மாக்சிம் கார்க்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாக்சிம் கார்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மாக்சிம் கார்க்கி
மாக்சிம் கார்க்கி, ஏறக்குறைய 1906
மாக்சிம் கார்க்கி, ஏறக்குறைய 1906
பிறப்புஅலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ்
March 28 [யூ.நா. March 16] 1868
உருசியா
இறப்பு(1936-06-18)சூன் 18, 1936 (வயது 68)
மாசுகோ, உருசியா
புனைபெயர்மாக்சிம் கார்க்கி
தொழில்எழுத்தாளர், கவிஞர், அரசியல்வாதி
தேசியம்உருசியா
வகைபுதினம், நாடகம்
கையொப்பம்

மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் (உருசியம்: Алексе́й Макси́мович Пешко́в; 28 மார்ச் [யூ.நா. 16 மார்ச்] 1868 – 18 சூன் 1936) உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி.[1] இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார்.

வாழ்க்கை[தொகு]

மாக்சிம் கார்க்கி குருசியாவில் நிஜினி நவ்கரோட் என்ற ஊரில் ஏழ்மையான குடும்பத்தில் 1868இல் பிறந்தார். இயற்பெயர் அலெக்சி மாக்சிமோவிச் பெஷ்கோவ். இவருடைய 5 ஆவது வயதில் வயதில் தந்தை இறந்தார். தந்தையார் ஒரு தச்சர். தாயின் ஆதரவும் இல்லாத இவரை இவரின் பாட்டிதான் வளர்த்தார். 1879 இல் இவருடைய தாய் இறந்தார்.

வறுமை காரணமாக பள்ளிப் படிப்பு அவ்வளவாக கிடைக்கவில்லை. 8 வயதிலேயே வேலைக்குச் சென்றார். வேலை செய்துகொண்டே தானாகவே முயன்று கல்வி கற்றார். உருசிய, பிரெஞ்சு, இத்தாலி, ஆங்கிலம், செருமனி ஆகிய மொழிகளைக் கற்றார்.

வாழ்க்கைத் துணைவி[தொகு]

1896ஆம் ஆண்டு அச்சுப்பிழை திருத்துவதில் துணைவராக இருந்த ஏகடரினா பவ்லோவ்னா வால்ழினா என்னும் பெண்மணியை வாழ்க்கைத் துணைவியாக கார்க்கி தேர்ந்தெடுத்தார். நல்ல இலக்கியவாதியான ஏகடரினா பவ்லோவ்னா வால்ழினா என்னும் வாழ்க்கைத் துணைவி என்னும் இதழில் அச்சுப்பிழை திருத்துபவராக திருமணத்திற்கு முன் பணி செய்தவர்.

தொழில்கள்[தொகு]

கார்க்கி சிறு பையனாக இருந்தபோதே பல பணிகளைச் செய்ய வேண்டியவர் ஆனார். முதலில் காலணிகள் உற்பத்தி தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். ஓராண்டுக்குப் பிறகு கட்டட ஒப்பந்ததாரரிடம் வேலை செய்தார். வேலை கடினமாக இருந்ததால் தப்பியோடி டோப்ரி என்னும் பயணக் கப்பலில் வேலைக்குச் சேர்ந்தார் [2]

புத்தக வாசிப்பு[தொகு]

கார்க்கிக்கு அவர் பணிபுரிந்த டோப்ரி என்னும் பயணக் கப்பலில் சமையல்காரராக இருந்த மிகைல் அகிமோவிச் என்பவர் புத்தகங்கள் படிப்பதற்கு ஆர்வம் ஊட்டினார். கோகோல், ஹென்றி பீல்டிங் முதலான நாவலாசிரியர்கள் அறிமுகமானார்கள். இதற்குப் பின் டுமாஸ், டெர்ரெல்கெஸ்டாவ், மாண்டிபன், லெர்மான்டொவ், தாஸ்தாவெஸ்கி, டால்ஸ்டாய், துர்க்கனேவ், டிக்கனஸ், ஆண்டான் செகாவ் முதலானோரின் படைப்புகளை சிறிது காலத்திலேயே படித்து முடித்தார். இலக்கிய வாசிப்பு படிப்பு பயிற்சி அவருடைய அறிவை கூராக்கியது. சிந்தனையை விரிவாக்கியது. அவரும் எழுதத் தொடங்கினார்[3].

நட்பு[தொகு]

அமெரிக்காவில் கார்க்கி இலக்கிய வரலாற்று மேதை எச்.சி.வெல்ஸ், ஏர்னஸ்ட் ரூதர்போர்டு, மெய்யியல் வல்லுநர் வில்லலியம் ஜேம்ஸ் ஆகியோரின் நட்பைப் பெற்றார்.

எழுத்துப்பணிகள்[தொகு]

எந்நேரமும் குறிப்பேடு வைத்திருப்பார். தனக்குத் தோன்றுவதை அதில் எழுதுவார். 1892-ல் இவரது முதல் சிறுகதையான ‘மகர் சுத்ரா’ (Makar Chudra) வெளிவந்தது. மாக்சிம் கார்க்கி என்ற பெயரில் தொடர்ந்து எழுதிவந்தார். கார்க்கி என்ற சொல்லுக்கு கசப்பு என்பது பொருள்[4]

1898-ல் ‘ஸ்கெட்சஸ் அண்ட் ஸ்டோரீஸ்’ வெளிவந்தது. 1899-ல் முதல் நாவலும், 1902-ல் ‘தி லோயர் டெப்த்ஸ்’ என்ற நாடகமும் வெளிவந்தன. இவரது உலகப் புகழ்பெற்ற ‘மதர்’ (தாய்) புதினம் 1906-ல் வெளிவந்தது. 1906ஆம் ஆண்டு டிசம்பரில் நியூயார்க்கிலிருந்து வெளியாகும் 'ஆப்பிள்டன்' இதழில் தாய் முதற்பகுதியின் முன்பாகமும் 1907ஆம் ஆண்டு தாய் முழுவதும் வெளிவந்தன. இந்நூல் முதலில் வெளிவந்தது அமெரிக்காவில்தான். கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்வது, அதிகார வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவை இவரது எழுத்துகளின் அடிநாதமாகத் திகழ்ந்தன. இதனால் அரசின் கோபத்துக்கு ஆளானார். பலமுறை கைது செய்யப்பட்டார். இவரது படைப்புகள் கடும் தணிக்கையை எதிர்கொண்டன.

பல கவிதைகள் எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார். அபார நினைவாற்றல் படைத்தவர். எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார். சிறிய சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.

பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். இவர் படைத்த தாய் (புதினம்) ’ (மதர்) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது. இது 200 முறைக்கு மேல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ரோமெய்ன் ரோலன்டு கடிதம்[தொகு]

தாய் புதினம் பற்றி ரோமன் ரோலண்ட் வரைந்த கடிதம்:- பனிக்காலம் கழிந்து இளவேனிற்காலம் மணம் பரப்ப தொடங்கிய தருணத்தில் இரவுபகல் சமமாகும் நாள் நெருங்கும் நீர் பிறந்தீர். பழைய உலகம் மறைந்து சூறாவளிகளை வென்று புறம் கண்டு புத்துலகம் பூத்தது. இறக்கம் இல்லா கொடுமை பல்கிப் பெருகிய காலம் இக்காலம். இக்காலத்தின் குறியீடாக, அடையாளமாக, தற்செயலாக பிறந்து உள்ளீர். பழைய உலகையும் புதிய உலகையும் தழுவி நிற்கும் வில்வளைவு போன்றவர் நீர். அந்த வளைவை பாராட்டுகிறேன். பயணம் செய்யும் நெடுவழியில் அவ்வளைவு ஆளுமை செலுத்துகிறது. நமக்குப் பின் வழிவழி திரண்டு வரும் மக்கள் பல்லாண்டுகள் அவ்வளைவை பார்த்துவிட்டுத்தான் கடந்து நடக்க வேண்டியிருக்கும். இவ்வாறு ரோமன் ரோலண்ட் வரைந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்

சந்திப்புகளும் சுற்றுப்பயணமும்[தொகு]

1889-ஆம் ஆண்டு மாஸ்கோ சென்று லியோ டால்ஸ்டாயை சந்திக்க முடியாமல் திரும்பினார். கொரலென்கோ என்னும் புகழ்மிக்க எழுத்தாளரரைச் சந்தித்து தாம் எழுதிய கவிதையை பரிசீலிக்க தந்தார். 1891 ஆம் ஆண்டு ரஷ்ய நாடு முழுவதும் முக்கிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வந்தார். 1900ஆம் ஆண்டு லியோ டால்ஸ்டாயை சந்தித்து கருத்து பரிமாறிக் கொண்டார்

அரசியல் ஈடுபாடு[தொகு]

இரஷ்ய சோஷலிச ஜனநாயக தொழிலாளர் கட்சிக்கு நிதியுதவி அளித்துவந்தார். ரஷ்யப் புரட்சி இயக்கத்துக்கு நிதி திரட்ட பல நாடுகளுக்குச் சென்றார். உலகம் முழுவதும் உள்ள சிறந்த எழுத்தாளர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.

தற்கொலை முயற்சி[தொகு]

கார்க்கி தன் வாழ்க்கையில் நேரிட்ட துன்ப துயரங்களையும் இழிவுகளையும் நினைத்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார். உடலில் குண்டு பாய்ந்தும் பிழைத்துக் கொண்டார் [5]

மறைவு[தொகு]

இவரது எழுத்துகளின் தாக்கம் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான எழுத்தாளர்களிடம் காணப்படுகிறது. சோஷலிஸ யதார்த்த இலக்கியத்தின் பிதாமகரும் பல அமர இலக்கியங்களைப் படைத்தவருமான மாக்சிம் கார்க்கி 68 வயதில் (1936) மறைந்தார்.

உசாத்துணை[தொகு]

  1. "Maksim Gorki". Kuusankoski City Library, Finland. Archived from the original on 2009-07-06. பார்க்கப்பட்ட நாள் 2009-07-21.
  2. தாய் நாவல்-மாக்சீம் கார்க்கி- தமிழாக்கம்: தொ.மு.சி ரகுநாதன்- வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் - N.C.B.H. முதல் பதிப்பு மே 2003
  3. தாய் நாவல்-மாக்சீம் கார்க்கி- தமிழாக்கம்: தொ.மு.சி ரகுநாதன்- வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் - N.C.B.H. முதல் பதிப்பு மே 2003
  4. தாய் -மக்சீம் கார்க்கி - மக்சிம் கார்க்கி வாழ்க்கைக்குறிப்பு - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - N.C.B.H. முதல் பதிப்பு மே 2003
  5. தாய் நாவல்-மாக்சீம் கார்க்கி]]- தமிழாக்கம்: தொ.மு.சி ரகுநாதன்- வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் - N.C.B.H. முதல் பதிப்பு மே 2003

வெளி இணைப்புகள்[தொகு]

பொதுவகத்தில் மேக்சிம் கார்க்கி பற்றிய ஊடகங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாக்சிம்_கார்க்கி&oldid=3567027" இலிருந்து மீள்விக்கப்பட்டது