பேச்சு:பண்பாட்டு மானிடவியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமூக மானிடவியல் அல்லது சமூக பண்பாட்டு மானிடவியல் என்றும் அழைக்கப்படுகின்ற பண்பாட்டு மானிடவியல், மனித இனம் பற்றி முழுதளாவிய முறையில் ஆய்வு செய்யும் மானிடவியல் துறையின் நான்கு பிரிவுகளுள் ஒன்று. பண்பாடு என்பதை ஒரு அறிவியல் கருத்துருவாக உருவாக்கி வளர்த்தது பண்பாட்டு மானிடவியலே. இது மனிதர்களுக்குள் காணப்படும் பண்பாட்டு வேறுபாடுகளையும் ஆய்வு செய்கின்றது. முற்கால மேற்கத்திய நாடுகளில், பண்பாடு, இயற்கை நிலை என்னும் இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவையாகக் கருதப்பட்டன. ஓரளவுக்கு, இத்தகைய ஒரு எண்ணப் போக்குக்குக்கான எதிர் விளைவாகவே மானிடவியலின் பண்பாடு பற்றிய கருத்துரு வெளிப்படுகிறது எனலாம். முற்காலத்து மேற்கத்திய கருத்துக்கு அமைய, சில மனிதர்கள், பண்பாட்டு நிலைக்குக் கீழான, இயற்கை நிலையில் வாழ்வதாகக் கருதப்பட்டது. மானிடவியலாளர்களோ இதற்கு மாறாக, பண்பாடு என்பது மனிதனுடைய இயல்பு நிலையே என வாதிட்டனர். எல்லா மக்களும், தங்கள் அனுபவங்களை வகைப்படுத்துவதிலும், அத்தகைய வகைப்பாடுகளைக் குறியீடாக்குவதிலும், அத்தகைய குறியீட்டு வடிவங்களைப் பிறருக்குக் கற்பிப்பதிலும் திறமையானவர்களாக இருக்கின்றார்கள் என அவர்கள் கூறினர்.

மனிதர்கள் கற்பதன் மூலமே பண்பாட்டைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதால், வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சூழ்நிலைகளில் வாழ்பவர்கள் வெவ்வேறு வகையான பண்பாடுகளை வளர்த்துக் கொள்ள முடியும். பண்பாட்டின் மூலம், பரம்பரையியல் முறைகள் சாராமல், சூழ்நிலைக்கு ஒப்ப மனிதர்கள் மாறிக்கொள்ள முடியும் எனவும், மானிடவியலாளர் சுட்டிக் காட்டுகின்றனர்.