வலைவாசல்:சமணம்/சமண அறிஞர்/6

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆச்சாரிய சமந்தபத்திரர்
ஆச்சாரிய சமந்தபத்திரர்

சமந்தபத்திரர் என்பவர் பொ.ஊ. 2ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த திகம்பர ஆச்சாரியர் (துறவிக் குழுத் தலைவர்)ஆவார். இவர் சமணக் கொள்கையான அநேகாந்தவாதத்தின் முன்னோடியாவார். ரத்னகரந்த சிராவகாசாரம் என்பது சமந்தபத்திரரின் புகழ்பெற்ற நூலாகும். சமந்தபத்திரர், உமாசுவாமிக்குப் பின்னரும், பூச்சியபாதருக்கு முன்பும் வாழ்ந்துள்ளார்.

சமந்தபத்திரர் பொ.ஊ. 150இலிருந்து 250 வரை வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இவர், தென்னிந்தியாவில் சோழர் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்துள்ளார். இவர் ஒரு கவிஞரும், அளவையியலாளரும் (logician), புகழ்பாடுனரும் (eulogist), தேர்ந்த மொழியியலாளரும் ஆவார். இவரே தென்னிந்தியாவில் சமண மதத்தைப் பரப்பியவராகக் குறிப்பிடப்படுகிறார்.

சமந்தபத்திரர், தனது துறவு வாழ்வின் முற்பகுதியில் பசுமக (அடங்காப்பசி) என அறியப்பட்ட நோயினால் தாக்கப்பட்டார். திகம்பரத் துறவிகள் ஒருநாளைக்கு ஒருவேளைக்கு மேல் சாப்பிடக் கூடாது என்பதால், இவர் மிகுந்த வேதனைக்குள்ளானார். இறுதியில், தமது ஆசிரியரிடத்தில், சல்லேகனை எனும் உண்ணாநோன்பிருந்து உயிர்விடும் வழக்கத்தை மேற்கொள்ள அனுமதி கேட்டார். எனினும், அதற்கு அனுமதி மறுத்த இவரது ஆசிரியர், துறவு வாழ்விலிருந்து விலகி, அந்நோயைக் குணப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அந்நோயைக் குணப்படுத்திக்கொண்டபின், மீண்டும் துறவியான சமந்தபத்திரர் பெரும் சமண ஆச்சாரியராக உருவெடுத்தார்.