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான எலிசபெத் உர்சுலா வூட்டர்சு என்பவரை 1725 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 18 பிள்ளைகள் பிறந்தனர். அந்தனி மூயார்ட் 1767 ஆம் ஆண்டு சனவரி முதலாம் தேதி யாழ்ப்பாணத்தில் காலமானார். இவரது உடல் கோட்டைக்குள் இருந்த டச்சுத் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவரது வழித்தோன்றல்களும் யாழ்ப்பாணம் பிரித்தானியர் வசமான பின்பும் நீண்டகாலம் யாழ்ப்பாணத்திலேயே வாழ்ந்ததாகத் தெரிகிறது.

தொழில்

[தொகு]

அந்தனி மூயார்ட் 1712 ஆம் ஆண்டில் ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியில் ஒரு படை வீரனாகப் பணியில் சேர்ந்தார். ஒரு ஆயுதம் ஏந்தக்கூடிய படைவீரனாக இருந்தபடியே அரசாங்கத்தின் குடிசார் கடமைகளில் பயிற்சி பெற்றார். அதிலிருந்து விரைவாகப் பல பதவி உயர்வுகளைப் பெற்றார். 1739 ஆம் ஆண்டில் கொழும்பில் "ஒண்டர்கூப்மன்" எனப்படும் "கீழ்வணிகர்" தரத்தில் கணக்கெழுத்தர் பதவியையும், 1743ல், "கூப்மன்" எனப்படும் "வணிகர்" பதவியையும் வகித்த அவர், 1754 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நிர்வாகி ஆகவும் பின்னர் 1762 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தின் கட்டளை அதிகாரியாகவும் பதவி ஏற்றார். அக்காலத்தில் இது இலங்கையில் ஆளுனருக்கு அடுத்தபடியான உயர் பதவி ஆகும். 1765 ஆம் ஆண்டில் அப்போதைய இலங்கையின் ஒல்லாந்த ஆளுனர் "பாரன் வான் எக்" சடுதியாகக் காலமானதைத் தொடர்ந்து, அந்தனி மூயார்ட் இலங்கையின் பதில் ஆளுனர் ஆனார்.

இவர் தனக்குப் பின் கட்டளை அதிகாரியாகப் பதவியேற்ற நொயெல் அந்தனி லெபெக் என்பவருக்கு எழுதிய வழிகாட்டல் குறிப்புக்கள், அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் நிலவிய ஒல்லாந்த ஆட்சியைப் பற்றி அறிந்துகொள்வதற்கு உதவும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இக்குறிப்புப் பிற்காலத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 Anthony Mooyaart, 1766, இல் ஆர். ஜி. அந்தனீசின் அறிமுகம். பக். iii
  2. Genealogy of Antonij Mooyart

உசாத்துணை

[தொகு]
  • Memoir by Anthony Mooyaart, Commandeur of Jaffnapatam, for the Information and Guidence of His Successor, Noel Anthony Lebeck, 1766. Translated by Sophia Pieters, Colombo, 1910.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தனி_மூயார்ட்&oldid=3118424" இலிருந்து மீள்விக்கப்பட்டது