விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 21, 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல்லவர் என்போர் தென்னிந்தியாவில் களப்பிரர்கள் வீழ்ச்சிக்குப் பிறகு கி.பி. 250 முதல் கி.பி. 850 வரை சுமார் அறுநூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள். இவர்கள் இலங்கையை அடுத்த மணிபல்லவத் தீவிலிருந்து வந்தவர்கள்; தொண்டை மண்டலத்துப் பழங்குடிகள்; பஹலவர்கள் என்னும் பாரசீக மரபினர் என்று பல்வேறு கருத்து வேற்றுமைகள் உண்டு. அவர்களைப் பற்றிக் கிடைத்துள்ள சான்று மூலங்களைக்கொண்டு, பட்ட முறைமையை முற்றும் முறைப்படுத்தவும் முடியவில்லை. 'வின்சென்ட் ஸ்மித்' என்னும் ஆங்கில வரலாற்றாசிரியர் தமது நூலின் முடிவாகப் பல்லவர் தென்னிந்தியரே என்று வரையறுத்துள்ளார். சாதவாகனப் பேரரசில் குறுநில மன்னர்களாகவும் ஆட்சியாளர்களாகவும் செயல்பட்டு வந்த இவர்கள் சாதவாகனப் பேரரசு வலுக்குன்றியதும் கிருஷ்ணா ஆற்றிற்குத் தெற்குப் பகுதியை ஆளத் தொடங்கினர். மேலும்...


இறுதி முற்றுகை என்பது சதுரங்கத்தில் (சதுரங்கக் குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய விளையாட்டுகளிலும்) ஒரு போட்டியாளரின் அரசன் கைப்பற்றப்படுவதற்கான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தும் அதிலிருந்து மீள முடியாத நிலை ஆகும். எளிமையாகக் கூறுவதானால், அரசன் நேரடித் தாக்குதலிலமைந்து, தான் கைப்பற்றப்படுவதைத் தடுக்க முடியாத நிலையில் அமைந்திருப்பதாகக் குறிப்பிட முடியும். சதுரங்கத்தில் இறுதி முற்றுகைக்காளாக்குவதே ஒரு சதுரங்கப் போட்டியாளரின் முக்கிய நோக்கம் ஆகும். இறுதி முற்றுகைக்காளாக்கப்பட்ட போட்டியாளர் போட்டியில் தோல்வியடைவார். பொதுவாக, சதுரங்கத்தில் அரசன் கைப்பற்றப்படுவதில்லை. அரசன் இறுதி முற்றுகைக்காளாக்கப்பட்டவுடனேயே போட்டி முடிவுறும். ஏனெனில், அரசன் இறுதி முற்றுகைக்காளாக்கப்பட்ட பிறகு அப்போட்டியாளரால் ஏற்றுக் கொள்ளக்கூடிய எந்தவொரு நகர்வையும் மேற்கொள்ள முடியாது. சில போட்டியாளர்கள் தோற்கப் போகிறோம் எனத் தெரிந்து இறுதி முற்றுகைக்காளாக்கப்பட முன்னரே போட்டியிலிருந்து விலகிக் கொள்வதுண்டு. மேலும்...