அசர்பைஜானில் அறிவியலும் தொழினுட்பமும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அசர்பைசானில் அறிவியலும் தொழினுட்பமும் (Science and technology in Azerbaijan) பொதுவாக அசர்பைசான் அரசின் கொள்கைகளில் அனைத்து அம்சங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு துறை ஆகும். அசர்பைசான் தேசிய அறிவியல் கழகம் இத்துறையில் தேசியக் கொள்கையை நாட்டில் அமல்படுத்துவதற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான மைய நிறுவனமாகக் கருதப்படுகிறது [1].

அறிவியல் கொள்கை[தொகு]

அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் நிலையான மேம்பாட்டு நடவடிக்கைகளை வழங்குதல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திறன்களைப் பராமரித்தல், அறிவியல் தொழில் நுட்பத்தில் அதிகமான தகுதிவாய்ந்த மனித வளங்களை உருவாக்குவது, மற்றும் அறிவியல் பணி சார்ந்த தொழிலாளர்களின் தொழிலாளர் மதிப்பை அதிகப்படுத்துதல் போன்றவை அறிவியல் கொள்கையின் முக்கிய முன்னுரிமைகளாகக் கருதப்படுகின்றன [2]. அசைபைசானின் தேசிய அறிவியல் கழகத்தின் அறிவியல் நடவடிக்கைகளின் திறனை அதிகரிப்பதற்காக பல செயல்முறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள சமூக-பொருளாதார மற்றும் பிற துறைகளில் வெற்றி பெற்ற விஞ்ஞான ஆராய்ச்சிகளின் முடிவுகளைப் பயன்படுத்தி பல்கலைக்கழகங்களுக்கும் அறிவியல் நிறுவனங்களுக்கும் இடையிலான உறவுகளை ஒருங்கிணைப்பது, அறிவியல் வல்லுநர்களை முறையாகப் பயன்படுத்திக் கொள்வது உள்ளிட்டவை அவற்றில் சிலவாகும். அசர்பைசானில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தினை மேம்படுத்துவதற்கான ஓர் அபிவிருத்தித் திட்ட்த்தை அசர்பைசான் தேசிய அறிவியல் கழகத்தின் நிலையான ஆட்சிக்குழு தயாரித்திருக்கிறது. சமூக-பொருளாதார பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்களிப்பை விரிவுபடுத்துதல், புத்தாக்கச் செயன்முறைகளை வலுப்படுத்துவது மற்றும் நாட்டின் தகவல் வளங்களை அதிகரித்தல் ஆகிய முக்கிய கொள்கைகளை இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது.

அறிவியல் திறன்சார் திட்டத்தின் முக்கிய இலக்குகள்[தொகு]

 • நாட்டின் தற்போதைய மற்றும் முன்னுரிமையுள்ள கோரிக்கைகளுக்கு அசர்பைசானில் உள்ள அறிவியலின் கட்டமைப்பு மற்றும் அதன் உள்ளடக்கத்தை நாட்டின் தற்போதைய மற்றும் முன்னுரிமையுள்ள கோரிக்கைகளுடன் பொருத்தி வரையறை செய்தல்
 • உலக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் போக்குகளுக்கேப நாட்டின் அறிவியல் முன்னேற்றங்களை உறுதிப்படுத்துதல்
 • நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் விஞ்ஞானத்தின் பங்கை அதிகரிக்கச் செய்வது.
 • அறிவியல் தொழில் நுட்ப திறன் வாய்ந்த மனித வளங்களை அதிகரிப்பதற்கு அறிவியல் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் அறிவியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நிபுணத்துவமிக்கவர்களை உருவாக்கும் வசதிகளிருத்தல்
 • சமூக-பொருளாதார மற்றும் சமூக-கலாச்சார சிக்கல்கள்களை தீர்ப்பதில் தொடர்புடைய விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு முன்னுரிமைகள் கொடுத்து வரையறுத்தல்
 • அடிப்படை அறிவியல் ஆய்வுகளை விரிவுபடுத்துதல்
 • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் மேலாண்மை முறைமையை மேம்படுத்துதல்
 • அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களில் அறிவியல் நிதி இயக்கமுறைகளை மேம்படுத்துதல்

அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் உள்கட்டமைப்பை நவீனப்படுத்துதல் மற்றும் சட்ட-அறிவியல் அடிப்படையை உருவாக்குதல்

 • அறிவியல் நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளைப் பாதுகாத்தல்
 • அறிவியல் கல்வி மற்றும் உற்பத்திக்கு உரிய ஒருங்கிணைப்பு வழங்குதல்
 • அறிவியல் தொழிலாளர்களின் சமூக நிலைமையை மேம்படுத்துதல்
 • அறிவியல் தகவலை வழங்கும் வாய்ப்புகளை வலிமைப்படுத்துதல்

அனைத்துலக அறிவியல் அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு அசர்பைசான் நாட்டின் அறிவியல் செயற்பாடுகளை முடுக்கி விடுதல் [3]

அறிவியலுக்கு நிதி ஒதுக்கும் போக்குகள்[தொகு]

2016 ஆம் ஆண்டு அசர்பைசான் நாடு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2% நிதியை அறிவியல் வளர்ச்சிக்கு செலவழித்ததாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2000 ஆம் ஆண்டிலிருந்து இதே போக்கு நிலையாக உள்ளது. அறிவியல் ஆராய்ச்சிகளில் அசர்பைசானின் பங்கு 2000 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.3% ஆக இருந்த்து. இந்த அளவு 2016 ஆம் ஆண்டில் 0.2% ஆகக் குறைந்துள்ளது.

அறிவியல் அமைப்புகளும் நிறுவனங்களும்[தொகு]

சமூக அறிவியல், மனிதாபிமான அறிவியல், மருத்துவ உயிரிய அறிவியல், இரசாயன அறிவியல், புவி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் ஆகிய துறைகளில் அறிவியல் ஆய்வுகளை வழங்கும் முப்பத்தைந்திற்கும் மேற்பட்ட அறிவியல் நிறுவனங்கள் அசர்பைசான் நாட்டில் உள்ளன. தகவல் தொழில்நுட்ப நிறுவனம், கதிரியக்க இடர்பாடுகள் நிறுவனம், நாசுரெத்தின் துசி வானியற்பியல் ஆய்வகம், அமைப்புமுறை கட்டுபாட்டு நிறுவனம் கணிதவியல் நிறுவனம், இயக்கவியல் மற்றும் இயற்பியல் நிறுவனம், இயற்பியல் கணிதம், தொழில்நுட்ப அறிவியல் ஆகிய பிரிவுகளில் ஆய்வுகளை மேற்கொள்ளும் இயற்பியல் நிறுவனம், கனிம வேதியியல் மற்றும் வினையூக்கவியல் நிறுவனம், பலபடி பொருட்கள் நிறுவனம், பெட்ரோ வேதிப்பொருள் செயல்முறைகள் நிறுவனம், வேதிக்கூட்டுப் பொருள்கள் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் வேதியியல் அறிவியியல் துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. புவியியல் நிறுவனம், நிலவியல் நிறுவனம் , புவியியற்பியல் நிறுவனம், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் போன்றவை புவி அறிவியல் துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. இவை தவிர மரபணு வளங்கள் நிறுவனம், மர ஆய்வியல் நிறுவனம், அரிமானம் மற்றும் நீர்ப்பாசன நிறுவனம், மண் ஆய்வியல் நிறுவனம், வேளாண்மை நிறுவனம், நுண்ணுயிரியியல் நிறுவனம், உடலியங்கியல் நிறுவனம், தாவரவியல் நிறுவனம், மத்திய தாவரவியியல் பூங்கா, விலங்கியல் நிறுவனம், மூலக்கூற்று உயிரியல் நிறுவனம், உயிரி நுட்பவியல் நிறுவனம் போன்ற நிறுவனங்கள் உயிரியல் மற்றும் மருத்துவ அறிவியல் துறையின் கீழ் இயங்கிவருகின்றன. ஒட்டுமொத்தமாக 15 நிறுவனங்கள் சமூக மற்றும் மனிதாபிமான அறிவியல் துறையின் கீழ் இயங்குகின்றன. நாட்டுப்புற கலைகள் நிறுவனம், நிசாமி கஞ்சாவி என்ற பெயரில் இயங்கும் இலக்கியவியல் நிருவனம், கலை மற்றும் கட்டிடக் கலை நிறுவனம், மொழியியல் நிறுவனம், ஓலைச்சுவடிகள் நிறுவனம், தத்துவவியல் நிறுவனம், பொருளாதாரவியல் நிறுவனம், அறிவியல் வரலாறு நிறுவனம், தொல்பொருளியல் நிறுவனம், மனித இன அமைப்பியல் நிறுவனம் போன்றவை இவற்றுள் முக்கியமான நிறுவனங்கள் ஆகும்.[4]

அறிவியல் மேம்பாட்டு அறக்கட்டளை[தொகு]

குடியரசுத் தலைவர் ஆணைக்கு இணங்க 2009 ஆம் ஆண்டு இந்த அறக்கட்டளை நிறுவப்பட்டது. நாட்டின் விஞ்ஞான-தொழில்நுட்ப திறன்களை பராமரிப்பது மற்றும் அத்திறன்களை பொருளாதார வளர்ச்சியில் பயன்படுத்துவது, சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விஞ்ஞான ஆராய்ச்சித் திட்டங்களையும் இதர அறிவியல் நிகழ்வுகளையும் விரிவுபடுத்துவது, அரசாங்கத்தின் அறிவியல் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதி ஆதாரத்தை வழங்குவது போன்றவை இந்த அறக்கட்டளையின் நோக்கங்களாகும்[5].

உயர் தொழில்நுட்பப் பூங்காக்கள்[தொகு]

குடியரசுத்தலைவரின் 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆணைக்கிணங்க அசர்பைசானில் உயர் தொழில்நுட்பப் பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. தொழில் சார்ந்த உந்துதல் திட்டங்களின் பயன்பாட்டு வழிமுறைகளை நிறுவுதல், பேரளவு உற்பத்திக்கு ஏற்ற தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் நடைமுறை அறிவியல் நடவடிக்கைகளைச் செயல்படுத்துதல் போன்றவை உயர் தொழில்நுட்ப பூங்காவின் முக்கிய குறிக்கோள்கள் ஆகும் [6][7].

முக்கிய அறிவியல் அறிஞர்கள்[தொகு]

அசர்பைசானைச் சேர்ந்த தெளிவுறு கணக் கோட்பாடு ஆய்வாளர் லோட்பி ஏ சாடேக் உள்ளுர் மற்றும் அனைத்துலக அறிவியலுக்கு பெரும் பங்களிப்பை நல்கியுள்ளார்[8]. நசீம் முராதோவ்[9], ஆசாத் மிர்சாயான்சாடே[10], யூசிப் மாமாதாலியேவ்[11], லெவ் லந்தௌ[12], கரிப் முர்சுதோவ்[13], கலீல் கலந்தர்[14], அலிக்ரம் அலியேவ்[15], மசூத் அஃபாண்டியேவ் உள்ளிட்டோர் முக்கிய சில அறிவியல் அறிஞர்களாக அறியப்படுகிறார்கள்.

அறிவியல் வெளியீடுகள்[தொகு]

இருபதுக்கும் மேற்பட்ட அறிவியல் செய்தி இதழ்கள் அசர்பைசான் நாட்டில் வெளியிடப்படுகின்றன. தகவல் தொழில்நுட்பவியல் பிரச்சினைகள், தகவல் சமூகத்தின் பிரச்சினைகள் உள்ளிட்டவை இதில் சிலவாகும். அசர்பைசான் தேசிய அறிவியல் கழகம் அறிவியலின் பல்வேறு பிரிவுகளில் அறிவியல் பத்திரிகைகளை வெளியிடுகிறது[16].

வெளியீடுகள் பதிப்பு எண்ணிக்கை மொழிகள்
அசர்பைசானும் அசர்பைசானிகளும் 1 இதழ் , 4 குயர் தொகுதி 280 ஆங்கிலம்/ உருசிய மொழி
[பயன்பாட்டு மற்றும் கணக்கிட்டு கணிதம் 2 300
உடலியக்கவியல் நிறுவனப் பரிவர்த்தனைகள் 2 500 அசர்பைசானி மொழி, உருசிய மொழி
நுண்ணுயிரியியல் நிறுவனப் பரிவர்த்தனைகள் 1 100 அசர்பைசானி மொழி, உருசிய மொழி
மண் அறிவியல் மற்றும் வேளாண் அறிவியல் நிறுவனப் பரிவர்த்தனைகள் 1 150 அசர்பைசானி மொழி, உருசிய மொழி
மரபணு மற்றும் தேர்வு அறிவியல் நிறுவனப் பரிவர்த்தனைகள் காலமுறை அல்ல 200 அசர்பைசானி மொழி, உருசிய மொழி
விலங்கியல் நிறுவனப் பரிவர்த்தனைகள் காலமுறை அல்ல 200 அசர்பைசானி மொழி, உருசிய மொழி
எல்டுரன் ஆண்டுக்கு 2 இதழ்கள், 8 குயர் தொகுதி 1000 அசர்பைசானி மொழி
கிழக்கத்திய தத்துவத்தின் பிரச்சினைகள் செய்தி இதழ் ஆண்டுக்கு 2 இதழ்கள், 9 குயர் தொகுதி 250 அசர்பைசான் மொழி, செருமானிய மொழி, ஆங்கிலம், பிரஞ்சு மொழி, துருக்கிய மொழி, பாரசீக மொழி, அரபி மொழி
கியெந்தர்சுனாசிலிக் ஆண்டுக்கு 1 இதழ், 11 குயர் தொகுதி 500 அசர்பைசானி மொழி / ஆங்கிலம்
அசர்பைசான் தேசிய அறிவியல் கழகத்தின் துருக்கிய மொழிக்குடும்ப பத்திரிகை ஆண்டுக்கு 1 இதழ், 8 குயர் தொகுதி 250 அசர்பைசானி மொழி, உருசிய மொழி
பெட்ரோ வேதியியல் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு செயல்முறை 6 ஆங்கிலம்/உருசிய மொழி
அசார்பைசானிய வேதியியல் பத்திரிகை ஆண்டுக்கு 4 , 8 குயர் தொகுதி 250 அசர்பைசானி மொழி, உருசிய மொழி
அசர்பைசானிய வானியல் இதழ் ஆண்டுக்கு 4 , 8 குயர் தொகுதி 250 அசர்பைசானி மொழி/ஆங்கிலம்/உருசிய மொழி
அசர்பைசானிய இயற்பியல் ஆண்டுக்கு 4 , 8 குயர் தொகுதி 250 அசர்பைசானி மொழி/ஆங்கிலம்/உருசிய மொழி

மேலும் 2 அனைத்துலகப் பத்திரிகைகள் உட்பட அசர்பைசான் கல்வி அமைச்சகத்தின் கீழ் பல அறிவியல் பத்திரிகைகள் வெளியிடப்படுகின்றன. இந்த பத்திரிகைகளில் பெரும்பாலானவை பல்கலைக்கழகங்களில் வெளியிடப்படுகின்றன. அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை இதழ், "சுற்றுச்சூழல் மற்றும் நீர் தொழிற்துறை" உள்ளிட்ட 4 இதழ்கள் விஞ்ஞானத்துடன் இணைந்த இதழ்களாகக் கருதப்படுகின்றன. [17]

மேற்கோள்கள்[தொகு]