கைரேகை சாத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதிஷ்டத்தைக் கூறுபவர், கேரவாக்கியோ (1594-95; கேன்வாஸ், லூவ்ரி), கைரேகை படிப்பதை விளக்குதல்

கைரேகை சாத்திரம் அல்லது குறிபார்த்தல் என்பது கைரேகையை ஆராய்வதன் மூலமாக ஒருவரின் எதிர்காலத்தையும், குணத்தையும் சொல்லும் கலையாகும். இது கைரேகை வாசிப்பு அல்லது குறிசொல்லுதல் என்றும் அழைக்கப்படும். இது பல்வேறு கலாச்சார வேறுபாடுகளுடன் உலகின் எல்லா பாகங்களிலும் காணப்படுகிறது. இவ்வாறு குறிசொல்லும் பழக்கமுடையவர்கள் பொதுவாக கைரேகை ஜோதிடர்கள், கைரேகை படிப்பவர்கள் அல்லது குறிசொல்பவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

கை ரேகை கலையை ஆங்கிலத்தில் “Palmistry” (பாமிஸ்டிரி) என அழைக்கிறார்கள். “Palmistry” என்னும் வார்த்தையில் Palm, Mastery என இரண்டு சொற்கள் இணைந்துள்ளன. Palm என்றால் உள்ளங்கை எனப்பொருள்படும். Mastery என்றால் ஞானம் எனப்பொருள்படும்.எனவே Palmistry என்றால் உள்ளங்கை பற்றிய ஞானம் எனப்பொருள்படும்.

கை ரேகை கலையை ஆங்கிலத்தில் வேறு ஒரு வார்த்தையிலும் குறிப்பிடுகிறார்கள். Cheirosophy (கீரோஸபி) என்பது அந்த வார்த்தையாகும். அதில் Cheiro, Sophy என இரண்டு சொற்கள் இணைந்துள்ளன. Cheiro என்றால் கை எனப்பொருள்படும். Sophy என்றால் ஞானம் எனப்பொருள்படும்.எனவே Cheirosophy என்றால் கையைப்பற்றிய ஞானம் எனப்பொருள்படும்.

கை ரேகை கலையை சமஸ்கிருதத்தில் "ஹஸ்த ரேகா சாஸ்திரம்" எனக்குறிப்பிடுகிறார்கள்."ஹஸ்தம்" என்றால் கை என்று பொருள்."ரேகா" என்றால் "கோடு" என்று பொருள்."சாஸ்திரம்" என்றால் "அறிவியல்" என்று பொருள்.எனவே "ஹஸ்த ரேகா சாஸ்திரம்" என்றால் கையிலுள்ள கோடுகளைப்பற்றிய அறிவியல் எனப்பொருள்படும்.

Cheirosopy (கீரோஸபி) என்னும் கை வடிவ இயலில் இரு பிரிவுகள் உள்ளன.அவை: Cheirognomy (கீரோக்னமி) என்னும் கை புறத்தோற்றவியலில் கைகளின் ஒட்டுமொத்த புறத்தோற்றம்,விரல்களின் தோற்றம்,விரல் நகங்களின் தோற்றம், உள்ளங்கையில் காணப்படும் கிரக மேடுகளின்(கோள் மேடு) தோற்றம் இவைகளைக்கொண்டு பலாபலன்கள் கூறப்படுகிறது. Cheiromancy (கீரோமன்ஸி) என்னும் கை அகக்கோட்டியலில் உள்ளங்கையில் காணப்படும் ரேகைகள் (கோடுகள்) மற்றும் குறியீடுகளைக்கொண்டு பலாபலன்கள் கூறப்படுகிறது.

இந்த குறிகூறும் முறை பொதுவாக போலி விஞ்ஞானமாகவே மதிக்கப்படுகிறது. கீழே கொடுக்கப்படும் தகவல்கள் நவீன கைரேகை சாத்திரத்தின் சுருக்கமான குறிப்பீடுகளாகும்; வெவ்வேறு கைரேகை ஜோதிட "முறைகளுக்கு" இடையே வெவ்வேறு போக்குகள் இருக்கின்றன. அதேபோன்று, பல்வேறு கைரேகை முறைகள் குறித்து பல மாறுபட்ட கருத்துக்களும் உள்ளன. பொதுவாக இந்த கருத்துக்கள் முரண்பாடுகளாகவே இருக்கின்றன.

வரலாறு[தொகு]

கைரேகை சாத்திரம், இந்தியாவில் ஜோதிடத்தோடு வேரூன்றி உள்ளது. இந்து மத முனிவர் வால்மீகி, "ஆண் கைரேகை சாத்திரத்தைப் பற்றிய வால்மீகி மகரிஷியின் படிப்பினைகள்" என்ற தலைப்பில், 567 செய்யுள்கள் அடங்கிய ஒரு புத்தகம் எழுதி இருப்பதாக கருதப்படுகிறது. கைரேகை சாத்திர கலை இந்தியாவிலிருந்து, சீனா, திபெத், எகிப்து, பெர்சியா மற்றும் ஐரோப்பாவின் பிற நாடுகளுக்கும் பரவியதாக கூறப்படுகிறது.[சான்று தேவை]. சீனாவில் இருந்து கைரேகை சாத்திரம் , கிரீஸிற்கு[சான்று தேவை] முன்னேறி சென்றதாகவும், அங்கு அனாஸ்சகோராஸ் (Anaxagoras) இதை பயின்றார் என்றும் கூறப்படுகிறது.

  • கேப்டன் கேசிமிர் ஸ்டானிஸ்லாஸ் டி'அர்பென்டிங்னி (Casimir Stanislas D'Arpentigny) 1839-ஆம் ஆண்டு லா க்ரோக்னோமி (La Chirognomie) என்பதை பிரசுரித்தார்.
  • அட்ரீன் அல்டோப் டெஸ்பரோலெஸ் (Adrien Adolphe Desbarolles) 1859-ஆம் ஆண்டு லெஸ் மைஸ்டெரெஸ் டி லா மெயின் (Les Mysteres de la Main) என்பதை பிரசுரித்தார்
  • கேத்ரின் செயிண்ட்-ஹில் 1889-ஆம் ஆண்டு பிரிட்டனின் குறிகூறும் சமூகம் (Chirological Society of Great Britain) என்பதை நிறுவினார்.
  • எட்ஜர் டி வால்கோர்ட்-வெர்மாண்ட் (காம்டி டி செயிண்ட் ஜெர்மன்) என்பவர் 1897-ஆம் ஆண்டு அமெரிக்க குறிகூறும் சமூகத்தை நிறுவினார்.
  • கவுண்ட் லூயிஸ் ஹமொன் செய்ரோ 1894-ஆம் ஆண்டு செய்ரோவின் கைமொழி (Cheiro's Language of the Hand) என்பதை பிரசுரித்தார்.
  • வில்லியம் பென்ஹாம் 1900-ஆம் ஆண்டு கைரேகை பார்ப்பதிலிருக்கும் விஞ்ஞான விதிகள் என்பதை பிரசுரித்தார்.
  • சார்லோட் வோல்ப் (Charlotte Wolff) விஞ்ஞானரீதியாக குறிபார்ப்பதற்கான அவருடைய பங்களிப்புகளை 1936 முதல் 1969 வரை பிரசுரித்தார்.
  • நியோல் ஜாக்குவின் விஞ்ஞானரீதியாக குறிப்பார்ப்பதற்கு அவருடைய பங்களிப்புகளை 1925 முதல் 1958 வரையில் பிரசுரித்தார்.
  • அர்னால்டு ஹோல்ட்ஜ்மேன் (Arnold Holtzman) (உளவியல் பரிசோதனை குறிகூறல்)

உத்திகள்[தொகு]

ஒருவரின் உள்ளங்கையில் இருக்கும் கைரேகையைப் "படிப்பதன்" மூலமாக, அவருடைய குணத்தை அல்லது அவரின் எதிர்கால வாழ்க்கையை எடுத்துக்கூறும் முறையே கைரேகை சாத்திரமாகும். பல்வேறு ரேகைகளும் ("இதய ரேகை", "ஆயுள் ரேகை", இதரபிற), மேடுகளும், அவற்றைச் சார்ந்த அளவுகள், தன்மைகள் மற்றும் உட்பிரிவுகளும் விஷயங்களை எடுத்துக்காட்டுகின்றன. சில கலாச்சாரங்களில், இவ்வாறு படிப்பவர்கள் விரல்கள், விரல்நகங்கள், விரல்ரேகைகள் மற்றும் உள்ளங்கை தோல் வடிவங்கள் (ரேகையியல்), தோல் அமைப்புமுறை மற்றும் நிறம், உள்ளங்கையின் வடிவம், மற்றும் கையின் மென்மை ஆகியவற்றையும் பரிசோதிக்கிறார்கள்.

கைரேகை பார்ப்பவர்கள் பொதுவாக ஒருவர் 'அதிகம் பயன்படுத்தும் கையையே' (ஒரு பெண்ணோ, ஆணோ எந்த கையினால் எழுதுகிறாரோ அல்லது அதிகமாக பயன்படுத்துகிறாரோ அதை) பார்க்கிறார்கள். (சிலவேளைகளில் இந்த கை நனவுப்பூர்வமான மனதைக் குறிப்பதாகவும், அடுத்த கை ஆழ்நிலை மனதை குறிப்பிடுவதாகவும் கருதப்படுகிறது).

"பண்டைய" கைரேகை சாத்திரத்திற்கான (மிக பெருமளவிற்கு பரவலாக பயிற்றுவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பாரம்பரியம்) அடிப்படை கட்டமைப்பு கிரேக்க புராணங்களில் வேரூன்றி உள்ளது. உள்ளங்கை மற்றும் விரல்களின் ஒவ்வொரு பகுதியும் ஓர் ஆண் கடவுளுடனோ அல்லது ஒரு பெண் கடவுளுடனோ சம்பந்தப்பட்டிருக்கும். மேலும் இந்த பகுதியின் குறிப்புகள் அந்த குறிப்பிட்ட நபரின் குணத்தை எடுத்துக்காட்டும். எடுத்துக்காட்டாக, மோதிர விரலானது அப்போலோ என்ற கிரேக்க கடவுளோடு தொடர்புபட்டது; இந்த மோதிர விரலின் குறிப்புகளின்படி, அந்த குறிப்பிட்ட நபர் கலை, இசை, அழகு, புகழ், செல்வவளம், மற்றும் கருணை ஆகியவற்றைக் கையாளும்தன்மையோடு தொடர்புபட்டிருக்கும்.

கை ரேகை கலை என்னும் கை வடிவ இயலில் ஐந்து அங்கங்கள் உள்ளன.

  1. கைகளின் வகைகள்
  2. விரல்களின் வகைகள்
  3. உள்ளங்கையிலுள்ள கிரக மேடுகள்
  4. உள்ளங்கையிலுள்ள ரேகைகள்
  5. உள்ளங்கையிலுள்ள குறியீடுகள்

இடது மற்றும் வலது கையின் முக்கியத்துவம்[தொகு]

இரண்டு கைகளும் அவற்றிற்குரிய தனித்தனி முக்கியத்துவத்தைக் கொண்டிருப்பதால், எந்த கையில் கைரேகை சாத்திரம் பார்ப்பது சிறந்தது என்பதில் பல விவாதங்கள் உள்ளன. இடதுகை ஒவ்வொருவரின் மூலவாய்ப்பு வளத்தை காட்டுவதாகவும், வலது கை அவருடைய குணத்தைக் காட்டுவதாகவும் கருதப்படுகிறது. "வலதுகையில் எதிர்காலம் தெரியும்; இடதுகையில் கடந்தகாலம் தெரியும்." என்றும், "நாம் பிறப்பிலேயே எதைக் கொண்டு வந்திருக்கிறோம் என்பதை இடதுகை காட்டும், நாம் எதற்காக பிறந்திருக்கிறோம் என்பதை வலதுகை காட்டும்" என்றும், "ஆண்களுக்கு வலதுகையைப் படிக்க வேண்டும், பெண்களுக்கு இடது கையைப் படிக்க வேண்டும்" என்றும், "என்ன கிடைக்கும் என்பதை இடதுகை காட்டும், அதைக் கொண்டு என்ன முடியும் என்பதை வலதுகை காட்டும்" என்றும் கூறப்படுகிறது.

எவ்வாறிருப்பினும் இந்த அனைத்து கூற்றுகளும், விஞ்ஞானப்பூர்வமாக அல்லாமல், உள்ளுணர்வாக மட்டுமே இருக்கின்றன.

  • இடதுகை: இடதுகையானது வலது மூளையால் (வடிவத்தை உணர்தல், உறவுகளை உணர்தல்) கட்டுப்படுத்தப்படுகிறது. இது மனிதரின் உள்ளார்ந்த விஷயங்களை, இயற்கையான இயல்பை, உள்ளார்ந்த ஆளுமைக் கூறை மற்றும் கல்விசார் சிந்தனையைப் பிரதிபலிக்கிறது. இது ஒரு மனிதரின் ஆன்மிக மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியின் ஒரு பகுதியாகவும் கூட கருதப்படுகிறது.
  • வலதுகை: வலதுகையானது இடதுபக்க மூளையால் கட்டுப்படுத்தப்படுகிறது (தர்க்கம், காரணகாரிய, மற்றும் மொழி தொடர்பானது). இது ஒரு நபரின் புறத்தோற்றத்தை, புறநிலை இயல்பை, சமூக சூழ்நிலையில் அவரின் செல்வாக்கை, கல்வியை, மற்றும் அனுபவத்தைப் பிரதிபலிக்கிறது.

கை வடிவம்[தொகு]

எந்த மாதிரியான கைரேகை சாத்திரம் பார்க்கப்படுகிறது என்பதைப் பொறுத்தும், எம்மாதிரியாக பார்க்கப்படுகிறது என்பதைப் பொறுத்தும், உள்ளங்கையின் கோடுகள் மற்றும் வடிவங்கள், விரல்கள்; நிறம் மற்றும் தோலின் தன்மை மற்றும் விரல் நகங்கள்; உள்ளங்கையின் அளவு மற்றும் விரல்கள்; விரல்களின் இணைப்பெலும்பின் முக்கியத்துவம்; மற்றும் கைகளின் ஏனைய பல விஷயங்கள் உட்பட, கையின் பல்வேறு தன்மைகளைக் கைரேகை பார்ப்பவர்கள் பார்ப்பார்கள்.

பெரும்பாலான கைரேகை சாத்திர முறைகளில், கையின் வடிவங்கள் நான்கு அல்லது 10 முக்கிய வகைகளாக பிரிக்கப்படுகின்றன. கை வடிவமானது, குணத்தைக் குறிப்பிட்டுக் காட்டுவதாக நம்பப்படுகிறது.

வேறுபாடுகள் நிரம்பியிருந்தாலும், நவீன கைரேகை பார்ப்பவர்களால் பயன்படுத்தப்படும் மிக பொதுவான வகைகளும், அவற்றின் தன்மைகளும் கீழே அளிக்கப்படுகிறது:

  • நிலத்திற்குரிய கைகள், பொதுவாக பரந்தும், சதுரமான உள்ளங்கைகளையும் மற்றும் விரல்களையும், கடினமான அல்லது கரடுமுரடான தோலையும், செவ்வண்ண நிறத்தையும் மற்றும் இதரபிறவற்றையும் கொண்டிருக்கும். மணிக்கட்டில் இருந்து விரல்களின் அடிவரையில் இருக்கும் உள்ளங்கையின் நீளம் வழக்கமாக விரல்களின் நீளத்திற்கு சமமாக இருக்கும்.
  • காற்றிற்குரிய கைகளானது, நீண்ட விரல்களுடன் சதுரமாகவோ அல்லது செவ்வகமான உள்ளங்கைகளுடனோ இருக்கும். சிலவேளைகளில் கைமுட்டியும், கட்டைவிரல்களின் கீழ் கணுக்களும் முன்பிதுங்கி இருக்கும். மேலும் இது பொதுவாக உலர்ந்த தோலுடன் காணப்படும். மணிக்கட்டில் இருந்து விரல்களின் அடிவரையில் உள்ளங்கையின் நீளம் பொதுவாக விரல்களின் நீளத்தை விட குறைவாக இருக்கும்.
  • நீருக்குரிய கைகள் குறுகியதாகவும், சிலவேளைகளில் முட்டை வடிவ உள்ளங்கையையும், நீண்ட, இலகுவான, கூம்புவடிவமான விரல்கள் போலவும் காணப்படும். மணிக்கட்டில் இருந்து விரல்களின் அடி வரையில் உள்ளங்களையின் நீளம் பொதுவாக உள்ளங்கையின் பரந்த பகுதியில் இருக்கும் அகலத்திற்கும் குறைவாகவும், விரல்களின் நீளத்திற்கு சமமாகவும் இருக்கும்.
  • நெருப்புக்குரிய கைகள் சதுரமாக அல்லது செவ்வக வடிவத்திலான உள்ளங்கையுடன் இருக்கும். இது பழுப்பு நிற தோலையும், குட்டையான விரல்களையும் கொண்டிருக்கும். மணிக்கட்டிலிருந்து விரல்களின் அடி வரையிலுமான உள்ளங்கையின் நீளம் பொதுவாக விரல்களின் நீளத்தைவிட அதிகமாக இருக்கும்.

இவற்றைக் கொண்டு, ஒருவரின் கைகளில் ஆதிக்கம் செலுத்தும் ஆக்கக்கூறுகளையும், மனப்போக்குகளையும் வரையறுப்பது மிகவும் சுலபம் என்று கூறப்படுகிறது.

கைவடிவத்தை ஆராயும் போது, ரேகைகளின் எண்ணிக்கை மற்றும் தரங்களும் கவனிக்கப்படும்; கைரேகை சாஸ்திரங்கள் சிலவற்றில், நில மற்றும் நீருக்குரிய கைகள் குறைந்த, ஆழ்ந்த ரேகைகளைக் கொண்டிருக்கும். அதே சமயம் காற்று மற்றும் நெருப்புக்குரிய கைகள் நிறைய ரேகைகளுடன், குறைந்த தெளிவுடனும் காணப்படும் என்று குறிப்பிடப்படுகிறது.

ரேகைகள்[தொகு]

கைரேகை சாத்திரத்தின்படி கையில் இருக்கும் சில ரேகைகள் 1: ஆயுள் ரேகை - 2: தலை ரேகை - 3: இதய ரேகை - 4: வெள்ளியின் சுற்றுவட்டம் - 5: சூரிய ரேகை - 6: புதன் ரேகை - 7: விதி ரேகை

பின்வரும் மூன்று ரேகைகளும் பெரும்பாலும் எல்லாருடைய கைகளிலும் காணப்படும். கைரேகை பார்ப்பவர்களும் இந்த மூன்று ரேகைகளுக்கும் அதிக முக்கியம் அளிக்கிறார்கள்:

  • இதய ரேகை என்பது தான் கைரேகை பார்ப்பவரால் பார்க்கப்படும் முக்கிய ரேகைகளில் முதன்மையானதாக இருக்கிறது. இது விரல்களுக்கு அடியில் உள்ளங்கையின் மேற்புறம் காணப்படுகிறது. சில கைரேகை சாத்திரத்தில், இது நுனிவிரலுக்கு அடியில் உள்ளங்கையின் ஓரத்தில் இருந்து தொடங்கி கட்டை விரலை நோக்கி ஓடும் ரேகையாக இருக்கிறது; வேறு சில சாத்திரங்கள், விரல்களுக்கு அடியில் தொடங்கி உள்ளங்கையின் விளிம்பிற்கு வெளியே ஓடுவதை இதய ரேகையாக குறிப்பிடுகின்றன. இந்த ரேகையானது இதயம் தொடர்பான தெளிவான மற்றும் மறைமுகமான விஷயங்களைக் குறிப்பிடுவதாக கைரேகை பார்ப்பவர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும் இதயத்தின் ஆரோக்கியம் தொடர்பான பல்வேறு விஷயங்களுக்கும் அப்பாற்பட்டு, உணர்ச்சியைத் தாங்கும் திறன், காதல் உணர்வுகள், மன அழுத்தம், மற்றும் இன்பதுன்ப நிலைப்பாடு ஆகியவற்றையும் இது குறிப்பதாக நம்பப்படுகிறது.
  • கைரேகை பார்ப்பவர்களால் கூறப்படும் அடுத்த ரேகை, தலை ரேகையாகும் . இந்த ரேகை, சுட்டுவிரலின்கீழ் உள்ளங்கையின் ஓரத்தில் தொடங்கி, உள்ளங்கையின் வெளிப்புற விளிம்பிற்கு ஓடும். பொதுவாக, தொடக்கத்தில் தலை ரேகையானது ஆயுள் ரேகையுடன் இணையும். கல்வி, மற்றவர்களுடனான உறவுமுறை, புத்திசாலித்தனம் மற்றும் அறிவு தேடல் ஆகியவை உட்பட இது ஒருவரின் மனதையும், அது வேலை செய்யும் முறையையும் கணிப்பதாக பொதுவாக கைரேகை பார்ப்பவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
  • இறுதியாக, கைரேகை பார்ப்பவர்களால் ஒருவகையில் மிகவும் கருத்துவேறுபாடுகளைக் கொண்ட ரேகையான ஆயுள் ரேகை. இது கட்டைவிரலுக்கும் மேலே உள்ளங்கையின் விளிம்பில் இருந்து தொடங்கி, மணிக்கட்டை நோக்கி ஒரு வில்லைப் போல பயணிக்கிறது. இந்த ரேகை ஒருவரின் ஆயுளையும், உடல் ஆரோக்கியத்தையும் மற்றும் பொதுவான ஆரோக்கியத்தையும் குறிப்பதாக நம்பப்படுகிறது. இந்த ஆயுள்ரேகையானது, பேரழிவு நிகழ்வுகள், உடல் காயங்கள் மற்றும் இடமாற்றங்கள் உட்பட, முக்கியமான வாழ்க்கை மாற்றங்களைப் பிரதிபலிப்பதாக நம்பப்படுகிறது. ஒருவரின் ஆயுள்ரேகையின் நீளம் அவரின் வாழும் காலத்தோடு தொடர்புபட்டிருப்பதாக பொதுவாக கூறப்படுவதை நவீன கைரேகை சாத்திர நிபுணர்கள் நம்புவதில்லை.

மேலும் சில முக்கிய ரேகைகள் அல்லது மாறுபாடுகளில் பின்வருவன உள்ளடங்கும்:

  • ஒரு குரங்கு ரேகைமடிப்பு என்பது உணர்ச்சி, காரணகாரியம் ஆகிய இரண்டு சிறப்பார்ந்த முக்கியத்துவத்தை உள்ளடக்கி உள்ளது. அவற்றை இந்த ரேகையில் இருந்து மட்டும் தான் தெரிந்து கொள்ள முடியும். செய்ரோவின் கருத்துப்படி, ஓர் ஆழ்ந்த காரணத்தை இந்த ரேகை எடுத்துக்காட்டுகிறது. இது சுட்டு விரலுக்குக் கீழிலிருந்து தொடங்கி, சுண்டு விரலுக்குக் கீழே முனையில் பொதுவாக இதய ரேகை முடியும் இடத்தில் முடியும். இந்த ரேகையிலிருந்து கிளை ரேகைகள் எந்த திசையில் பிரிந்து செல்கின்றனவோ, அதற்கேற்ப இந்த ரேகை காட்டும் குறிப்புகளும் மாறும்.
  • விதி ரேகையானது, மணிக்கட்டிற்கு அருகில் உள்ளங்கையின் அடியிலிருந்து, நடுவிரலை நோக்கி உள்ளங்கையின் மையம் வழியாக மேலே ஓடும். கல்வி மற்றும் தொழில் சார்ந்த வெற்றிகள் மற்றும் தடைகள் உட்பட, இது ஒருவரின் வாழ்க்கையோடு மிகவும் தொடர்புபட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
கைரேகை சாத்திரத்தில் இருக்கும் மேடுகள் வியாழன், சனி, அப்போலோ புதன், செவ்வாய் நேர்மறை, செவ்வாய் எதிர்மறை, செவ்வாயின் சமவெளி, லூனா மேடு, நெப்டியூன் மேடு, சுக்கிர மேடு.[1]

பிற முக்கிய ரேகைகள்:

  • சூரிய ரேகை - இது விதி ரேகைக்கு இணையாக, மோதிர விரலின் கீழே இருக்கும். இது ஒருவருடைய புகழையும், இகழ்வையும் குறிப்பிட்டுக் காட்டும் என்று நம்பப்படுகிறது.
  • சுக்கிரனின் வட்டப்பாதை - இது சுண்டு விரலுக்கும், மோதிர விரலுக்கும் இடையில் தொடங்கி, மோதிர விரல் மற்றும் நடுவிரல்களுக்கு கீழே ஒரு கீற்று போல ஓடி, நடுவிரலுக்கும், சுட்டு விரலுக்கும் இடையில் முடிகிறது; இது அறிவு மற்றும் திறமை ஆகியவற்றோடு தொடர்புபட்டதாகக் கருதப்படுகிறது.
  • நட்பு ரேகைகள் - இது குறுகிய கிடைமட்ட ரேகைகள்யாகும். இது உள்ளங்கையின் விளிம்பில் இதய ரேகைக்கும், சுண்டு விரலின் கீழ் பகுதிக்கும் இடையில் காணப்படும்; நெருங்கிய உறவுகள், சிலநேரங்களில் காதல் உறவுகளைக் குறிப்பிட்டுக் காட்டும் என்று நம்பப்படுகிறது.
  • வெள்ளி ரேகை - இது மணிக்கட்டிற்கு அருகில் உள்ளங்கையின் கீழிலிருந்து, சுண்டு விரலை நோக்கி உள்ளங்கையின் மேல்நோக்கி ஓடுகிறது; தொடர்ச்சியான உடல்நல பிரச்சினைகள், வியாபார புத்திசாலித்தனம், அல்லது மற்றவர்களுடனான உறவுமுறை ஆகியவற்றைக் குறிப்பிட்டுக்காட்டும் என்று நம்பப்படுகிறது.
  • பயண ரேகைகள் - கிடைமட்ட ரேகைகளான இவை உள்ளங்கையின் புடைத்த விளிம்பில் மணிக்கட்டிற்கும், இதய ரேகைக்கும் இடையில் காணப்படுகிறது; ஒவ்வொரு ரேகையும் அந்த நபரால் மேற்கொள்ளப்படும் ஒரு பயணத்தைக் குறிப்பிடுவதாக கூறப்படுகிறது. இந்த ரேகை நீண்டிருந்தால், அந்த நபருக்கு மிகவும் முக்கியமான பயணம் அமையும் என்று கூறப்படுகிறது.
  • "அப்போலோ ரேகை" - அப்போலோ ரேகை என்பது அதிருஷ்ட வாழ்க்கையைக் குறிக்கிறது; இது மணிக்கட்டில் இருக்கும் சந்திர மேட்டில் இருந்து, மோதிர விரலுக்கு இடையில் பயணிக்கிறது.
  • "வட்ட ரேகை" - இது ஆயுள் ரேகையைக் கடந்து 'x' வடிவத்தை உருவாக்குகிறது; இது தீமையின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது; கைரேகை பார்க்க வருபவருக்குப் பிரச்சினையை உண்டாக்கும் என்பதால், கைரேகை பார்ப்பவர்கள் இந்த ரேகையைப் பொதுவாக குறிப்பிட்டு கூறுவதில்லை.

விஞ்ஞானமும், விமர்சனமும்[தொகு]

மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்கள், கைரேகை பார்ப்பவர்களைப் பொதுவாக ஏமாற்றுதாரிகளின் பட்டியலிலேயே கொண்டு வந்து சேர்க்கிறார்கள். இந்த ஏமாற்றுதாரிகள் மனதைப் படிக்கும் உத்தியைப் (cold reading) பயன்படுத்துவதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். மனதைப் படிக்கும் உத்தியானது, கைரேகை பார்ப்பவர்கள் உட்பட, உளவியலில் அனைவரும் பயன்படுத்தும் உத்தியாக மேற்கோளிட்டுக் காட்டப்படுகிறது.[2]

ஒருவரின் ஆயுள் அல்லது குணத்தின் அடிப்படையில், கைரேகை பார்ப்பவர்களை ஆதரித்து இதுவரை இந்த தீர்க்கமான தகவலும் கிடைக்கவில்லை.

மேலும் காண்க[தொகு]

  • அலெக்டொர்மேன்சி
  • ரேகையியல்
  • இலக்க வானொலி
  • ஒரேயொரு குறுக்கு உள்ளங்கை மடிப்பு
  • சிரோனோமியா - பாரம்பரிய பேச்சுக்களில் அல்லது பிரசாங்கத்தில் சிறந்த வெளிப்பாடுகளைக் கொண்டு வர முத்திரைகளை அல்லது கை சைகைகளைப் பயன்படுத்தும் கலை
  • கெய்டோனியன் கை
  • மண்டைஓட்டு வடிவமைப்பியல்

குறிப்புதவிகள்[தொகு]

  1. சாரா சிரோலி - கையின் கைரேகை வரைபடம்
  2. நம்பிக்கையின்மையில் டேவிட் வெர்னன் — போலிவிஞ்ஞானம் மற்றும் அசாதாரண உணர்வும் பற்றிய ஒரு கையேடு , தொகுப்பாளர்கள்: டோனால்டு லேகாக், டேவிட் வெர்னன், கோலென் க்ரோவெஸ், சைமன் பிரௌன், இமேஜ்கிராப்ட், கேன்பெர்ரா, 1989, ஐ.எஸ்.பி.என். 0-7316-5794-2, பக்கம், 44.

புற இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
chiromancy
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைரேகை_சாத்திரம்&oldid=3522805" இலிருந்து மீள்விக்கப்பட்டது