அடுக்கங்கல் தமிழ்-பிராமிக் கல்வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடுக்கங்கல் நெகனூர்பட்டி
அடுக்கங்கல் தமிழ்-பிராமிக் கல்வெட்டு is located in இந்தியா
அடுக்கங்கல் தமிழ்-பிராமிக் கல்வெட்டு
தமிழ்நாடு, இந்தியா
அமைவிடம்செஞ்சி, இந்தியா
ஆள்கூற்றுகள்12°17′14″N 79°26′42″E / 12.28734°N 79.444885°E / 12.28734; 79.444885

அடுக்கங்கல் தமிழ்-பிராமிக் கல்வெட்டு தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், நெகனூர்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அடுக்கங்கல் குன்றின் அடிப்பகுதியில் உள்ள ஒரு பாறையில் பொறிக்கப்பட்டுள்ளது.[1]. நெகனூர்பட்டி செஞ்சிக்கு வடகிழக்கே 6 கிலோமீட்டர் (3.7 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

அடுக்கங்கல் குன்று[தொகு]

அடுக்கங்கல் சமணர் குன்று

பெரிய பாறைக்கற்கள் ஒன்றன் மேல் ஒன்றாகக் குவிந்து கிடப்பது போல் தோற்றமளிப்பதால் அடுக்கங்கல் என்ற வந்தது. [1]அடுக்கங்கல் குன்றின் அடியில் வரலாற்றுக்கு முந்தைய பாறை ஓவியங்களைக் கொண்ட இரு சமண குகைகள் உள்ளன.[2] இக்குகைக்கு வெளியே வலப்பக்கத்தில், பாறை சுவற்றில் சட்டமிடப்பட்ட கி.பி. 4-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் தமிழ்-பிராமிக் கல்வெட்டு காணப்படுகிறது.

சமணர் குகைகள்[தொகு]

அடுக்கங்கல் குன்றின் அடிப்பகுதியில் இருபுறமும் இரண்டு குகைகள் அமைந்துள்ளன. இரண்டு குகைகளிலும் சமணத் துறவிகள் பயன்படுத்திய கல் படுக்கைகளுக்கான தடயங்கள் உள்ளன.ஒரு குகைக்கு அருகில் ஒரு சிறிய குளம் காணப்படுகிறது.

பாறை ஓவியங்கள்[தொகு]

பாறை ஓவியத்தில் ஆண்கள்

குளத்தை ஒட்டி அமைந்துள்ள பாறையில் கி.மு. 1000 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் வெண்ணிற பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. ஓவியத்தில் ஆண்கள் மட்டுமே காணப்படுகின்றனர். விலங்குகள் எதுவும் காணப்படவில்லை. இந்த ஓவியங்களை வரைய சுண்ணாம்பைப் பயன்படுத்தியிருக்கலாம். சில ஓவியங்கள் மங்கியுள்ளன.[3]

தமிழ்-பிராமி கல்வெட்டு[தொகு]

தமிழ்-பிராமி கல்வெட்டு

கி.பி. 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் அடுக்கங்கல் தமிழ்-பிராமி கல்வெட்டை முதன்முதலில் தொல்லியல் ஆய்வாளர் எஸ்.ராஜவேலு 1992 ஆம் ஆண்டு கண்டறிந்தார். தமிழ்-பிராமி எழுத்து முறையிலிருந்து வட்டெழுத்தாக வளரும் நிலையில் இக்கல்வெட்டு உள்ளது. இதற்கு சான்றாக இக்கல்வெட்டின் மெய்யெழுத்துக்கள் அனைத்தும் புள்ளியுடன் காணப்படுகிறது. இக்கல்வெட்டின் தனித்தன்மையும் இதுவேயாகும்.[4][5]

கல்வெட்டு பாடம்:

பெரும் பொகழ் சேக்கந்தி தாயியரு சேக்கந்தன்னி செ யி வித்த பள்ளி [4][1]

பொருள்:

 பெரும்புகை என்னும் ஊரைச் சேர்ந்த சேக்கந்தி என்னும் சமணப் பெண் துறவியின் தாயார் சேக்கந்தி செய்து அளித்த  பள்ளி.[4]

கி.பி. 4 முதல் இவவிடம் சமணத்துறவிகளின் வாழ்விடமாக இருந்துள்ளது. தாய் மகள் ஆகிய இருவர் பெயரும் சேக்கந்தி என்பதாகும். ‘கந்தி’ என்பது சமணப் பெண் துறவிகளைக் குறிக்கும் சொல்லாகும்.[6] பெரும்புகை எனற கிராமம் விழுப்புரம் மாவட்டம், வல்லம் வட்டத்தில் அமைந்துள்ளது.[7]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 அடுக்கம்பாறை தமிழிணையம் - தமிழர் தகவலாற்றுப்படை
  2. தமிழ் பிராமி கல்வெட்டு பகுதியில் பாறைகள் வெடிவைத்து தகர்ப்பு தினமலர் ஆக 07, 2020
  3. Ramesh, D.(2005) "Nadunaattu Samanakovilkal" Second edition, Tamilventhan Pathippagam, Ulundurpettai
  4. 4.0 4.1 4.2 Sridhar, T. S. (2006) "Tamil-Brahmi Kalvettukal", First edition, State Department of Archaeology, Chennai
  5. சங்ககாலத் தமிழ் எழுத்துக்கள் பவானி, மா. கல்வெட்டியல் துறை. தமிழிணையம்
  6. தமிழகக் குகைக் கல்வெட்டுகளில் சமணம் ஐராவதம் மகாதேவன். வரலாறு.காம் இதழ் எண். 33 ஐராவதம் சிறப்புப் பகுதி
  7. Perumpugai Onefivenine