விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/விக்கியூடகத் திட்டங்கள்/விக்கிப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இணையப் பொதுவெளியில் மிகவும் புகழ்பெற்ற விக்கியாக விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் உள்ளது. இதனை ஜிம்மி வேல்ஸ் என்பாரும் லாரி சாங்கர் என்பாரும் இணைந்து 2001ஆம் ஆண்டு சனவரி 15 அன்று துவங்கினர். இதில் இருந்தே விக்கிமீடியாவின் விக்கிநூல்கள், விக்கி செய்திகள், விக்சனரி, விக்கிப் பொதுவகம், விக்கி மேற்கோள்கள், விக்கித் தரவு போன்ற பல செயற்திட்டங்கள் வளர்ச்சி பெற்றன.

விக்கி நுட்பத்தைப் பயன்படுத்தி 2001 ஆம் ஆண்டு ஆங்கில மொழியில் தொடங்கப்பட்ட விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் உலகின் பல பாகங்களில் இருந்தும் பயனர்களின் தன்னார்வப் பங்களிப்புக்களைப் பெற்று வேகமாக வளர்ச்சி பெறத் தொடங்கியது. தொடங்கிய சில மாதங்களிலேயே விக்கிப்பீடியா பிற மொழிகளிலும் உருவாக்கப்படலாயிற்று. 2003 இல் ஆங்கில விக்கிப்பீடியா 100,000 கட்டுரைகளைத் தாண்டியது. 2013 இல் 4 மில்லியன் கட்டுரைகளைத் தாண்டியது. விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தின் வெற்றியைத் தொடந்து அகராதி, பாட நூற்கள், பல்லூடகங்கள், தரவுகள் பிற நோக்கங்களுக்காகவும் விக்கிகள் தொடங்கப்பட்டன. இந்த எல்லாத் திட்டங்களும் பன்மொழித் திட்டங்கள் ஆகும்.

வரலாறு[தொகு]

1990 களுக்கு முன்பு பிரித்தானிகா கலைக்களஞ்சியம் (Encyclopaedia Britannica) என்பதே பொது அறிவுத் தொகுப்புக்கென்று உருவாக்கப்பட்ட தரமான கலைக்களஞ்சியமாக பயன்பாட்டில் இருந்தது. அது நேரடியாக துறைசார் வல்லுனர்களிடமும், தேர்ந்த தொகுப்பாளர்களாலும் பல வருடங்களாக தொகுக்கப்பட்டு அவ்வப்பொழுது இற்றைப்படுத்தப்பட்டு வந்த ஒரு கலைக்களஞ்சியம் ஆகும். ஆங்கிலத்திலேயே அதன் மூலப்பிரதி கிடைக்கும், தமிழில் கிடையாது. மேலும் ஏறக்குறைய 20 தொகுதிகளாக வெளிவந்த இதன் புத்தக கட்டுக்களும் $1000 இற்கு மேலே விற்கப்பட்டது. எனவே மிகவும் பணம் படைத்தவர்களாலேயே அப்பிரதிகளை வாங்க முடிந்தது. இந்நிலையில் என்கார்ட்டா போன்ற கணினி சார் குறுந்தகடுகளில் உருவாக்கப்பட்ட கலைக்களஞ்சியங்களின் வருகையால் பிரித்தானிகா கலைக்களஞ்சியம் சற்று ஆட்டம் கண்டது. 1993 ஆண்டில் உலகளாவிய இணைவலையின் வருகையும், அதனால் ஏற்பட்ட சமூக புரட்சியும் தகவல்களை தொகுப்பதிலும் பகிர்வதிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தன. ஆரம்பம் முதலே ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம் தொடர்பாக பலர் திட்டங்களை செயல்படுத்த முனைந்தனர். விக்கிபீடியாவே அவற்றுள் இந்தளவுக்கு வெற்றி கண்டது எனலாம்.

பெயர்க்காரணம்[தொகு]

உலகில் உள்ள எந்தப் பொருள் குறித்தும் முழுமையாகத் தெரிந்து கொள்ள உதவும் ஒரு புத்தகம் என்சைக்ளோபீடியா என்கிற கலைக்களஞ்சியம்தான். அகரமுதலி எனப்படும் அகராதிகளில் சொற்களுக்கான பொருள் தெரிந்தாலும், அதற்கான முழு விளக்கம் கலைக்களஞ்சியத்தில் தான் கிடைக்கும். இந்த கலைக்களஞ்சியத்தைப் போன்று முழு விளக்கத்தையும் இணைய வழியில் கொடுக்கும் முயற்சியில் தொடங்கப்பட்டதுதான் விக்கிப்பீடியா. அமெரிக்காவைச் சேர்ந்த 'ஜிம்மி வேல்ஸ்' மற்றும் தத்துவ ஆசிரியரான 'லாரி சாஞ்சர்' அடங்கிய குழுவினர் விக்கிப்பீடியாவைத் தொடங்கினர். ஹவாய் மொழியில் 'விக்கி' என்றால் 'விரைவு' என்று பொருள். என்சைக்ளோ பீடியா என்ற சொல்லிலிருந்து 'பீடியா' என்ற சொல் பெறப்பட்டது. எனவே இணையத்தில் தேடும் தரவுகளை விரைவாகத் தரும்வகையில் உருவாக்கப்பட்டதால் விக்கிப்பீடியா என்றானது.

தொடக்கம்[தொகு]

அறிவு சார்ந்த தகவல்களைப் பயன்பாட்டாளர்களுக்கு விரைவில் தரக் கூடியதாக உள்ளதால் விக்கிப்பீடியா என்கிற பெயரைத் தேர்வு செய்ததாகக் குறிப்பிடும் இவர்கள் 2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதியில் விக்கிப்பீடியாவைத் தொடங்கினர். விக்கிப்பீடியா அமைப்பு ஆங்கில மொழிக்கு அடுத்து 2001 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரெஞ்சு மொழியிலும், மே மாதம் ஜெர்மன் மொழியிலும் தனி விக்கிப்பீடியாக்களை உருவாக்கியது. பின்னர் விக்கிப்பீடியா தளத்தில் பிற மொழிகளில் ஆர்வமுடையவர்கள் அம்மொழிகளில் விக்கிப்பீடியாக்களை உருவாக்கிக் கொள்ளும் இடைமுக வசதிகளைச் செய்து கொடுத்தது. இவ்வசதிகளைப் பயன்படுத்தி உலகில் இணையம் பயன்படுத்தி வந்த பலரும் தங்கள் மொழிகளில் விக்கிப்பீடியாவைத் தொடங்கினர். விக்கிப்பீடியா, தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் இருந்து வரும் 285 மொழிகளில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்தியாவில் பயன்பாட்டிலுள்ள மொழிகளில் இந்தி, தெலுங்கு, தமிழ், மராத்தி, மலையாளம், குஜராத்தி, வங்காளம், உருது, கன்னடம், பீகாரி, ஒடியா (ஒரியா), காஷ்மீரி, சிந்தி, அசாமி, சமற்கிருதம், பஞ்சாபி போன்ற மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 2003 ஆம் ஆண்டில் விக்கிமீடியா பவுண்டேசன் என்கிற வணிக நோக்கமற்ற அமைப்பாகப் பதிவு செய்யப் பெற்று, அதன் மூலம் விக்கிப்பீடியா நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் விக்கிப்பீடியா[தொகு]

தொல்காப்பியம், திருக்குறள் போன்றவற்றை தமிழ் மரபின் அக்கால கலைக்களஞ்சியங்களாக கருதலாம். தமிழ் இலக்கியங்களிலும் பல பொருள் தரும் இலக்கிய வடிவங்கள் உண்டு. எனினும் அனைத்து தரப்பட்ட தகவல்களையும் தொகுத்து வகுத்துத் தர தமிழ் சூழலில், மரபில் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. 1900 களில் அபிதான சிந்தாமணி என்ற இலக்கிய கலைக்களஞ்சியம் ஒன்று வெளிவந்தது; அது பிற துறை சார் தகவல்களை பகிரவில்லை. தமிழ் விக்கிபீடியாவிற்கு முன்பு இணையத்தில் கலைக்களஞ்சியம் உருவாக்க இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது வெற்றியளிக்கவில்லை.

பலர் தமிழ் விக்கிபீடியா தொடங்கினால் நன்று என்று யாகூ குழுமங்களில் அலசிய சில அஞ்சல்கள் இணையத்தில் கிடைக்கின்றன. தமிழ் விக்கிப்பீடியா செப்டம்பர் 2003 அன்று தொடங்கப்பட்டது. (இணைய முகவரி: http://ta.wikipedia.org/) யார் முதலில் தமிழ் பக்கத்தை தொடங்கியர் என்று தெரியவில்லை. ஆனால் வளைகுடா நாடான அபுதாபியில் கட்டிடக் கலைப் பொறியாளராக இருந்து வரும் இலங்கைத் தமிழரான இ. மயூரநாதன் என்பவர் 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பப் பக்கங்களை அமைத்து, இடைவிடாது தொடர்ந்து பங்களித்து வருகின்றார். இவர் முதன் முதலில் தமிழ் மொழிக்கான விக்கிப்பீடியாவிற்கான முகப்புப் பக்கத்தை (முதற்பக்கம்) உருவாக்கினார். விக்கிப்பீடியாவிற்கும் அதன் இணைத் திட்டங்களுக்கும் தேவையான மீடியா விக்கி என்கிற மென்பொருளின் எல்லாப் பக்கங்களுக்கும் உரிய இடைமுகத்துக்கும் தேவையான தகவல்கள் அனைத்தையும் இவர்தான் தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார். அதன் பிறகு இவர் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பல கட்டுரைகளை உருவாக்கி உலகத் தமிழர்கள் பலரின் கவனத்தையும் தமிழ் விக்கிப்பீடியாவின் பக்கம் கொண்டு வந்தார்.

வளர்ச்சி[தொகு]

இன்று தமிழ் மொழியிலான விக்கிப்பீடியா 55,600 க்கும் மேற்பட்ட கட்டுரைகளுடன் உலகின் அனைத்து மொழிகளுக்கான விக்கிப்பீடியாக்களின் பட்டியலில் 48 வது இடத்திலும், இந்திய மொழிகளுக்கான விக்கிப்பீடியாக்களின் பட்டியலில் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. இன்று 300 தொடர் பங்களிப்பாளர்களைக் கொண்டு விக்கிப்பீடியா மிளிர்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் புது பயனர்கள் இணைகின்றார்கள், தமிழ் விக்கிபீடியாவின் வளர்ச்சி வேகம் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், வட அமெரிக்கா என்று அனைத்து பாகங்களில் வாழும் தமிழ் அன்பர்கள் பங்களிக்கின்றார்கள்.

பயன்பாடு[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் பயன்பாடு உலகளாவிய அளவில் பரந்துபட்டதாகும். மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், போட்டித் தேர்வு எழுதுபவர்கள், பொது மக்கள் போன்றோர் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துகின்றனர். இணையத்தில் தகவல்களைத் திரட்டித் தரும் வலைப்பதிவுகள் விக்கிபீடியாவின் கட்டுரைகளை வெளியிடுகின்றன. வானொலி நிலையங்கள், தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் 'இன்று ஒரு தகவல்' போன்ற தகவல்களுக்காக விக்கிப்பீடியாவையே நாடுகின்றன. மேலும் கூகுள் தேடலில் விக்கிப்பீடியா கட்டுரைகள் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம்பெற்றுவிடுகின்றன. தமிழ் நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள சமச்சீர் கல்வி பாடத்திட்டங்களில் விக்கிப்பீடியா தளத்தைப் பார்வையிடுமாறு மேற்கோள்களாகச் சுட்டப்பட்டுள்ளது. அனைத்து துறை சார்ந்த தகவல்களையும் உள்ளடக்கியுள்ளதால் விக்கிப்பீடியாவின் பயன்பாடும் வளர்ச்சியுற்றே வருகிறது எனலாம்.

2006ல், டைம் சஞ்சிகை, உலகளாவிய ரீதியில் இணைய மக்கள் கூட்டுப் பங்களிப்பின் துரித வளர்ச்சிக்கு யூ டியூப், மை ஸ்பேஸ் மற்றும் முகநூல் (ஃபேஸ்புக்) ஆகியவற்றுக்கு மேலதிகமாக விக்கிப்பீடியாவினது பங்களிப்பை குறிப்பிட்டுள்ளது. விக்கிப்பீடியா ஒரு செய்தி ஊடகமாகவும் குறிப்பிடப்படுகிறது. இதற்குக் காரணம், முக்கிய செய்திகள் தொடர்பான கட்டுரைகள் அடிக்கடி இற்றைப்படுத்தப்படுவதேயாகும். நேச்சர் இதழ் மூலம் 2005ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம், இதிலுள்ள விஞ்ஞானக் கட்டுரைகள் பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் கட்டுரைகளைப் போல் துல்லியத்தன்மை கொண்டன எனக் கண்டறியப்பட்டது.

செப்டம்பர் 2013 வரையில், விக்கிப்பீடியா 285 மொழிகளில் செயற்படுகிறது. இது இணையத்தளத்தில் இயங்கும் உசாத்துணைப் பகுதிகளிலேயே மிகவும் பெரியதும் அதிக புகழ்பெற்றதுமாகும். மேலும், இது அலெக்சா இணையத்தளத்தில் காணப்படும் இணையத்தளங்களின் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ளதோடு, உலகளாவிய ரீதியில் அண்ணளவாக 365 மில்லியன் வாசகர்களையும் கொண்டுள்ளது.