மூவர்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூவர்கோட்டை தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில், மன்னார்குடி வட்டத்தில் அமைந்துள்ளது. இது திருவாரூரில் இருந்து 31.9 கிலோமீட்டர் தொலைவிலும்,மூவர்கோட்டை நீடாமங்கலம் ஒன்றியத்தில் இருந்து 10.5 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழகத்தின் தலைநகரான சென்னையிலிருந்து 277 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

தொழில் முயற்சிகள்[தொகு]

மூவர்கோட்டையில் வேளாண்மைத் தொழில் முதன்மையான தொழிலாக செய்யப்படுகிறது. அதற்கடுத்தாற்படி மீன் வளர்ப்பும், மீன்பிடி தொழிலும் ஆறுகள் குளங்களில் செய்யப்படுகிறன. வேளாண்மைத் தொழிலுக்கு வடவாற்று பாசனத்தையே பெருமளவில் பயன்படுத்துகிறார்கள். அடுத்தாற்போல் ஆழ்குழாய் கிணற்றுப்பாசனமும் செய்யப்படுகிறது. பெருமளவில் நெற் பயிறும், ஆலைக் கரும்பும், கோடைப் பயிராக வேர்கடலையும் பயிரிடப்படுகிறது.

ஆறுகள்[தொகு]

மூவர்கோட்டையின் மேற்கில் வடவாறு ஓடுகிறது, அந்த ஆறானது தெற்கில் திரும்பி கிழக்கு நோக்கி வடுவூர் வழியாக ஓடுகிறது. இவ்வாற்றின் கிளை ஆறுகளாக இலுப்படி வாய்க்கால், செட்டிவாய்க்கால், வடிவாய்க்கால், காட்டு வாய்க்கால் என பிரிந்து மூவர்கோட்டையை வளப்படுத்துகிறது. மூவர்கோட்டையின் நடுவில் எல்.எப் குட்டை ஒன்றும், வயல் வெளியில் பெரிய குளம் ஒன்றும், பெரியகுளம் அருகில் இடுகாடும் அமைந்துள்ளது.

கோயில்கள்[தொகு]

மூவர்கோட்டையில் ஆணைமேல் அழகையனார் கோயில் ஒன்று இருக்கிறது. இந்த கோயில் மூவர்கோட்டை ஊர் மக்களின் மிக முக்கிய கோயிலாகும். இந்த கோயில் சித்திரை பவுர்ணமி அன்று காவடியாட்டம், பால்குடம், அன்னதானம், மொட்டைபோட்டுக்கொள்ளுதல், கலை நிகழ்ச்சிகள் என விழாக்கோலம் பூண்டிருக்கும். வெளியூர்களில் வசிக்கும் மூவர்கோட்டையை சேர்ந்த ஊர் மக்கள் ஒன்றுகூடும் நாளாகவும் இந்த கோயில் திருவிழா அமைந்திருக்கின்றது.

அய்யனார் கோயிலுக்கருகில் பிடாரி அம்மன் கோயிலும், அய்யனார் கோயில் நேர் மேற்கில் வீரனார் கோயிலும் அமைந்துள்ளது. மூவர்கோட்டையின் ஊருக்குள் மேற்கில் காத்தாயி அம்மன் கோயிலும் ஒன்றும், வடக்கில் பிள்ளையார் கோயிலும் ஒன்றும், கிழக்கில் சிவன் கோயிலும் ஒன்றும் காமாச்சி அம்மன் மேடும் அமைந்துள்ளது. தெற்கில் காத்தாயி அம்மனுக்கு புதிய கோயிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

கல்விச்சாலைகள்[தொகு]

மூவர்கோட்டையின் தெற்கில் எட்டாம் வகுப்பு வரையிலான ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப் பள்ளியும், மேற்கில் நியாயவிலை கூட்டுறவு பண்டகசாலையும், வடவாற்றாங்கரையில் பொதுப்பணித்துறை அலுவலகமும், வடக்கில் நேரடி நெல் கொள்முதல் நிலையமும், ஊரின் நடுப்பகுதியில் நூலகமும், வடுவூர் அஞ்சல் நிலையத்தின் கிளை அஞ்சலகம் ஒன்றும், அய்யா தந்தை பெரியார் சிலையும், அதன் அருகில் ஊராட்சி அலுவலகமும் அமைந்திருப்பது மூவர்கோட்டையின் சிறப்பாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூவர்கோட்டை&oldid=1281018" இலிருந்து மீள்விக்கப்பட்டது