விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மார்ச்சு 24, 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குமரிக்கண்டம் என்னும் பெரும் நிலப்பகுதி இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு. தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்த குமரிக்கண்டத்திலேயே தமிழர்கள் முதன்முதல் தோன்றினர் என எழுதியுள்ளனர். ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய குமரிக்கண்டம் கடல்கோளால் அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின், அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து. குமரிக்கண்டத்தின் தலைநகரான தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்ததென்பதும், அதனை அடுத்து மேலும் இரண்டு சங்கங்கள் இருந்தனவென்பதும் நூற்களின் தகவல்களாகும். கிடைக்கப்பெற்ற நூற்தகவல்களின் மூலம் உறுதியாகக் கூறமுடியாத அளவிற்குக் குமரிக்கண்டம் வெறும் கற்பனைக் கண்டமென்பது பலருடைய கருத்து. இக்குறிப்புகளில் எதுவும் அறிவியல் முறைப்படி நிறுவப்படவோ, மறுக்கப்படவோ இல்லை. இறையனார் அகப்பொருள் உரையில் கூறியுள்ளது உண்மையாக இருப்பின் தமிழர்களின் இலக்கிய காலம் சுமார் கி.மு 10,500 ஆண்டுகள் வரை செல்லும். மேலும்...


அம்பிகா சீனிவாசன் மலேசியாவில் சமய, சட்ட, பெண் உரிமைகளுக்காகப் போராடி வரும் சமூக நீதியாளர். பொதுத் தேர்தல்களில் நியாயமான, நேர்மையான ஒழுங்கு முறைகளைக் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று போராடி வரும் பெர்சே பேரணி அமைப்பின் தலைவர். மலேசிய வழக்கறிஞர்கள் கழகத்தின் தலைவர். 2009 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிறந்த துணிகரமிக்க பெண்மணிக்கான விருதைப் பெற்றவர். 2011 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டின் செவேலியர் விருதைப் பெற்றவர். அம்பிகா சீனிவாசன், மலேசியப் பெண்களிடம் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார். அவரின் பங்களிப்புகளையும் சேவைகளையும் அங்கீகரிக்கும் வகையில், உலகின் சில நாடுகள் அவருக்கு விருதுகளையும், சாதனைச் சின்னங்களையும் வழங்கிக் கௌரவித்து உள்ளன. அம்பிகா சீனிவாசன் ஆனந்த விகடன் வார இதழின் நிறுவனர் சீனிவாச அய்யாங்காரின் பேத்தியாவார். இவருடைய சமூக நீதிக் கோட்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்து, பல இலட்சம் மலேசியர்கள் இவர் பின்னணியில் செயல்பட்டு வருகின்றனர். மேலும்...