பெசாவர் சதி வழக்குகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1922 மற்றும் 1927 க்கு இடையில் பிரித்தானிய இந்தியப் பேரரசில் நடைபெற்ற ஐந்து வழக்குகளின் தொகுப்பை பெசாவர் சதி வழக்குகள் குறிக்கிறது.

முதல் பெசாவர் சதிவழக்கு[தொகு]

ரஷ்யாவில் மார்க்சியப் பயிற்சி பெற்று இந்தியா திரும்ப முயன்றவர்களில் ஒருவரான முகமது அக்பர் மற்றும் அவரது நண்பர் பகதூரும் பெசாவர் நகரை அடைய முயன்றபோது 1921 செப்டம்பர் 25ஆம் நாள் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் முகமது அக்பரின் தந்தையார் ஹபீஸ்சுல்லாகானும் கைது செய்யப்பட்டார்.

குற்றச்சாட்டு[தொகு]

இதற்கு தாஷ்கண்டிலிருந்த ராணுவப் பள்ளியில் முகமது அக்பர் பயின்றார் என்பதே முக்கிய ஆதாரமாகச் சொல்லப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரேசர் பின்வருமாறு கூறினார்.

அமைக்கப்பட்ட அரசுகளையெல்லாம் அகற்றுவது என்பதே போல்ஷ்விக்குகளின் போக்கு என்பது ஒரு பொது அறிவு ஆகும். இந்த பொது அறிவினை வைத்தே தீர்ப்பினை வழங்க முடியும்...

— நீதிபதி பிரேசர்

தண்டனை[தொகு]

அகமது அக்பர்கான் , அவருடைய தந்தையார் ஹபீஸ்சுல்லாகான் மற்றும் பகதூர் ஆகிய மூவரும் பெசாவர் சிறையில் அடைக்கப்பட்டனர். இம்மூவர் மீதும் இந்தியத் தண்டனைப் பிரிவுச்சட்டம் 121 A யின் கீழ் , இங்கிலாந்து மன்னரும், பேரரசருமானவர் மீது யுத்தம் தொடுப்பதற்கு சதி செய்தனர் என வழக்கு போடப்பட்டது. ஜே.எச். பிரேசர் என்ற ஐ.சி.எஸ். அதிகாரியை நீதிபதியாகக் கொண்ட நீதிமன்றம் முகமது அக்பர்கானுக்கு மூன்றாண்டு கடுங்காவல் தண்டனையும், பகதூருக்கு ஓராண்டு கடுங் காவல் தண்டனையும் விதித்தது. ஹபீசுல்லாகான் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவர் விடுதலை செய்யப்பட்டார்.[1]

இரண்டாவது பெசாவர் சதி வழக்கு[தொகு]

முதல் பெசாவர் சதி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முகமது அக்பர்கான் மீதும் அவருடன் ஹாசன் மற்றும் குலாப் மகபூப் ஆகிய இருவரையும் சேர்த்து போடப்பட்ட வழக்குதான் இரண்டாவது பெசாவர் சதிவழக்கு.

குற்றச்சாட்டு[தொகு]

முதல் பெசாவர் வழக்கில் மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு முகமது அக்பர்கான் சிறையிலிருந்தபோது அதிகாரிகளுக்கு தெரியாமலேயே வெளியில் உள்ளவர்களுக்கு ஏழு அல்லது எட்டுக் கடிதங்கள் அனுப்பினார் என்பதுதான். இந்தக் கடிதத்தை அந்த மாகாணத்திற்கு வெளியில் உள்ளவர்களுக்கு அனுப்பினார் என்றும், இது ராஜ துரோகம் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் கடிதங்கள் ஒரு ரயில் நிலைய மேடையில் நின்று கொண்டிருந்த குலாம் மகபூப் என்பவரிடமிருந்ததால் அவரும் கைது செய்யப்பட்டார். இந்தக் கடிதங்களை பணத்திற்காக நகல் எடுத்ததற்காக முகமது ஹாசன் கைது செய்யப்பட்டார்.

தண்டனை[தொகு]

இப்பொழுது இந்த மூவர் மீதும் ராஜத் துரோக வழக்கு போடப்பட்டது. இதில் முகமது அக்பர்கானுக்கு 7 ஆண்டு கடுங் காவல் தண்டனையும், அதுவும் தனிமைச் சிறையில் மூன்று ஆண்டு வைக்கப்பட வேண்டுமென்று நீதிபதி பிரேசர் உத்தரவிட்டார். மற்ற இருவருக்கும் 5 ஆண்டு கடுங் காவல் தண்டனையும், இதில் அவர்கள் மூன்று மாதம் தனிமைச் சிறையில் அடைக்கப்பட வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டது. [2]

மூன்றாவது சதி வழக்கு[தொகு]

மூன்றாவது பெசாவர் சதி வழக்கு என்பது ‘மாஸ்கோ சதி வழக்கு’ என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது. இது 1922 - 23ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்டது. இந்த வழக்கில் பின்வருபவர்கள் குற்றம் சாட்டப்பட்டார்கள்:

குற்றம் சாட்டப்பட்டார்கள் வயது
முகமது அக்பர் ஷா 23
முகமது கவுகார் ரஹ்மான் கான் 27
மீர் அப்துல் மஜித் 21
ஹபீப் அகமது --
ரபீக் அகமது 24
சுல்தான் அகமது 24
பெரோசுதீன் மன்சூர் 21
அப்துல் காதிர்கான் --

தண்டனை[தொகு]

இந்தச் சதி வழக்கில் 1923ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் முகமது அக்பர்கான், கவுகார் ரஹ்மான்கான் ஆகிய இருவருக்கும் இரண்டாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அப்துல் மஜீத், பெரோசுதீன் மன்சூர், ஹபீப் அகமது, ரபீக் அகமது, சுல்தான் அகமது ஆகிய ஐவருக்கும் ஓராண்டுக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அப்துல் காதிர்கான் விடுவிக்கப்பட்டார்.

நான்காவது பெசாவர் சதி வழக்கு[தொகு]

தாஷ்கண்ட் நகரில் கூட்டப்பட்ட முதல் இந்தியக் கம்யூனிஸ்ட் குழுவின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது ஷாபிக் 1923ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் தேதி பெஷாவருக்கு வந்தார். உடனே அவர் கைது செய்யப்பட்டு அவருக்கு மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. அருணன் (2015). இந்திய கம்யூனிச இயக்க வரலாறு.
  2. Bairathi, Shashi (1987). Communism and Nationalism in India: A Study in Inter-relationship, 1919-1947 (in ஆங்கிலம்). New Delhi: Anamika Prakashan. pp. 43–45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185150000.{{cite book}}: CS1 maint: date and year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெசாவர்_சதி_வழக்குகள்&oldid=2826648" இலிருந்து மீள்விக்கப்பட்டது