விக்கிப்பீடியா பேச்சு:ஆய்த எழுத்துப் பயன்பாட்டு வழிகாட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராம. கி அவர்கள் எழுதிய ஆய்தம் கட்டுரையில் இருந்து தமிழ் இலக்கணம் ஒப்பும் ஆய்த எழுத்துப் பயன்பாடு:

  1. ஆய்தம் சொல்லின் முதலில், கடையில் வராது. இடையில் மட்டுமே வரும்.
  2. ஆய்தத்துக்கு முன் குறில் எழுத்துகள் மட்டுமே வரலாம்.
  3. ஆய்தத்துக்குப் பின் வல்லின உயிர்மெய்கள் மட்டுமே வரலாம்.

இதனுடன் தமிழ் விக்கிப்பீடியா வழமையில் ஒப்பிடுகையில்:

  • f ஒலிக்குப் பதிலாக ஃப அல்லது ஃவ என்று எழுதுவது இரண்டுமே தவறு.
  • h க்குப் பதில் எல்லா இடங்களிலும் ஃக பயன்படுத்துவதும் தவறு. எடுத்துக்காட்டுக்கு, சாஹா = சாஃகா என்பது தவறு. ஃ முன்பு நெடில் வருவதால். --ரவி 10:07, 4 ஜூலை 2009 (UTC)

சிறந்த வழிகாட்டி. கடைசி விதிக்கு சில எடுத்துக்காட்டுகள் தரமுடியுமா?--Kanags \பேச்சு 11:29, 4 ஜூலை 2009 (UTC)


இந்த இடர்ப்பாடுகள் எல்லாம் தெரிந்துதான், நான் F என்பதைக் குறிக்க வகரத்துடன் ஒரு குறியீட்டைப் பயன்படுத்தப் பரிந்துரைத்தேன். இங்கு அது ஏற்கப்படாததால் பயன்படுத்தவில்லை.எந்த கிரந்தச் சிக்கலும் கூட வந்திருக்காது. நான் ஃவ என்று பரிந்துரைத்ததன் ஒரே காரணம் அவ்வொலி வகரத்தின் திரிபு என்பதால் (ஈரிதழ் பகரத்தின் திரிபு என்பதைக் காட்டிலும், கீழிதழ்-பல் ஒலியாகைய வகரத்தின் திரிபு எனக்கொள்ளுதல் பொருந்தும்) அப்படி எழுதினேன். மேலும் ஆய்தத்துக்குப் பின் (அடுத்து) நெடில் வராது என்னும் இராம. கி அவர்களின் கருத்து சரியானதல்ல. வெஃகாமை, அஃகாமை என்பன சரியான தமிழ்ச்சொற்கள். திருக்குறளில்,
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.

என்று வருவதை பாருங்கள்.--செல்வா 12:51, 4 ஜூலை 2009 (UTC)

மேலும் சில எடுத்துக்காட்டுகளும் தரலாம். அஃகேனம் என்று ஆய்த எழுத்துக்கு அடுத்து கே என்னும் நெடில் உள்ளது. ஆய்த எழுத்துக்கு முன் குறில்தான் இருக்க வேண்டும் என்னும் விதியைப் பற்றிப் பின்னர் கூறுகின்றேன்.--செல்வா 12:57, 4 ஜூலை 2009 (UTC)

செல்வா, ஆய்தத்துக்கு முன்பு தான் குறில் மட்டும் வரும் என்று இராம.கி சொல்லி உள்ளார். ஆய்தத்துக்குப் பின் வல்லினம் 6 வல்லினம் x 12 உயிர் =72 உயிர் மெய்களும் வரலாம். நான் எழுதியதில் புரிதல் பிழை இருந்தால் பொறுக்கவும். நீங்கள் வகரம் பரிந்துரைத்ததின் காரணம் அறிவோம். மொழியியல் அடிப்படையில் வகரம் நெருங்கிய ஒலி என்றாலும் தமிழ் மக்கள் பேச்சு வழக்கில் பகரம் கொண்டே ஒலிக்கிறார்கள். பேன் (fan), பிரண்டு (friend), போன், பிரான்சு போன்றவை சில எடுத்துக்காட்டுகள். இந்த மக்கள் வழக்கையும் கவனிக்க வேண்டும்.

கனகு, ஆய்தத்துக்குப் பின் வல்லின உயிர்மெய்கள் மட்டும் வருவதற்கான எடுத்துக்காட்டுகளைத் தேடித் தருகிறேன். --ரவி 17:32, 4 ஜூலை 2009 (UTC)

ஆம் நான் "முன்" என்னும் சொல்லைப் பிழையாக புரிந்துகொண்டேன். என் தவறுதான். தமிழில் "மா முன் நிறை", "விளம் முன் நேர்" என்றால் தேமா, புளிமா போன்ற மாச்சீரில் முடிந்து அதற்கு அடுத்து வரும் சீரில் நிறை அசையில் தொடங்க வேண்டும் என்பது பொருள். எனவே முன் என்பதற்கு "முன்னே" நிற்கும் (அடுத்து வரும்) என்று பொருள் கொண்டுவிட்டேன். தொல்காப்பிய விதிப்படி சட்டம், சட்டி, சங்கு, சடுதி முதலான சகரத்தில் தொடங்கும் சொற்களும் தவறு. அதாவது கூடிய மட்டிலும் தொல்காப்பியம் நன்னூல் விதிகளைப் பின் பற்றுதல் வேண்டும். காலத்துக்கு ஏற்றாற்போல சிறு சிறு மாற்றங்கள் செய்யலாம். ஆனால் அதற்காக அவரவர் கண்டபடியெல்லாம் மாற்றிக்கொண்டிருக்க விட்டால் மொழி சிதைந்து விடும். சகரத்தில் தொடங்கும் சொற்களை ஏற்றுக்கொண்டதால் எல்லா மாற்றங்களையும் ஏற்கவேண்டும் என்றில்லை. சாஃகா என்பது வேண்டாம் எனில் சாகா எனலாம் ஆனால் இதனை saagaa என்று ஒலித்தல் வேண்டும் (gaa என்பதில் சிறு காற்றொலி உண்டு ஆனால் haa அல்ல). சாகா என்பதையே ஒருசிலர் கூறுவதுபோல saahaa என்று ஒலிப்பதாகக் கொண்டால், பின்னர் saagaa என்பதை எப்படி எழுதுவது (எழுத முடியாதா?)? டாய்ட்சு என்று எழுதுவது தவறு எனவே இடாய்ட்சு என்று எழுதலாம். இதிலும் -ய்ட்- மெய்யொலிக்கூட்டம் தமிழில் வருமா எனத் தெரியவில்லை. அனுமான் என்பதை ஹனுமான் என்று எழுதுவதை விட அ'னுமான் என்று வேண்டுமானால் எழுதலாம் (எல்லா இடத்திலும் அல்ல, ஒரு சில இடங்களில் ஒலிப்பைக் காட்ட மட்டும்). அ',இ' முதலானவற்றை Ha, Hi என்றும் குறிக்கலாம். Hitler என்பதைப் பொது வழக்கில் இட்லர் என்று எழுதலாம், ஒலிப்புத்துல்லியம் காட்ட இ'ட்லர் என எழுதலாம். ஆனால் இங்கும் -ட்ல- என்னும் எழுத்துக் கூட்டம் தமிழில் வருமா? கூடாது அல்லவா? இட்லி என்பது தவறு அல்லவா? இட்டலி அல்லது இட்டிலி என்றுதானே எழுதுதல் வேண்டும். மார்ச் என்று மாதத்தை எழுதலாமா? மார்ச்சு என்று எழுத வேண்டும் அல்லவா(தேர்ச்சி என்னும் சொல்லி உள்ளது போல -ர்ச்- எழுத்துக்கூட்டல் ஏற்புடையதே). என் பரிந்துரைகள்
  • (1)புதிய எழுத்துகள் இல்லாமல் 2-3 குறியீடுகளைக் கொண்டு இந்திய மொழிகளில் வழங்கும் எல்லா ஒலிகளையும், அது தவிர வேறு சில ஒலிகளையும் குறிக்க இயலும்.
  • (2) வேற்று மொழிச் சொற்களுக்குத் தமிழ் எழுத்துகளால், தமிழில் வழங்காத சில எழுத்துக்கூட்டல்களை இடமறிந்து, சிறு திருத்தங்களுடன் வழங்கலாம் (எடுத்துக்காட்டு: இட்லர் (Hitler), கொலசுட்ரால் (cholestrol, இதனை கொலசுற்றால் என்றும் எழுதலாம் விதிகள் மீறாமல்), டாய்ட்சு அல்லது இடாய்ட்சு (-ய்ட்- கூட்டம், அல்லது டகர எழுத்தில் தொடங்குதல்)). இடாய்ட்சு என்னும் பொழுது இரண்டாவது எழுத்தாய் வரும் டகரம் இயல்பாய் D ஒலிப்பும் தரும். கஃசு என்னும் தமிழ்ச்சொல்லில் இருக்கும் (ஃசு) ஒலிப்பை ஆக்ஃசுபோர்டு போன்ற சொற்களில் வாழங்குவது பற்றி சிந்திக்கவேண்டும் (ஆய்தத்துக்கு "முன்னே" ககர மெய் இருப்பது வழக்கம் இல்லை என்பது வேறு தனியான செய்தி). தமிழில் மகிழ்ச்சி, வீழ்ச்சி ஆகிய சொற்கள் இருந்தாலும், உழ்சா போன்ற சொற்கள் கிடையாது (தமிழில் வழங்காது). தமிழில் -ழ்ச-, -ழ்சி- முதலானவை கிடையாது. ஆனால் sha என்னும் ஒலியை ஓரளவுக்கு நெருக்கமாகக் காட்ட உழ்சா, பிரெழ்சினேவ் என்று எழுதலாமா என்று சிந்தித்தல் வேண்டும். இன்னொரு எடுத்துக்காட்டு மார்ச் (சகர ஒற்றில் முடிதல்). தமிழ் இலக்கணப்படி பக்தி, சக்தி என்பன தவறானவை. பத்தி,சத்தி என்றுதான் எழுதுதல் வேண்டும் (தகரம் க் என்னும் ஒற்றுக்கு பின் வருதல் கூடாது).
  • (3) தமிழில் வழங்காத கடுமையான மெய்யொலிக்கூட்டங்களைப் பிரித்து இடையே உயிரொலி பெய்து எழுதுதல் வேண்டும். எடுத்துக்காட்டு Strontium என்பதை இசுட்ரான்சியம் எனலாம் (எசுப்பானிய மொழியில் இதனை Estroncio என்கின்றனர்).
    சுருக்கமாகச் சொன்னால், தமிழில் கிரந்தம் அறவே வேண்டாம். தமிழ் எழுத்துக்கூட்டல்களில், தேவை என்று உணர்ந்தால் சில சிறு மாற்றங்கள் (எழுத்துக்கூட்டல்கள், எழுத்துத் தொடக்கம், முடிவு முதலியவை) செய்யலாம். கடுமையான மெய்யொலிக்கூட்டங்களைத் தமிழில் பிரித்து எழுதுதல் வேண்டும்.--செல்வா 22:33, 4 ஜூலை 2009 (UTC)