விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சனவரி 23, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிலைகொள் வேளாண்மை என்பது சூழலியல் மானிட வாழிடத்தையும், உணவுற்பத்தி முறைகளையும் ஒன்றிணைத்து வடிவமைக்கப்பட்ட வேளாண்மை முறை ஆகும். நிலைகொள் வேளாண்மை என்ற பதத்தினை முன்மொழிந்த ஆத்திரேலிய சூழலியலாளர் பில் மொலிசன், "நிலைகொள் விவசாயம் என்பது நிலைப்பேறான மானிடச் சுற்றாடல்களை உருவாக்குவதற்கான வடிவமைப்புத் தொகுதி" என்பார். இம்முறை ஏனைய மாற்றுப் பண்ணை முறைகளான சேதனப்பண்ணையாக்கம், நிலைப்பேறான வேளாண்மை, சூழல் வேளாண்மை ஆகியவற்றிலிருந்து தனித்துவமானது. இது தனித்தனி கொள்கைகளுக்குப் பதிலாக புவியைப் பராமரித்தல், மக்களைப் பராமரித்தல், மக்கள்தொகைக்கும் நுகர்வுக்குமான எல்லைகளை வகுத்தல் போன்ற முழுப் பூகோள சமூகத்தினதும் வாழ்விருப்பு பற்றிக் கருதுகிறது. உற்பத்தித் திறனுள்ள சூழல் தொகுதியை உருவாக்குவதிலும் மற்றும் பாழடைந்த சூழல் தொகுதியை மனித நிலைத்திருப்புக்கு மீளுருவாக்கம் செய்வதிலும் நிலைகொள் வேளாண்மை பயன்படும். வேதியியல் மாசாக்கத்தை ஏற்படுத்தும் பூச்சி மருந்துகளின் பயன்பாடற்ற சேதனப்பண்ணையாக்கத்தை நிலைகொள் வேளாண்மை மேம்படுத்துகின்றது. மேலும்..


யோசெப் நிசிபோர் நியெப்சு (1765-1833) என்ற பிரான்சியர் ஒளிப்படத்தைக் கண்டுபிடித்தவர் என்ற வகையிலும், ஒளிப்படவியல் துறையில் முன்னோடி என்ற வகையிலும் இவர் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவர். 1820களின் தொடக்கத்தில் உலகின் முதல் சில ஒளிப்படங்களை எடுத்தவர் என்ற வகையிலும் இவர் முக்கியமானவர். இவரது கண்டுபிடிபைப் போலவே இவரும் ஒரு புரட்சியாளர். எனினும், இன்றும் இவர் அதிகம் அறியப்பட்டவராக இல்லை. 1825 இல், ஒரு மனிதனையும் குதிரையொன்றையும் காட்டும் ஓவியம் ஒன்றை ஒளிப்படமாக எடுத்ததன் மூலம் இவர் ஒளிப்படமொன்றை எடுத்த உலகின் முதலாவது நபர் ஆனார். 1829 முதல் இவர் லூயிசு டாகுவேரே என்பவருடன் சேர்ந்து ஒளிப்பட வழிமுறைகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இவர்கள் இருவரும் பிசோட்டோவகை எனப்பட்ட ஒளிப்பட முறையொன்றை உருவாக்கினர். 1833 இல் நியேப்சு இறந்த பின்னர் டாகுவேரே தொடர்ந்தும் சோதனைகளில் ஈடுபட்டு டாகுவேரியோவகை என்ற புதிய முறையைக் கண்டுபிடித்து பிரான்சு அரசுக்கு விற்றார். நியெப்சு 1825 ஆம் ஆண்டில் எடுத்ததாகக் கருதப்படும் உலகின் முதல் ஒளிப்படம் 2002 இல் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு ஏலத்தில் 450,000 யூரோக்களுக்கு விற்கப்பட்டது. மேலும்..