விக்கிப்பீடியா:தானியங்கிப் பயன்பாட்டுக் கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிப்பீடியாவில் தானியங்கிப் பயன்பாடுகள் கூடி வருவதை ஒட்டிய சில வழிகாட்டுதல்கள், பரிந்துரைகள். ஒரு முறை தானியங்கி அணுக்கம் கொடுத்த பிறகு, அத்தானியங்கியின் வழமையான பணிகள், புதிய தானியங்கித் தொகுப்புகளைப் பற்றி அறவே மறந்து விடுகிறோம் என்பதால் தானியங்கிகள் இயக்கம், அவற்றுக்கான ஒப்பம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் அவசியம்.

  • தானியங்கித் தொகுப்புகள் அதற்கென உள்ள தனி தானியங்கிப் பயனர் கணக்கில் இருந்தே செய்யப்பட வேண்டும். இது தானியக்கத் தொகுப்புகள் தளத்தில் நிகழ்வதைப் பிற பயனர்கள் அறிய உதவும். வழமையான பயனர் பெயர் கணக்குகளில் இருந்து தானியக்கப் பணிகளைப் பிறர் எதிர்ப்பார்ப்பதில்லை என்பதால், அக்கணக்குகளில் இருந்து மேற்கொள்ளப்படும் தொகுப்புகளைக் கண்காணிக்க இயலாமல் போய் விடுகிறது. புள்ளிவிவரக் கணக்குகளிலும் தானியக்கத் தொகுப்புகள் ஒரு பயனரின் தொகுப்புகளைக் கூட்டிக் காட்டுவதைத் தவிர்க்க உதவும். பயனர் பெயருக்கு அடுத்து BOT என்ற பின்னொட்டு இட்டு தனிக்கணக்கு தொடங்கப்படுவது நன்று. எடுத்துக்காட்டுக்கு user:sundar ஏவும் user:sundarBot. தானியக்கத் தொகுப்புகளில் AWB தொகுப்புகள், தனியே நிரல் எழுதிச் செய்யப்படும் தொகுப்புகள் அனைத்தும் அடங்கும்.
  • BOT பயனர் பக்கத்தில் யாரால் ஏவப்படுகிறது, என்னென்ன பணிகளைச் செய்கிறது என்பது விவரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • இவ்வாறு BOT பயனர் கணக்கு உருவாக்கப்பட்ட பிறகு, அதைக் கொண்டு சில சோதனை ஓட்டங்கள் செய்த பிறகு, Wikipedia:தானியங்கி அனுமதி பக்கத்தில் அனுமதி கோர வேண்டும்.
  • BOT அனுமதி பெற்ற பிறகு முன்னர் குறிப்பிடப்படாத ஏதேனும் புதிய பணிக்கு அத்தானியங்கியைப் பயன்படுத்தும் முன் Wikipedia பேச்சு:தானியங்கி அனுமதி, அத்தானியங்கியின் பேச்சுப் பக்கம், ஆலமரத்தடி ஆகியவற்றில் முறையான அறிவிப்புகளை இடவும். குறிப்பாக, பல பயனர்கள்-பல நூறு பக்கங்கள் தொடர்புடைய பெரும் அளவிலான புதிய உள்ளடக்க உருவாக்கம் / நீக்கம், தொடர் அறிவிப்புகள் போன்ற பணிகளைச் செய்யும் தானியங்கிகளுக்கு இவை முக்கியம்.
  • நீக்கல் பணிகளுக்கு தானியங்கிகளைப் பயன்படுத்துவது பரிந்துரைக்கத்தக்கது அல்ல. ஆக்க உருவாக்கம் மனித முறையில் நடப்பதால் அவற்றின் தரம், உள்ளடக்கம், தேவை ஆகியவற்றையும் மனித முறையில் சரி பார்த்து நீக்குவதே பொருத்தமாக இருக்கும். பெரும் அளவிலான பக்கங்களை இப்படி நீக்க வேண்டி வந்தால் இப்பக்கங்களில் தகுந்த வார்ப்புரு / பகுப்பு இட்டு அடையாளப்படுத்தி பிறர் உறுதி பார்க்க தகுந்த கால இடைவெளி தந்தே நீக்க வேண்டும். விக்கிப்பீடியாவை துப்புரவாக வைத்திருப்பது எவ்வளவு முக்கியமோ அதை விடப் பல மடங்கு முக்கியத்துவம் வாய்ந்தது - தவறுதலாக சரியான ஆக்கங்களை நீக்கி விடுவது.
  • ஆங்கில விக்கியில் ஒரு குறிப்பிட்ட பணிக்கு தானியங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன என்ற காரணத்துக்காக, தமிழ் விக்கியிலும் தகுந்த முன்னறிவிப்பின்றி அவற்றைப் பயன்படுத்துதல் ஆகாது.
  • பிற விக்கி திட்டங்களில் இருந்து ஏவி விடப்படும் தானியங்கிகள் அழித்தல், மாற்றுதல் வேலைகளைச் செய்கிறது எனில் அவற்றுக்கு தானியங்கி ஒப்பம் வழங்குவதில் அதிகாரிகள் கூடுதல் கவனம், முன்னெச்சரிக்கை செலுத்த வேண்டும். விக்கியிடை இணைப்புகளைச் சேர்க்கும் தானியங்கிகளுக்கு மட்டும் இளக்க அணுகுமுறை கொள்ளலாம்.