உள்ளடக்கத்துக்குச் செல்

அகலத்திரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகலத்திரைக் கணினியில் ஆங்கில விக்கிப்பீடியாவின் முதற்பக்கத் தோற்றம். 15 ஆகத்து 2010.

அகலத்திரை (Widescreen) என்பது ஒரு குறித்த உருவ விகிதம் கொண்ட ஒரு திரைப் படிமம் ஆகும். இது, திரைப்படங்கள், தொலைக்காட்சி, கணினித் திரை போன்றவற்றில் பயன்படுகிறது. திரைப்படங்களைப் பொறுத்தவரை, 35மிமீ படச் சுருள்களில் காணும் "அக்கடமி உருவ விகிதம்" எனப்படும் 1.37:1 என்னும் பொதுவான உருவ விகிதத்திலும் கூடிய உருவ விகிதம் கொண்ட படிம விம்பத்தைக் குறிக்கும்.

தொடக்கத்தில், தொலைக்காட்சி ஒளிபரப்புக்கள் 4:3 (1.33:1) உருவ விகிதம் கொண்டவையாக இருந்தன. 2000 ஆண்டுகளில் 16:9 (1.78:1) உருவ விகிதத்தைக் கொண்ட தொலைக்காட்சித் திரைகள் பரவலான புழக்கத்துக்கு வந்தன. இது பொதுவாக உயர்-வரைவுத் தொலைக்காட்சி, அல்லது சீர்துல்லிய எண்ணிம அசைபட இறுவட்டு இயக்கிகளிலும் அது போன்ற பிற எண்ணிமத் தொலைக்காட்சிக் கருவிகளிலும் பயன்பட்டது.[1][2][3]

கணினித் திரைத் தோற்றங்களைப் பொறுத்தவரை 4:3 க்கு மேற்பட்ட உருவ விகிதத்துக்கு மேற்பட்டவை அகலத்திரைகள் எனப்பட்டன. பொதுவாக முன்னர் கணினி அகலத்திரைத் தோற்றங்கள் 16:10 உருவ விகிதம் கொண்டவையாக இருந்தன. தற்போது 16:9 உருவ விகிதம் புழக்கத்துக்கு வந்துள்ளது.

திரைப்படங்களில் அகலத்திரை

[தொகு]

வரலாறு

[தொகு]

உலகின் முதல் அகலத்திரைத் திரைப்படம் 1897 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. "த கோர்பெட்-ஃபிட்சிமொன்சு ஃபைட்" (The Corbett-Fitzsimmons Fight) என்னும் பெயர் கொண்ட இப்படம் 100 நிமிடங்கள் ஓடியது. இதற்கு 63மிமீ ஈசுட்மன் படச் சுருள் பயன்பட்டது. 1920களில் குறும்படங்களுக்கும், செய்திப்படங்களுக்கும் அகலத்திரை பரவலாகப் பயன்பட்டது. 1927 ஆம் ஆண்டில் அபெல் கான்சு என்பரின் நெப்போலியன் திரைப்படத்தின் இறுதிக் காட்சிகள் அகலத்திரையில் அமைந்திருந்தன. ஃபாக்சு திரைப்பட நிறுவனம் 1929 ஆம் ஆண்டில் 70மிமீ படச்சுருளைப் பயன்படுத்தும் "ஃபாக்சு கிரான்டியர்" முறை என அழைக்கப்பட்ட அகலத்திரை முறை ஒன்றை உருவாக்கி அதன் மூலம் சில படங்களை வெளியிட்டது. 1929ல் இசைப்படமான அப்பி டேய்சு (Happy Days) உம் அகலத்திரையில் வெளியானது.

இக்காலப் பகுதியில் ஆர்.கே.ஓ ரேடியோ பிக்சர்சு, வார்னர் பிரதர்சு போன்ற நிறுவனங்களும் புதிய முறைகளை உருவாக்கி அகலத்திரைப் படங்களை எடுத்தன. 1932ல் ஏற்பட்ட பாரிய பொருளாதார வீழ்ச்சியினால் பட நிறுவனங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்ததால் அகலத்திரை முயற்சிகள் கைவிடப்பட்டன. தொலைக்கட்சியின் அறிமுகத்தோடு திரைப்படத்துக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடையத் தொடங்கியபோது, இந்தப் போக்கைத் தடுப்பதற்கான ஒரு வழியாக 1953 ஆம் ஆண்டு முதல் மீண்டும் அகலத்திரை திரைப்படங்களில் பயன்பாட்டுக்கு வரலாயிற்று.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Niagara Falls (1926)". SilentEra.
  2. The American Film Institute Catalog Feature Films: 1911–20. The American Film Institute. 1971.
  3. Coles, David (March 2001). "Magnified Grandeur". The 70 mm Newsletter. No. 63. Australia: ..in70mm. பார்க்கப்பட்ட நாள் 27 June 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகலத்திரை&oldid=3752008" இலிருந்து மீள்விக்கப்பட்டது