பின்னல் கோலாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தஞ்சை நால்வர் குடும்பத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட நூறு வருடங்கள் பழமையான அரியதொரு புகைப்படம் இது. தஞ்சையில் எடுக்கப்பட்ட இப்புகைப்படத்தில் சிறுமிகள் கோலாட்டம் ஆடுவதைக் காணலாம். பின்னணியில் வயலின் வித்வான் வடிவேலுவுக்கு ஸ்வாதித் திருநாள் மகாராஜா பரிசளித்த வயலினையும் காணலாம். இது ஸ்ரீ பொன்னையா நாட்டியக் கல்லூரியின் எட்டாம் ஆண்டு விழாப் புகைப்படம்.

பின்னல் கோலாட்டம் என்பது குறுந்தடிச் சிலம்பு எனப்படும் கோலாட்டத்தில் ஒரு வகை ஆகும். கோலாட்டத்தில் பின்னல் கோலாட்டம் பார்க்கச் சிறந்தது. ஒரு கயிறின் இரண்டு புறங்களிலும் கம்புகளைக் கட்டிக்கட்டிக்கொண்டு 10 பேர் ஆடுவார்கள். முன்னும், பின்னும் ஆடி அந்தக் கயிறுகளை பின்னல்களாக கோர்த்து, பின்னர் அதே ஆட்டத்தை திரும்பவும் ஆடி பின்னலை அவிழ்ப்பார்கள்.[1] பெரும்பாலும் திருமண வீடுகளில் இந்த கலையாடல் நிகழும்.[2] அதாவது மூன்று மூன்று கயிறுகளாக இடைவெளி விட்டு விட்டத்தில் கட்டியிருப்பார்கள். ஒரு கயிறுக்கு ஒன்று அல்லது இரண்டு பேர் வீதம் பிடித்துக்கொண்டே பாட்டுக்கு ஏற்றபடி கோலாட்டம் அடித்தபடியே ஊடாட வேண்டும். பாட்டின் முடிவில் அழகான பின்னல் வந்திருக்கும் கயிறுகளில். இது சற்றுக் கடினமான வகை கோலாட்டமாகும்.[3] கல்யாண கோலாகலத்தின் மூன்றாம் நாள் (முகூர்த்தம் முடிந்த அடுத்த நாள்) பிள்ளை வீட்டார் பெண்ணை அழைத்து கிளம்பும் முன், எல்லா பெண்டிரும், இந்த பின்னல் கோலாட்டம் ஆட்டம் ஆடுவார்கள்.

அமைப்பு[தொகு]

வட்டமான கட்டையில் ஓரத்தில் சுற்றி சுமார் 10 அல்லது 12 துளை போடப்பட்டிருக்கும். அதில் ஒவ்வொரு துளையிலும் நீண்ட மணியான் கயிறு எனப்படும் மெல்லிய உறுதியான கயிறு கோர்க்கப்பட்டு தோரணமாகத் தொங்கவிடப்பட்டு இருக்கும். அந்த கட்டையை கொக்கி மூலம் மரத்தின் கிளையில் கட்டிவிட்டு ஒவ்வொரு கயிறையும் ஆடுபவர்களிடம் கொடுப்பர். ஒரு கோலாட்ட கழியை அதில் சுற்றிக்கொள்ள வேண்டும். அதை இடது கையில் பிடிக்கவேண்டும். பின்பு இன்னொரு கழியை குறுக்கே 'T' போல வைத்துக்கொண்டு சுற்றி வட்டமாக நிற்க வேண்டும்.

ஆடலும் பாடலும்[தொகு]

பாடுபவர் பாட ஆரம்பித்ததும் ஆடுபவர்கள் வலது கையில் உள்ள கழியை கயிறு சுற்றி இருக்கும் கழியில் தட்டி குறுக்கும் நெடுக்கும் தாளத்திற்கு தகுந்தவாறு ஆடிக்கொண்டு செல்லவேண்டும். ஒவ்வொரு பாட்டுக்கும் வெவ்வேறு விதமான முறையில் நடன அசைவுகள் உண்டு. பாட்டு முடியும்போது அந்த கயிறுகள் பின்னிக்கொண்டு சடை போலவும் முருங்கைக்காய் போலவும் தெரியும். அதே போல் திரும்பவும் ஆடி முன்பு இருந்த நிலைக்கு வரவேண்டும். யாராவது தப்பாக ஆடிவிட்டால் ஆட்டம் முடியும்போது கயிற்றுப்பின்னல் சரியாக இருக்காது.[4]

கோப் வேணி[தொகு]

வட மாநிலங்களில் இக்கோலாட்டம் கோப் வேணி என அழைக்கப்படுகிறது. பல வண்ண துணிகளையோ அல்லது கயிற்றையோ உத்தரத்திலிருந்து தொங்கவிட்டு அதை நடனமணிகளின் இடக் கைக்கோலில் கட்டி அவர்கள் அசைவுகளைச் செய்யும்பொழுது மெதுவாகக் கயிறுகள் ஓர் அழகிய பின்னலாக பின்னப்படும். பிறகு ஆடிய முறையின் நேர் எதிர் முறையில் ஆடிப் பின்னல் அவிழ்க்கப்படும். இதுவே ‘கோப் வேணி’. வேணி என்றால் பின்னல் என்று பொருள். இதற்குக் கிருஷ்ண லீலை பற்றிய பாடல்கள் இசைக்கப்படும். ஆடும் ஆண்களும் பெண்களும் வண்ண ஆடை அலங்காரங்கள் செய்து கொள்வார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆட்டமும், தடுமாற்றமும்
  2. "அழிந்துப் போன அடையாளங்கள்". Archived from the original on 2011-07-04. பார்க்கப்பட்ட நாள் 2012-06-19.
  3. ஸ்ரீஜா வெங்கடேஷ்[தொடர்பிழந்த இணைப்பு]
  4. நடன சபாபதி, நினைத்துப்பார்க்கிறேன்[தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்னல்_கோலாட்டம்&oldid=3850687" இலிருந்து மீள்விக்கப்பட்டது