உள்ளடக்கத்துக்குச் செல்

மார்கி சதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்கி சதி
பிறப்பு1965
இறப்பு2015
பணிநடனக் கலைஞர்

மார்கி சதி ( Margi Sathi ) என்றப் பெயர் கொண்ட பி. எஸ்.சதிதேவி [1] (1965 - 2015) கூடியாட்டத்திலிருந்து பெறப்பட்ட கலை நிகழ்ச்சியின் ஒரு வடிவமான நங்கியார் கூத்தின் ஒரு நிபுணராவார். இது பாரம்பரியமாக கேரளாவின் சாக்கியார் சமூகத்தின் பெண் உறுப்பினர்களால் நிகழ்த்தப்படுகிறது. கூடியாட்டத்தில் பெண் கதாபாத்திரங்களை வெளிக்கொணருவதில் இவர் ஒரு திறமையான நிபுணராக இருந்தார். இவர் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். 2001 அக்டோபரில் பாரிஸில் உள்ள யுனெஸ்கோவின் தலைமையகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க கூடியாட்ட நிகழ்ச்சி இருந்தது. "மனிதகுலத்தின் வாய்வழி மற்றும் அருவமான பாரம்பரியத்தின் தலைசிறந்த படைப்பு" என்ற கருப்பொருளைக் குறிக்கும் யுனெஸ்கோவின் ஒரு திட்டத்தின் ஒரு பகுதியாக இது இருந்தது. நங்கியர் கூத்து நடிப்பிற்காக சதிதேவி ஆட்டப்பிரகாரம் என்ற பல செயல்திறன் கையேடுகளை எழுதியிருந்தார். இராமசரிதத்திற்கான ஆட்டப்பிரகாரம் (சீதாவின் பார்வையிலிருந்து ராமரின் கதை) 1999 இல் ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. இவர் ஒரு சில மலையாளத் திரைப்படங்களிலும் தோன்றியுள்ளார்.

மார்கி சதி 1965 ஆம் ஆண்டில் திருச்சூரில் உள்ள செருத்துருத்தியில் புத்திலத்து சுப்பிரமணியன் எம்ப்ராந்திரி மற்றும் பார்வதி அந்தர்ஜனத்தின் மகளாகப் பிறந்தார். கேரள கலாமண்டலத்திலும், பெயின்குளம் ராம சாக்யாரின் கீழும் கூடியாட்டம் கற்கத் தொடங்கினார். மறைந்த இடக்கை மேதை என். சுப்பிரமணியன் பொட்டியுடனான இவரது திருமணத்திற்குப் பிறகு, திருவனந்தபுரத்திற்குச் சென்று 1988 இல் மார்கி நடனக் கழகத்தில் சேர்ந்தார். நடன நிறுவனத்துடனான இவரது தொடர்புதான் மார்கி என்ற பெயரை இவரது பெயரில் கொடுத்தது. [2] மார்கி என்பது கேரளாவின் இரண்டு பாரம்பரிய கலை வடிவங்களான கதகளி மற்றும் கூடியாட்டத்தின் மறுமலர்ச்சிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். [3] [4] இவரது கணவர் 2005 சூன் 30 அன்று கூடியாட்டம் சார்ந்த "நோட்டம்" என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது மின்சாரம் பாய்ந்து இறந்தார். [5] கணவரின் மரணத்திற்குப் பிறகு சதி கேரள மாநில அரசின் உத்தரவின் அடிப்படையில் கூடியாட்டத்தில் ஆசிரியராக கலாமண்டலம் சென்றார். இவர் 2015 திசம்பர் 1, அன்று திருவனந்தபுரத்தில் உள்ள பிராந்திய புற்றுநோய் மையத்தில் காலமானார். இவர் நீண்ட காலமாக புற்றுநோயுடன் அவதிப்பட்டு வந்தார். இவருக்கு ஆசிரியரும், கூடியாட்டம் கலைஞருமான ரேவதி என்ற ஒரு மகளும், மற்றும் பட்டாம்பி சமசுகிருதக் கல்லூரியின் முன்னாள் மாணவரும் இடக்கைக் கலைஞருமான தேவநாராயணன் என்றஒரு மகனும் இருந்தனர். [6]

சதி நடித்த திரைப்படங்களின் பட்டியல்

[தொகு]

சுவப்னம் (2014) (அச்சியூத்தானின் மனைவியாக) [7] இவான் மேகரூபன் (2012) (கவிஞரின் தாயாக) [8] மேக்ரோ ஆஃப் மேஸ்ட்ரோ (2010) (தம்புராட்டியாக) [9] இராமாயணம் (2010) (ஆட்டா பீவியாக) [10] த்ரிஷ்டாந்தம் (2007) [11] நோட்டம் (2005) போன்ற படங்களளில் நடித்துள்ளர்.

சதி எழுதிய புத்தகங்கள்

[தொகு]

"சீதாயணம்" (மேடை விளக்கக்காட்சி கையேடு) (2008) "கண்ணகிசரிதம்" (மேடை விளக்கக்காட்சி கையேடு) (2002) "சிறீ ராமசரிதம் நங்கியர்கூத்து" (மேடை விளக்கக்காட்சி கையேடு) - மலையாளத்தில் கோட்டயம், டி.சி. புத்தக நிறுவனத்தாரால் 1999இல் வெளியிடப்பட்டது.

அங்கீகாரங்கள்

[தொகு]

நிகழ்த்து கலைகளின் உலகில் மார்கி சதியின் பங்களிப்புகள் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும் இவர் தனது படைப்புகளைப் பாராட்டி பல விருதுகளைப் பெற்றார்.

நங்கியர்கூத்தில் ஆராய்ச்சி திட்டத்திற்காக இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் இளைய கூட்டாளார் (1997) கௌரவம் பெற்றுள்ளார். கூடியாட்டத்திற்கான கேரள சங்கீத நாடக அகாதமி விருதினை 2002இல் பெற்றுள்ளார். 2008இல் கலாதர்ப்பனம் விருது இவருக்கு வழங்கப்பட்டது. திருவனந்தபுரம், துஞ்சன் சமாரக சமிதியின் சார்பில் நாட்டியரத்ன புரஸ்காரம் என்ற விருது 2008இல் வழங்கப்பட்டது. பத்மசிறீ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். [12]

குறிப்புகள்

[தொகு]
  1. "Empanelment of artists" (PDF). Indian Council for Cultural Relations. Archived from the original (PDF) on 29 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 2 December 2015.
  2. Margi Sathi’s leading role in Indian theatre forms of koodiyattam and nangiarkoothu. http://www.thenational.ae/arts-culture/on-stage/margi-sathis-leading-role-in-indian-theatre-forms-of-koodiyattam-and-nangiarkoothu. பார்த்த நாள்: 1 December 2015. 
  3. Abode for Koodiyattam. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/abode-for-koodiyattam/article5222559.ece. பார்த்த நாள்: 2 December 2015. 
  4. "Website of Margi". பார்க்கப்பட்ட நாள் 2 December 2015.
  5. Koodiyattom artiste Margi Sathi passes away. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/koodiyattom-artiste-margi-sathi-passes-away/article7939351.ece. பார்த்த நாள்: 2 December 2015. 
  6. Margi Sathi - debut and farewell at Kalamandalam. http://english.mathrubhumi.com/features/women-children/margi-sathi-_-debut-and-farewell-at-kalamandalam-english-news-1.710203. பார்த்த நாள்: 8 December 2015. 
  7. https://web.archive.org/web/20151208081301/http://en.msidb.org/m.php?7384
  8. https://www.imdb.com/title/tt2418248/fullcredits?ref_=tt_ov_st_sm
  9. https://www.imdb.com/title/tt1693720/fullcredits?ref_=tt_ov_st_sm
  10. https://web.archive.org/web/20151208073459/http://en.msidb.org/m.php?6766
  11. https://web.archive.org/web/20151208062608/http://en.msidb.org/m.php?6146
  12. "Nominations for Padma Awards 2011" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2 December 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கி_சதி&oldid=3567359" இலிருந்து மீள்விக்கப்பட்டது